Published:Updated:

அந்த சைரனை சைலன்ட் மோடில் போடுங்க ப்ளீஸ்!

ஆம்புலன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி

அந்த சைரனை சைலன்ட் மோடில் போடுங்க ப்ளீஸ்!

ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி

Published:Updated:
ஆம்புலன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆம்புலன்ஸ்

இந்தக் கொரோனா காலத்தில் ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி ஒருபுறம் கேட்பவர்களை எல்லாம் கலவரப் படுத்திக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மழையோ, வெயிலோ, திங்களோ, வெள்ளியோ எல்லா காலங்களிலும், நாள் களிலும் வீடுதோறும் குடும்பத் தலைவி களின் மண்டைக்குள் ஒலிக்கும் சைரன், லாக்டௌனில் டெசிபல் கூடிக்கொண்டே வருகிறது.

ஆம் தோழிகளே... கொரோனா அச்சுறுத்தும் லாக்டௌன் சூழலில் குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகளாக இருந்தாலும், வேலை மற்றும் குடும்பத் தலைவி என்கிற இரட்டை ரோல் செய்பவர்களாக இருந்தாலும் அத்தனை பெண்களின் மண்டைக்குள் ஓயாமல் ஒலிக்கும் ‘அடுத்து செய்ய வேண்டிய வேலை என்ன?’ எனும் சைரன் சத்தம் பற்றித்தான் சொல்கிறேன். இது சென்ற வருட லாக் டௌனின்போதே தொடங்கிய பிரச்னை தான். இப்போது தீவிர நிலைக்குச் சென்று கொண்டிருப்பதால், தோழிகளுக்குச் சில வார்த்தைகள்...

அந்த சைரனை சைலன்ட் மோடில் போடுங்க ப்ளீஸ்!

விடிகாலையில் அலாரம் அடித்து எழும் நொடி முதல், இரவு அலாரம் வைத்து உறங்கப்போவது வரை நம் மண்டைக்குள் தான் நமக்கு மாத்திரமே கேட்கும்படியான எத்தனை சைரன்கள்...

காபி, சிற்றுண்டி, மதிய உணவு, மீண்டும் சாயங்கால காபி, டீ , நொறுக்கு, இரவு உணவு என மூச்சை அமிழ்த்தும் தொடர்வேலைகள். இதற்கிடையில் குழந்தைகள் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது உள்ளிட்ட பிற வேலைகள் என 3X ஆக்‌ஷன் மோடுலேயே நம்மை நாம் வைத்திருக் கிறோம்.

அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழி ஜனார்த்தனி சொன்னது இன்னும் கொடுமை. அலுவலக வேலை, குழந்தை கள் என எல்லாவற்றையும் பார்த்து, இரவு உணவு முடித்த, பின் அயற்சியால் உறங்கலாம் எனப் படுத்தவர், கிச்சன் சிங்கில் சிதறிக்கிடந்த தேய்க்காத பாத்திரங்களின் நினைவு வர மீண்டும் எழுந்து பாத்திரங்களைத் தேய்த்து முடித்த பின் உறங்கப் போனாராம். இதை அவர் செய்தபோது, இரவு மணி 12.

மற்றொரு தோழி ஒருத்தி யுடன் பேசிக்கொண்டிருந்த போது, இரண்டாம் லாக் டௌன் அதிக அயர்வைத் தருவதாகச் சொன்னாள். “பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டால் பாடம் சொல்லிக் கொடுத்த நேரம் மிஞ்சும், நமக்கு டைம் கிடைக்கு மோன்னு நினைச்சேன். ஆனா, இப்போ 3 முதல் 4 மணி நேரம் அவனுக்குக் கூடுதலா ப்ரீயா இருக்குன்னு, என்னைத்தான் நாடுறான். சில நேரம் சமாளிக்க முடியல. குழந்தைக்கான என் நேரத்தை அவன் கேட்கும்போது அவனுக்குக் கொடுக்க முடிய லைங்குறது குற்றவுணர்வா இருக்கு” என உடைந்தாள்.

நம் பெண் இனத்தின் பெரும் பலவீனமே இந்தக் குற்ற உணர்வுதான் தோழிகளே. சாப்பிட்ட இடத்தை விட்டு சற்றும் நகராமல் தட்டிலேயே கையைக் கழுவி, உண்ட கையோடு செல்போனில் மூழ்கும் ஆண்கள் யாருமே இதுபோன்ற எவ்விதக் குற்றவுணர்வுக்கும் தங்களைக் காவு கொடுப்பதில்லை. முடிந்த வரையில் எல்லாவற்றையும் திறம்படச் செய்த பின்னும், அம்மா, மனைவி, மருமகள், மகள் போன்ற பல கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் நாம் மட்டுமே, ‘அதை இன்னும் பெட்டரா செய்திருக்கலாமோ?’ என நினைத்து நம்மை நாமே வருத்திக்கொள்கிறோம்.

மற்றொரு தோழி பிருந்தாவோ, வீடியோ காலில் பேசியபோது, கட்டிலில் குவிந்திருக்கும் துவைத்த துணிகளை ஏன் இன்னும் மடிக்க வில்லை என்று தன் அம்மாவே தன்னைத் திட்டியதாகச் சொல்லி வருந்தினாள். `மாமனார் க்வாரன்டீன்ல தனி ரூம்ல இருக்கார். அவருக்கு வேண்டியதைப் பார்த்து, டிஸ்இன்ஃபெக்ட் வேலைகளை முடிச்சு, லாக்டௌனால ஹெல்ப்பர் வராததால சமையல், க்ளீனிங் வேலைனு சுழன்று... இவ்வளவு செஞ்சதைப் பாராட்டா விட்டாலும், செய்யாமல்விட்ட ஒன்றை மாத்திரம் சொல்லிக் காட்டுவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேவினாள். மேலும் உச்சமாக, ‘இப்ப என்கூட பேசியபடியே துணியையும் மடிக்கலாம்ல...' எனக் கேட்டாராம் அவளின் அம்மா. `துணி மடிக்காம இருக்குறது அவ்வளவு பெரிய தவறா...' என்றாள் தோழி.

`தவறில்லை' என்றேன் அழுத்தமாக.

 ஓரிரு நாள்கள் துவைத்த துணிகள் மடிக்காமல் இருந்தாலும்...

 புழக்கடையில் தேய்க்கப்படாத பாத்திரங்கள் குவிந்து இருந்தாலும்...

 அழுக்குத் துணிகளைப் போடும் கூடை அட்சய பாத்திரம்போல பொங்கி வழிந்தாலும்...

 பாலில் வெளுத்த பளிங்குபோல வீட்டை வைத்துக் கொள்ள முடியாமல் போனாலும்...

இவை எதுவுமே தப்பில்லை என்று உணருங்கள் தோழிகளே.

அந்த சைரனை சைலன்ட் மோடில் போடுங்க ப்ளீஸ்!

ஜனார்த்தனிபோல, உறங்கப்போய் பின் மீண்டும் வந்து அர்த்தராத்திரியில் பாத்திரம் தேய்ப்பதும், காத்திருக்கும் துணிகளைக் கண்டு கவலைகொள்வதும், சுத்தமாக இல்லாத வீட்டை நினைத்து கலவரப்படுவதும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவாக, மனைவியாக, பெண்ணாக என்னுடைய ரோலை நான் இன்னும் சரியா செய்யலையே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படுவதுமே தவறு.

நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா... மண்டைக்குள் ஓயாமல் ஒலிக்கும் சைரன்களை சைலன்ட் மோடில் போடுவதுதான். இந்த லாக்டௌனும் பெண் களை இன்னும் வருத்தவே செய்யும். ‘இத்தனை வேலை கிடக்கும்போது ஓய்வு எடுத்தா

ஏதோ தப்பு செய்யுற மாதிரி இருக்கு’ என்ற பெரும்பான்மை மனநிலைக்கு நம்மை விலைகொடுக்காமல் இருப்போம். ஒரு மணி நேரம், ஒரு மதியம், ஒரு நாள் உங்களுக்கு நீங்கள் ஓய்வு கொடுப்பதால் இவ்வுலகம் அழிந்துவிடாது.

நம் அகவுலகிலும் புறவுலகிலும் ஓயாமல் ஒலிக்கும் சைரன்கள் சற்று நேரம் ஓயட்டும் தோழிகளே!