Published:Updated:

ஆம்புஸ் மார்க்கெட்டிங்... குறைந்த செலவில் அதிக பயன்..! - கைகொடுக்கும் விளம்பர உத்திகள்..!

பல லட்சம் செலவு செய்து கோக் நிறுவனம் பெற்ற கவனத்தை சில லட்சம் செலவு செய்து பெப்சி பெற்றது குறிப்பிடத்தக்கது!

பிரீமியம் ஸ்டோரி
ரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அந்த நிறுவனத்தின் சேவை அல்லது பொருள்கள் எந்தளவுக்கு வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும் ஒரு நிறுவனத்துக்கென்று விளம்பர உத்திகள் அவசியம் இருக்க வேண்டும். விளம்பரம் என்றவுடன் லட்சக்கணக்கில் செலவிட வேன்டும் என்று எண்ணாமல் உங்கள் நிறுவனத்தின் நிதிநிலைக்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளலாம். அந்த வகையில், குறைந்த செலவில் அதிக மக்களைச் சென்றடையும் ஒரு மார்கெட்டிங் உத்தி ஆம்புஸ் மார்கெட்டிங். ஆம்புஸ் மார்க்கெட்டிங் முறை என்பது என்ன, அதை எப்படி உங்களுடைய பிசினஸில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவல்களைத் தருகிறார் மார்க்கெட்டிங் ஆலோசகர் சக்திவேல் பன்னீர் செல்வம்.

ஆம்புஸ் மார்க்கெட்டிங்... குறைந்த செலவில் அதிக பயன்..! - கைகொடுக்கும் விளம்பர உத்திகள்..!

ஆம்புஸ் மார்கெட்டிங் என்றால்...

மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்களைப் பொறுத்தவரை, துண்டுப் பிரசுரங்கள் விநியோகங்களில் தொடங்கி டிஜிட்டல் மார்க்கெட்டிங் வரை நிறைய உத்திகள் உள்ளன. உங்கள் நிறுவனத்துக்கான விளம்பர உத்தியை நீங்களே முடிவு செய்யாமல் மார்க்கெட்டிங் துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று, உங்கள் நிறுவனத்துக்கேற்ற விளம்பர உத்தியைத் தேர்வு செய்தால், உங்களுடைய பட்ஜெட்டில் அதிக மக்களை சென்றடைய முடியும். குறைந்த பட்ஜெட்டில் அதிகளவு மக்களைச் சென்றடையக்கூடிய மார்க்கெட்டிங் உத்திகளில் ஆம்புஸ் மார்க்கெட்டிங் முறையும் ஒன்று.

ஆம்புஸ் மார்க்கெட்டிங் முறையைப் பதுங்கியிருந்து சந்தைப்படுத்துதல் முறை என்றும் சொல்வார்கள். அதாவது, ஒரு பெரிய நிறுவனம் ஸ்பான்ஸர்ஷிப் பெற்று நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் உங்கள் நிறுவனத்துக்கான விளம்பரத்தை மறைந்திருந்து செய்வதே ஆம்புஸ் மார்க்கெட்டிங்.

மார்க்கெட்டிங் செலவைக் குறைத்து, பொருளின் உற்பத்தி விலையைக் குறைக்க விரும்பும் நிறுவனங்களும் இந்த மார்க்கெட்டிங் முறையைத் தாராளமாகக் கடைப்பிடிக்கலாம்!

கோக்கும் பெப்சியும்

ஓர் உதாரணம் மூலம் இதைப் பார்ப்போம். 1996-ம் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில், கோககோலா நிறுவனம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து முறையான ஸ்பான்ஸர்ஷிப் பெற்றிருந்தது. எல்லா இடங்களிலும் கோக கோலா நிறுவனத்தின் பேனர்கள், விளம்பரங்கள் இருந்தன. அந்தச் சூழலில், பெப்சி நிறுவனம் சில விளையாட்டு வீரர்களிடம் பெப்சி குளிர்பானத்தைக் கொடுத்து குடிக்கக் கொடுத்தனர். கோக் குளிர்பானத்தை வீரர்கள் குடித்ததைப் புகைப்படம் எடுத்து அந்த நிறுவனம் வெளியிட்டது. பல லட்சங்கள் செலவழிக்காமல் வீரர்கள் சிலருக்கு மட்டும் குறுகிய அளவில் பணம் செலுத்தி கோக கோலா நிறுவனம் அடைந்த அதே அளவு கவனிப்பை பெப்சி நிறுவனமும் பெற்றது.

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு நிறுவனங்கள் பெரிய அளவில் தொகை செலவழித்து ஸ்டால்கள் வைத்திருந்தன. ஆனால், சிறிய முதலீடு கொண்ட நிறுவனம் ஒன்று, ஏர் பலூனில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரை மட்டும் எழுதி கேம்பஸ் முழுவதும் பறக்கவிட்டது. ஆயிரக்கணக்கில் பலூன்கள் கீழே கிடந்ததால் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பலூனாக எடுத்து அந்த நிறுவனத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டனர். ஆயிரக் கணக்கில் ஸ்டாலுக்காகச் செலவழிக்க வேண்டிய தொகையை மிச்சப்படுத்தி சில ஆயிரங்களை மட்டும் பலூன்களுக்காகச் செலவழித்து அந்த நிறுவனம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியில் ஒரு நிறுவனத்தின் பெயர் பதிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து ஒரே நேரத்தில் 100 பேர் உள்ளே நுழைந்தால், அனைவரின் கவனமும் அவர்களின் நடவடிக்கையின்மீது இருக்கும். இதுவும் ஆம்புஸ் மார்க்கெட்டிங் வகையையே சாரும். இதுபோன்று புது வகையான திட்டத்தை உங்கள் நிறுவனத்துக்கு ஏற்றாற்போல் உருவாக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் பயன்படும்..?

செலவு குறைவு என்பதால், ஸ்டார்ட்அப் மற்றும் சிறிய நிறுவனங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். அதற்காகப் பெரிய நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டிங் உத்தியைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று எந்த நிர்பந்தமும் இல்லை. மார்க்கெட்டிங் செலவைக் குறைத்து பொருளின் உற்பத்தி விலையைக் குறைக்க விரும்பும் நிறுவனங்களும் இந்த மார்க்கெட்டிங் முறையைக் கடைப்பிடிக்கலாம்.

ஆம்புஸ் மார்க்கெட்டிங் முறையில் வெற்றி பெற நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்வது முக்கியம். உங்கள் துறை சார்ந்து நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆம்புஸ் மார்க்கெட்டிங் முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது. அப்படி கடைப்பிடிக்கும்பட்சத்தில் உங்கள் நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்படும். பெரிய அளவில் கவனமும் கிடைக்காது. எனவே, ஒரு வருடத்தில் நடக்கும் ஏதேனும் பெரிய நிகழ்ச்சியில் மட்டும் நடைமுறைப்படுத்திப் பயன்பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரியான திட்டமிடலும் பட்ஜெட் பிளானிங்கும்..!

எப்போது உங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்போகிறீர்கள், எங்கு சந்தைப்படுத்தினால் நிறைய மக்களைச் சென்றடைய முடியும், சில நொடிகளில் மக்களை ஈர்க்கும் விதத்திலான தனித்துவமான திட்டம் எது... இவற்றையெல்லாம் முன்பே திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது அவசியம். ஒரு நிறுவனம் ஸ்பான்ஸருக்காக எவ்வளவு செலவு செய்கிறதோ, அதில் கால் பங்கு தொகைக்குள் முடிந்துவிடுவதாக உங்களின் விளம்பரத் திட்டமிடல் இருக்க வேண்டும். நிறைய தொகை செலவு செய்ய நேர்ந்தால், அந்த நிகழ்ச்சியில் ஆம்புஸ் மார்க்கெட்டிங் முறையைக் கைவிட்டுவிட்டு ஏதேனும் ஒரு ஸ்பான்ஸர்ஷிப் வாங்கிவிடலாம். அல்லது வேறு ஏதேனும் ஒரு மார்க்கெட்டிங் முறையைக் கடைப்பிடிக்கலாம்.

ஆம்புஸ் மார்க்கெட்டிங்... குறைந்த செலவில் அதிக பயன்..! - கைகொடுக்கும் விளம்பர உத்திகள்..!

இலக்குகளை நிர்ணயித்தல்

உங்கள் இலக்கு விற்பனை என்பதைத் தாண்டி, மக்களின் மனதில் உங்கள் நிறுவனம் பற்றிய எண்ணத்தைப் பதிய வைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் திட்டமிடல் ஒரு நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கி இருக்க வேண்டும். அதற்காக முன்பே திட்டமிடுவது அவசியம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முக்கியத் தருணங்கள் சில இருக்கும். அந்த நேரத்தில் உங்களின் விளம்பர உத்தியை நீங்கள் வெளிப்படுத்தினால் அதிக மக்களின் கவனத்தைப் பெற இயலும்.

விளம்பரப்படுத்துதல்!

ஆம்புஸ் மார்க்கெட்டிங்கைப் பொறுத்த வரை, நீங்கள் சந்தைப்படுத்திய பிறகு, அதைப் பற்றிய விளம்பரங்கள் செய்துகொள்வது அவசியமான ஒன்று. உங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள், ஊடகங்கள் போன்ற வற்றை ஷேர் செய்யும்போது அதன் மூலம் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு