லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

டாக்டருக்கு எதுக்கு யூடியூப் சேனல்? - தெறிக்கவிடும் `அம்மா’ ஜோன்ஸ்

டேனியல் ஜோன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டேனியல் ஜோன்ஸ்

2017-ம் ஆண்டிலிருந்து யூடியூப் சேனலை நடத்திவரும் ஜோன்ஸுக்கு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர்

‘`மருத்துவ நிபுணர் என்பதைத் தாண்டி என் நோயாளிகளை, ‘நான் உங்கள் தோழி. உங்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களைச் சொல்கிறேன். ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்’ என்ற தொனியிலேயே அணுக விரும்பினேன். என் அணுகுமுறை சரியானதா என்பதை அறிய யூடியூபில் ஆறு வாரங்கள் வீடியோக்கள் வெளியிட்டேன். அதன் மூலம் பெண்களுக்கான உடல்நலப் பிரச்னைகளில் மருத்துவர்களுக்கும் அவர்களுக்கும் நடுவிலிருந்த இடைவெளியை என்னால் நிரப்ப முடிந்தது. என் சேனலுக்கான நோக்கம் நிறைவேறிய தருணமும் அதுதான்” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் டேனியல் ஜோன்ஸ். யூடியூப் வாசிகளுக்கு Mama (அம்மா) Doctor Jones.

35 வயதாகும் ஜோன்ஸ் மருத்துவ மாணவியாக இருந்தபோதே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இயங்கினார். “சில வருடங்கள் படிப்பு, வேலை, குழந்தைகள் என பிஸியானதால், சமூக வலைதளங்களுக்கும் சிறிய பிரேக் கொடுத்திருந்தேன். மீண்டும் யூடியூப், டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் என நுழைந்தபோது, எனக்கான இடம் அங்கே அப்படியே இருப்பது தெரிந்தது” என்கிறார். தன்னை மருத்துவர் என்றும் நான்கு பிள்ளைகளின் (இரண்டு இரட்டைப் பிள்ளைகள்) அம்மா என்றும் அறிமுகம் செய்வதுதான் அவர் ஸ்டைல்.

2017-ம் ஆண்டிலிருந்து யூடியூப் சேனலை நடத்திவரும் ஜோன்ஸுக்கு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். வீட்டுப் பிரசவம், மருத்துவமனைப் பிரசவம் இரண்டில் எது பெஸ்ட், இரட்டைக் கர்ப்பப்பை பற்றிய உண்மைகள், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருள்களின் விளம்பரங்கள் குறித்த நையாண்டி, கர்ப்பகாலத்தில் தடுப்பூசி, மார்பகம் பற்றிய ஐந்து உண்மைகள் எனப் பெண்கள் தொடர்பான அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார்.

“இணையதளத்தில் ஏராளமான தவறான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. சரியான, ஆதாரபூர்வமான அறிவியல் தகவல் களைக் கொடுக்கும் வகையில் ஒரு மருத்துவராக என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் செய்ய வேண்டிய அவசியமான வேலையும் அதுதான்” என்பவர் பெண்கள் வெளியில் சொல்லத் தயங்கும் விஷயங்களைத் தைரியமாகக் கையாள்கிறார்.

டாக்டருக்கு எதுக்கு யூடியூப் சேனல்? - தெறிக்கவிடும் `அம்மா’ ஜோன்ஸ்

“வீடியோவை எடுக்கும்போது என் அறையில் கேமராவின் முன்னால் உட்கார்ந்து பேசுகிறேன். பணியிலிருக்கும்போது ஒரு நோயாளியுடன் தனியாக உட்கார்ந்து அவருக்கு ஆலோசனை அளிப்பது போன்றதுதான் அதுவும். பெண்கள் பேச வெட்கப்படும் விஷயங்கள் பற்றி வீடியோக்களில் இயல்பாகப் பேசுகிறேன். அதைப் பார்க்கும் பெண்களுக்கும் மனத்தடை நீங்கி தைரியமாக வெளியே பேச முற்படுவார்கள்.

எனக்குச் சரி என்று நினைத்து வீடியோவில் பேசிய சில விஷயங் களுக்கு, ‘உங்கள் பேச்சு என் உணர்வைப் புண்படுத்திவிட்டது’, ‘பேசுவதற்கு முன் இதுபற்றி கொஞ்சமாவது யோசித்தீர்களா?’ என்பது போன்ற கமென்ட்டுகள் வரும். அவை என்னைக் காயப்படுத்தினாலும் ஒரு மருத்துவராக மக்களிடம் எப்படியான வார்த்தைகளைப் பிரயோகித்து தகவல்களை அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி, என்னைச் செதுக்குபவை அவைதான்” என்பவருக்கு சக மருத்துவத்துறையினர் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது.

“ஒரு மருத்துவரான என்னுடைய நேரத்தை ஏன் யூடியூபில் செலவழிக்கிறேன் என்று உடன் பணியாற்று பவர்களுக்கே என்மீது மாற்றுக் கருத்து உண்டு. சிலர் நேரடியாகவே என்னிடம் அதைக் கேட்பார்கள். நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும்.

என் வீடியோவில் மற்றவர்களுக்குப் பயன்படும் விஷயங்கள் கிடைக்கும்போது என் நேரத்தைச் செலவழிப்பதில் தவறில்லை” எனும் ஜோன்ஸின் வேண்டுகோள் இதுதான்!

‘`சக மனிதர்களிடம் கனிவாக இருங்கள்... கமென்டுகளிலும்!’’