Published:Updated:

அன்னை பூமிக்கு ஆக்சிஜன் உதவி!

ராஜேஷ் -–நித்யா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஷ் -–நித்யா தம்பதி

நான் நெவேடா பல்கலைக்கழகத்துல பேராசிரியர். இங்க எங்களோட ரெண்டு குழந்தைங்களுக்கும் பாசிட்டிவ் ஆகிடுச்சு. பெரிய பாதிப்பு இல்லாம அவங்க குணமானாலும் எங்களால் அதையே தாங்கிக்க முடியல.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் ஆக்டோபஸ் கரங்கள் நாட் டையே மோசமாக ஆக்கிரமித்துள்ளன. மருத்துவமனைகளில் மக்கள் மூச்சுவிடத் திணறிக் கொண்டிருக்கின்றனர். ‘கண்ணீரையும், ஆறுதல் வார்த்தைகளையும் தவிர என்ன கொடுத்துவிட முடியும்’ என்று பலரும் நினைக்கும் சூழலில், அமெரிக்காவில் வசிக்கும் கோவை தம்பதி, 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி திரட்டி, அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை ஏற்படுத்தித் தந்துள்ளனர். அமெரிக்க மருத்துவர்களான ராஜேஷ் -–நித்யா தம்பதிதான் இதைச் செய்துள்ளனர்.

மருத்துவர் ராஜேஷ், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மங்கல கரைப்புதூர்தான் என் சொந்த ஊர். ஸ்கூல்ல தமிழ் மீடியம் படிச்சேன். கோவை அரசு மருத்துவக் கல்லூரில எம்.பி.பி.எஸ் முடிச்சேன். அகமதாபாத், அமெரிக்கால உயர்கல்வி படிச்சேன். இப்ப அமெரிக்காவின் ரினோ நகர்ல மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரா இருக்கேன். எப்பவுமே அடுத்தவங்களுக்குப் பண்ற உதவியில் கிடைக்கற சந்தோஷம் மட்டும்தான் உன்னதமான உணர்வுன்னு நம்பறவன் நான்.

அன்னை பூமிக்கு ஆக்சிஜன் உதவி!

நாங்க அமெரிக்காவில இருந்தாலும் என் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயலட்சுமி மேட்டுப்பாளையத்துலதான் இருக்காங்க. என் மனைவி நித்யாவோட அம்மா வனிதா மோகன், அப்பா மோகன் கோயம்புத்தூர் டவுன்ல இருக்காங்க. வருஷத்துக்கு ரெண்டு தடவையாச்சும் ஊருக்கு வந்துடுவோம். ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’னு ஓர் அறக்கட்டளை ஆரம்பிச்சு, எங்களால் முடிஞ்ச உதவிகளைப் பண்ணிட்டிருக்கோம். அரசூர் பக்கத்துல 50 படுக்கை வசதிகளோட ஒரு மருத்துவமனை கட்டிட்டிருக்கோம்.

என் மனைவியோட பெற்றோரும் மருத்துவர்கள்தான். அவங்க மூலமா நிலைமையைத் தெரிஞ்சுகிட்டோம். நாங்க படிச்ச கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு ஏதாவது பண்ணணும்னு யோசிச்சோம். ஆக்சிஜன்தான் இப்போ முதன்மைத் தேவைன்னு உணர்ந்தோம். கங்கா மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பாலவெங்கட் நிறைய உதவி பண்ணினார். எங்க நண்பர்கள் கிட்ட நிதி திரட்ட முடிவு பண்ணினோம். நாங்க நிதி கொடுத்து அதைத் தொடங்கணும்னு யோசிச்சேன். ரூ.2 லட்சம் வரை கொடுக்கலாம்னு மனைவி நித்யாகிட்ட சொன்னப்ப, ரூ.10 லட்சம் கொடுக்கலாம்னு அவங்க சொன்னாங்க. அவங்கதான் இதுக்கு பெரிய தூண்டுதலா இருந்தாங்க” என்று அவரிடம் போனைக் கொடுத்தார்.

“நான் நெவேடா பல்கலைக்கழகத்துல பேராசிரியர். இங்க எங்களோட ரெண்டு குழந்தைங்களுக்கும் பாசிட்டிவ் ஆகிடுச்சு. பெரிய பாதிப்பு இல்லாம அவங்க குணமானாலும் எங்களால் அதையே தாங்கிக்க முடியல. நம்ம ஊர்ல நடக்கறதைத் தினமும் செய்தியில பார்த்துட்டுதான் இருக்கோம். சிகிச்சைக்காக மக்கள் மணிக்கணக்கா காத்துக்கிடக்கறதைத் தாங்க முடியலை. ஒரு கட்டத்துல செய்திகள் பார்க்கறதை நிறுத்திட்டேன். இவங்களை யாரோ மாதிரி நினைக்க முடியல. எங்களோட சொந்த உறவுகள் நிக்கற மாதிரி மனசு ரொம்ப வலிச்சுது. இன்னிக்கு நாங்க நல்லா இருக்கோம்னா, அதுக்கு நல்ல படிப்பைக் கொடுத்து எங்களை ஆளாக்கின தாய்நாடுதான் முக்கிய காரணம். அப்படிப்பட்ட நாட்டுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரப்ப நம்ம சும்மா இருக்கக் கூடாதுன்னு நினைச்சோம். இது ஒரு போர்க்களம் மாதிரியான சூழ்நிலை. நம்ம எல்லாரும் சேர்ந்துதான் அதைக் கையாளணும்” என்றார் நித்யா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்னை பூமிக்கு ஆக்சிஜன் உதவி!

மீண்டும் தொடர்ந்த ராஜேஷ், “எங்க நண்பர்களுக்கு ‘இந்தியால இப்படி ஒரு சூழ்நிலை இருக்கு நாங்க இவ்ளோ உதவி பண்றோம்’னு தகவல் சொன்னேன். அவங்களும் உடனடியா பணத்தை அனுப்பினாங்க. கோவை அரசு மருத்துவக் கல்லூரில படிச்ச பழைய மாணவர்கள் பலர் உதவிக்கரம் நீட்டினாங்க. ரெண்டே நாள்ல சுமார் ரூ.1 கோடி கிடைச்சுது. கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில ஆக்சிஜன் கட்டமைப்புகளை அமைச்சுக் கொடுத்துட்டோம்.

அன்னை பூமிக்கு ஆக்சிஜன் உதவி!

அமெரிக்காவைப் பொறுத்தவரை முதல் அலையோட பாதிப்புலயே இரண்டாவது அலைக்குத் தயாராகிட்டோம். கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டாச்சு. இரண்டாவது அலை வர்றதுக்கு முன்பே கூடுதலான ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தினோம். இந்தியால முதல் அலைக்கு அப்புறம், எல்லாத் தரப்புலயும் ஒருவித அலட்சியம் வந்துடுச்சு. அதோட விளைவுதான் இவ்ளோ பாதிப்பு. இப்போதைக்கு இந்த நிமிஷத்துல என்ன தேவையோ, அதை நிரப்புறதுல கவனம் செலுத்தணும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கணும். அன்பால் மட்டும்தான் எல்லா விஷயத்துக்கும் தீர்வு கிடைக்கும். இந்தக் கடினமான காலகட்டத்துல, நம்மால் முடிஞ்ச உதவிகளைச் செஞ்சு நம்ம அன்பை வெளிப்படுத்தணும். நாங்களும் அடுத்தகட்டமா மக்களுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம். மாஸ்க், தடுப்பூசியுடன் அன்பையும் எல்லோரிடமும் பகிர்வோம். அதுதான் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுவர அருமருந்து” என்கிறார் அழுத்தமாக.