Published:Updated:

``எத்தனை முறை சொன்னாலும் மக்கள் வரிசையில் நிற்பதில்லை!” - அம்மா உணவக ஸ்பாட் விசிட் நிலவரம்

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

``ஏழை, பணக்காரன்னு வித்தியாசம் இல்லாம எல்லாத் தரப்பு மக்களும் சாப்பாடு வாங்க வர்றாங்க. ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனத்துல வேலை செய்ற டெலிவரி பசங்ககூட இங்க வந்து சாப்பிடுறாங்க."

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சமையலுக்கான காய்கறிகள் வாங்க பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். உணவகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருப்பதால் பேச்சுலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்திலுள்ள அம்மா உணவகங்கள் பலதரப்பட்ட மக்களுக்கும் உணவுத் தேவைக்குத் தற்சமயம் பெரிதும் கைகொடுக்கிறது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

ஏழை மக்களுக்கு மலிவான விலையில் உணவு வழங்கிடும் நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் அம்மா உணவகம். பிறகு, காலப்போக்கில் இந்த உணவகங்களை நடத்துவதிலும் பராமரிப்பதிலும் அரசு சரியான அக்கறை காட்டுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால், அம்மா உணவகத்தை நாடிச்செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. இந்தச் சூழலில்தான் தற்போதைய ஊரடங்கில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களை நோக்கி மக்கள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய சென்னை கோடம்பாக்கம் புலியூர் பிரதான சாலையில் இருக்கும் அம்மா உணவகத்துக்குச் சென்றோம். ஏழை மக்கள் முதல் காரில் வந்து உணவு வாங்கிச் செல்பவர்களையும் காண முடிந்தது. அவர்களில் அதிகமானோர் குடும்பஸ்தர்கள். பெரும்பாலானோர் பார்சல்களில் உணவு வாங்கிச் சென்றனர். சிலர் உணவகத்திலேயே சாப்பிடுவதையும் காண முடிந்தது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வரிசையாக வரையப்பட்டிருந்த கட்டங்களைக் கவனிக்காத மக்கள், நெருக்கமாகவே வரிசையில் நின்றிருந்தனர். உணவகத்துக்குள் நுழையும் பொதுமக்கள் கைக்கழுவ வைக்கப்பட்டிருந்த தண்ணீரையும் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை.

சுடர்கொடி
சுடர்கொடி

உணவகப் பணியாளர்களில் ஒருவரான சுடர்கொடியிடம் பேசினோம். ``முன்பெல்லாம் உணவகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவுதான். மாசக் கடைசி 10 நாள்கள்லதான் கொஞ்சம் அதிக கூட்டம் வரும். ஆனா, இப்போ கொரோனா பிரச்னையால் தினமும் நிறைய மக்கள் சாப்பாடு வாங்க வர்றாங்க. ஒவ்வொரு வேளையும் 500 பேருக்குக் குறையாம வர்றாங்க.

காலையில இட்லி, பொங்கல். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம். இரவு சப்பாத்தி மட்டும் வழங்குவோம். காலையிலயும் இரவுலயும் ஓரிரு மணிநேரத்துலயே உணவு தீர்ந்துடும். மதியம்தான் மூணு மணிநேரம் ஓடும். சாப்பாடு சீக்கிரமே விற்பனையாகி, கூட்டம் அதிகமா வந்துட்டே இருந்தா மனசு கேட்காம உடனே பொங்கல் கொஞ்சம் செஞ்சு வர்றவங்களுக்குக் கொடுப்போம்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

இதே உணவுகளைத்தான் நாங்களும் சாப்பிடுவோம். இக்கட்டான சூழல்ல மக்கள் எங்களைத் தேடிவர்றதால, உணவின் சுவை மற்றும் சுகாதாரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். காலை ஷிஃப்ட்ல ஏழு பேர், மதிய ஷிஃப்ட்ல ஆறு பேர் வேலை செய்றோம். எல்லோருமே பெண்கள்தாம். எங்களோட பாதுகாப்புக்கு சானிடைசர் வாங்கிப் பயன்படுத்துறோம்.

மாசத்துல எல்லா நாளும் எங்களுக்கு வேலை இருக்கும். கூட்டம் அதிகமா வர்றதால, லீவு எடுக்காம எல்லோரும் வேலைக்கு வர்றோம். ஒவ்வொருவரும் தினமும் ரெண்டு மாஸ்க் பயன்படுத்துறோம். ஒரு மாஸ்க் விலை 25 ரூபாய். ஒருநாளைக்கு எங்களுக்குச் சம்பளமே 300 ரூபாய்தான். அதுல மாஸ்க் வாங்க 50 ரூபாய் செலவு செய்யுறது பெரும் சிரமமா இருக்கு. `மாஸ்க் தட்டுப்பாடு இருக்கிறதால நீங்களே சொந்தமா வாங்கிக்கோங்க’ன்னு அதிகாரிகள் சொல்றாங்க. அதனால, தூய்மையான கர்சீப்பை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம்” என்றார் ஆதங்கத்துடன்.

ஜெசிந்தா மேரி
ஜெசிந்தா மேரி

உணவகத்தில் பணியாற்றும் மற்றொரு பணியாளரான ஜெசிந்தா மேரி அச்சத்துடன் வேலை செய்யும் சூழல் குறித்துப் பேசினார். ``தினமும் அரசு அதிகாரிகள் சோதனை செய்ய வர்றாங்க. வரிசையில் நிக்கும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் எல்லோரும் முதலில் கை கழுவுவதையும், உணவகப் பணியாளர்கள் மாஸ்க் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்தச் சொல்றாங்க.

சாப்பாடு வாங்க வர்றவங்க கை கழுவ சோப்புடன் எலுமிச்சையும் கலந்து வெச்சிருக்கோம். தண்ணியில மஞ்சள்தூள், வேப்பிலையும் சேர்த்து வெச்சிருக்கோம். ஆனா, அதை யாருமே கண்டுக்கிறதில்லை. எத்தனை முறை சொன்னாலும், கீழ இருக்கிற கட்டத்தைக்கூடக் கவனிக்காம, சொன்னாலும் கேட்காம நெருக்கமாகவே நிக்கிறாங்க. வழக்கமா ஸ்கூல் பசங்க, வயசானவங்களுக்கு மட்டும்தான் சாப்பாடு பார்சல் கொடுப்போம்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

இப்போ சமூக இடைவெளி காரணத்தால விருப்பபடுற எல்லோருக்குமே பார்சல் கொடுக்கிறோம். வழக்கத்துக்கு மாறா, இப்போதான் ஏழை, பணக்காரன்னு வித்தியாசம் இல்லாம எல்லாத் தரப்பு மக்களும் சாப்பாடு வாங்க வர்றாங்க. ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனத்துல வேலை செய்ற டெலிவரி பசங்ககூட இங்க வந்து சாப்பிடுறாங்க.

கொரோனா பாதிப்பு யாரால் எப்படிப் பரவும்னு தெரியாத சூழல்ல, சாப்பாடு வாங்க வர்றவங்க முறையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காம இருக்கிறதால அவங்களுக்கும் பிரச்னை, கூடவே இங்க வேலை செய்ற எங்களுக்கும் பிரச்னை வந்திடுமோன்னு பயமா இருக்கு. பாதுகாப்புச் சூழல் இல்லாம அச்சத்துடன்தான் வேலை செய்யுறோம். இதனாலயே, `இந்தச் சூழல்ல வேலைக்குப் போய்தான் ஆகணுமா?’ன்னு குடும்பத்துல தினமும் கேட்கிறாங்க. வீட்டுக்குப் போனதுமே நல்லா கை கழுவிக்கிறோம். ஆனாலும், மனசுக்குள்ள பயம் இருந்துகிட்டேதான் இருக்கு” என்றவரின் முகத்தில் பெரும் அச்சம் எட்டிப்பார்த்தது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

உணவு வாங்க வந்திருந்த ரமேஷ் என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். ``நான் சென்னையிலயும் என் மனைவி வேலூர்லயும் தனியார் பள்ளி ஆசிரியர்களா வேலை செய்யுறோம். ஊரடங்கு உத்தரவால் சென்னையில சிக்கிக்கிட்டதால, வேலூர்ல இருக்கிற எங்க வீட்டுக்கு என்னால போக முடியலை. சமைக்கவும் முடியாத சூழல்ல, இந்த ஏரியாவுல அம்மா உணவகம் மட்டும்தான் இருக்குது. எதைப் பத்தியும் கவலைப்படாம, கிடைக்கிற இந்த அம்மா உணவகச் சாப்பாட்டை நம்பிதான் என்னைப்போல நிறைய பேர் இப்போ இருக்காங்க. கொடுக்கிற காசுக்கு பெரிசா குறை சொல்ல முடியாத அளவுக்குச் சாப்பாடு தர்றாங்க” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு