Published:Updated:

தோனி மனைவி சாக்ஷியின் நிறுவனத்துக்கு முறைகேடாகப் பணம்! - ஆம்ரபாலி நிறுவனத்தின்மீது புதிய குற்றச்சாட்டு

ராம் பிரசாத்

'முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்க வழி செய்யுங்கள்' என தோனி, கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஆம்ரபாலி குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம், தங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வீடுகளைக் கட்டித்தரவில்லை என பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கிரிக்கெட் வீரர் தோனி இருந்தார். நிறுவனத்தின்மீது புகார்கள் எழுந்த நிலையில் அதிலிருந்து விலகினார். 'நானும் வீடு கட்ட அந்த நிறுவனத்திடம் முதலீடு செய்துள்ளேன். எனக்கு வீட்டை பெற்றுத்தாருங்கள் அல்லது முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்க வழிசெய்யுங்கள்' என தோனியும் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

தோனி
தோனி

இந்த நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்காக 2 ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு ஆய்வுசெய்து, தற்போது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதில்தான், தோனியின் மனைவி ஷாக்‌ஷி, ஆம்ரபாலி குழுமத்தின் கீழ் வரும் 'ஆம்ரபாலி மகி' நிறுவனத்தின் இயக்குநராக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

`2009-15 காலகட்டத்தில், ஆம்ரபாலி நிறுவனத்திடமிருந்து ரிதி ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ரூ.42.22 கோடியைப் பெற்றுள்ளது. இந்தப் பணம் எதற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த இரு நிறுவனத்திற்கும் இடையே என்ன ஒப்பந்தம் என எந்த விவரமும் இல்லை. ஐபிஎல் போட்டியின்போது, இந்த நிறுவனம் போட்ட ஒப்பந்தத்திற்கான ஆதாரங்கள் இல்லை என அறிக்கை கூறுகிறது. எனவே, வீட்டு உரிமையாளர்களின் பணம் சட்டவிரோதமாகவும் தவறாகவும் ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு திருப்பி விடப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

தோனி மனைவி சாக்ஷியின் நிறுவனத்துக்கு முறைகேடாகப் பணம்! - ஆம்ரபாலி  நிறுவனத்தின்மீது புதிய குற்றச்சாட்டு

ஆம்ரபாலி நிறுவனம் பாதியில் நிறுத்தியுள்ள கட்டுமானப் பணிகள் அனைத்தையும் ஜார்கண்டைச் சேர்ந்த என்பிசிசி நிறுவனம் இனி மேற்கொள்ளும் என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிட்டர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர்களின் பணத்தை திருப்பி அளிக்க அந்தந்த இயக்குநர்களுக்கு உத்தரவிடுகிறோம். பணத்தை திருப்பி அளிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரனை நடத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.