Published:Updated:

2K கிட்ஸ்: பாட்டி சொல்ல தட்டாதே!

மருதாயி
பிரீமியம் ஸ்டோரி
மருதாயி

ர.அரிராம் விக்னேஷ்

2K கிட்ஸ்: பாட்டி சொல்ல தட்டாதே!

ர.அரிராம் விக்னேஷ்

Published:Updated:
மருதாயி
பிரீமியம் ஸ்டோரி
மருதாயி

``ஒரு நல்ல பழக்கத்த, ‘இதைப் பண்ணு ராசா’னு சொன்னா ஒரு பயலும் செய்ய மாட்டான். அதையே ‘இதைச் செய்யலைன்னா சாமி கண்ணக் குத்தும்’னு சொன்னா பயந்துகிட்டு செய்வான். அப்படித்தான் இங்க நல்ல பழக்கவழக்கங்கள எல்லாம் சாஸ்திரம், சம்பிரதாயம்ங்குற பேருல சொல்லி வெச்சிருக்காக நம்ம பெரியவுக’’ - கணீ ரென்ற குரலில் பேசுகிறார், மதுரை அருகில் இருக்கும் ஆமுர் கிராமத்தைச் சேர்ந்த மருதாயி பாட்டி. ஒரு மணி நேர உரையாடலில் மருதாயி பாட்டியிடம் கற்றதும் பெற்றதும் இங்கே...

ஆமூர் கிராமத்தில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தாளான மருதாயி பாட்டி, நாம் சென்ற நேரம் வயல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ‘`புள்ளைங்க எம்புட்டு தூரத்துல இருந்து வந்துருக்குங்க, குடிக்கத் தண்ணியும் அப்புடியே நெல்லிக்காயும் கொண்டா (கொண்டு வா)’’ என்ற ஓர் அக்காவிடம் சொன்னவர், ‘`நெல்லிக்கா எதுக்குனு பாக்குறீகளா..? அதைச் சாப்பிட்டு தண்ணி குடிச்சா வாய்க்குச் சுவையா இருக்குமில்ல?! நாக்குக்கு மட்டுமல்ல, நம்ம நெலத்துக்கும் ருசி கொடுக்குறது நெல்லி’’ என்று ஆரம்பித்தார்.

2K கிட்ஸ்: பாட்டி சொல்ல தட்டாதே!

‘`அதாவது பேராண்டிகளா, நெலத்தைப் பொறுத்துதான் அந்த நீரோட ருசி அமையும். சில நெலத்தால நீரோட ருசி திரிஞ்சு போகும்போது, அந்த நெலத்தச் சுத்தி நெல்லி மரத்தை நட்டு வெப்போம். நெல்லி வேரு நெலத்தை வளப்படுத்தி, நீரையும் ருசி கூட்டும். அதேபோல, கெணத்து நீரு உப்பா இருந்தா அதுல நெல்லி மர வேர், கட்டையை வெட்டிப் போடுவோம். அதுவும் தண்ணியோட சுவைய மாத்தும்’’ என்ற பாட்டியிடம், வழியில் நீர்ப்பந்தலில் தண்ணீர் கொடுத்ததைச் சொன்னோம். ‘`இந்த நீர்ப்பந்தல் போடுற பழக்கம் எப்புடி வந்துச்சு தெரியுமா...’’ என்று ஆரம்பித்தார் பாட்டி.

‘`அந்தக் காலத்துல, யாருக்காவது தீக்குளிச்சு உசுரு போயிடுச்சுன்னா, அவுக தாகத்தோட பூமிய விட்டுப் போயிருப்பாகனு, அவுகளோட ஆத்மா சாந்தி அடைய நீர்ப்பந்தல் வெச்சு சடங்கு செய்வாக. ஊருக்கு வெளியில நீர்ப்பந்தல் வெச்சு அந்த வழியா போற, வர்றவுகளுக்குத் தண்ணி கொடுத்தாப்லயும் ஆச்சு, ஒரு உசுரப் பறிகொடுத்த வீட்டுக்கு நிம்மதி கிடைச்சாப்லயும் ஆச்சு’’ என்ற பாட்டி, கை அழுந்த வேலை பார்த்ததில் உடைந்து விட்ட தன் விரல் நகத்தை பிய்த்துப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

2K கிட்ஸ்: பாட்டி சொல்ல தட்டாதே!

‘`பாட்டி நகத்தை வெட்டாம பிச்சுப் போடு றேன்னு பார்க்குறீகளா... சம்சாரிங்க எல்லாம் இப்படித்தான். சரி, வெளக்கு வெச்சதுக்கு அப்புறம் நெகம் வெட்டக் கூடாதுனு உங்க வீட்டுல சொல்லி யிருப்பாகளே... வெட்டுனா என்னனு நீங்க மல்லுக்கு நின்னுருப்பீகளே..? அந்தக் காலத்துல மண்ணெண்ணெய் வெளக்கு வெளிச்சம்தானே இருக்கும். அதுல நெகம் வெட்டும்போது கண்ணு சரியா தெரியாது. நெகவெட்டியெல்லாம் அப்போ இருக்காது, கத்தி, கூர்முனைனு எதையாச்சும் வெச்சுத்தேன் வெட்டியிருப்பாக. இருட்டுல வெட்டும்போது கையில காயம் பட்டுடலாம். நெகம் கீழ விழுந்தாலும் தேடி எடுக்க முடியாது. அதுக்காகத்தேன் அப்புடிச் சொல்லி வெச்சிருக்காக’’ என்று பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘`நாளைக்கு நம்ம குந்தாணி நாத்து நடுறதுக்கு நானும் வர்றேன்னு சொல்லுது... வரச் சொல்லவா பாட்டி..?’’ என்று ஒருவர் கேட்க, ‘`வரச் சொல்லு வரச் சொல்லு’’ என்ற பாட்டியிடம், ‘குந்தாணினு ஒரு பேரா?’ என்றோம்.

‘`குந்தாணினா என்ன தெரியுமா உங்களுக்கு? எங்க காலத்துல அரிசி, தானியத்தையெல்லாம் ஒரு உரல்ல போட்டு ஒலக்கையால குத்துவோம். குத்தும்போது அந்த தானியமெல்லாம் சிதறாம இருக்க உரலுக்கு மேல மூங்கில்ல செஞ்ச வட்ட மறைப்ப வெப்போம். அதுக்குத் தலையும் இருக்காது, காலும் இருக்காது, முழுசா ஒரு ரவுண்டா இருக்கும். அதுக்குப் பேருதான்யா குந்தாணி. அப்புடி ஒடம்பு இருக்குற பொண்ணுகள குந்தாணினு செல்லமா, கேலியா சொல்லுவோம்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பாட்டி.

ஊரில் தூரத்தில் பாட்டுச் சத்தம் கேட்க, ‘`கலியாண வீட்டுல குழா(ய்) கட்டிப் பாட்டுப் போடுறாக போல. சரி தாலி கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுறாக சொல்லுங்க?’’ என்று மருதாயி பாட்டி நமக்கு திடீர் க்விஸ் வைக்க, திருதிருவென விழித்தோம். ‘`பயலுகளா... அழுகை, சண்டை, அமங்கல வார்த்தைனு தாலி கட்டும் போது வேற எந்தச் சத்தமும் கேக்காம இருக்கத்தேன் மேளத்தை ஓங்கி அடிக் கிறது’’ என்று சொல்லிவிட்டுத் கன்னத் தில் தட்டிவிட்டுக் கிளம்பினார்.

அவர் நட்டுச் சென்றிருந்த நாற்றுகள் நடனமாடிக்கொண்டிருந்தன காற்றின் திசைக்கு!