Published:Updated:

74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள்! - சாதனையா? சோதனையா?

ஐவிஎஃப்
பிரீமியம் ஸ்டோரி
ஐவிஎஃப்

செய்திக்குப் பின்னே...

74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள்! - சாதனையா? சோதனையா?

செய்திக்குப் பின்னே...

Published:Updated:
ஐவிஎஃப்
பிரீமியம் ஸ்டோரி
ஐவிஎஃப்

ந்திராவைச் சேர்ந்த 74 வயது மங்காயம்மா என்ற பெண் ஐவிஎஃப் எனப்படும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது உலக சாதனையாகப் பார்க்கப் படுகிறது. மருத்துவ வளர்ச்சி என்ற வகையில் இது ஆச்சர்யமூட்டினாலும், அந்தத் தம்பதியின் ஆரோக்கியம், குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்திப் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ராஜாராவ் - மங்காயம்மா
ராஜாராவ் - மங்காயம்மா

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபர்த்திபுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா ராவுக்கு 79 வயது. இவர் மனைவிதான் மங்காயம்மா. 57 ஆண்டுகளாக குழந்தைப்பேற்றுக்காகக் காத்திருந்த இந்தத் தம்பதி, அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். அந்தச் சூழலில், 55 வயதுப் பெண் ஒருவருக்கு செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த தகவல் இவர்களை எட்டியது. அதையடுத்து, தங்களுக்கும் குழந்தைப்பேறு வேண்டி குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடினர்.

மருத்துவ பரிசோதனையில், மெனோபாஸ் நிலையை எட்டிவிட்டாலும், மங்காயம்மாவுக்குக் கருத்தரிப்பதற்கான உடல் தகுதி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நின்றுபோன மாதவிடாயை மீண்டும் வரவழைத்தனர். வேறொரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானமாகப் பெற்று, ராஜாராவின் விந்துடன் செயற்கை முறையில் கரு உருவாக்கி, அதை மங்காயம்மாவின் கர்ப்பப்பைக்குள் செலுத்தினர். முதல் முயற்சியிலேயே மங்காயம்மாவின் கர்ப்பப்பை கருமுட்டையை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரைத் தனியறையில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமலா செல்வராஜ்
கமலா செல்வராஜ்

கரு முழு வளர்ச்சியடைந்து ஒன்பது மாதங்கள் முடிவடைந்த நிலையில், பிரசவத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செப்டம்பர் 5 அன்று அறுவை சிகிச்சை மூலம் மங்காயம்மாவுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர். முதிய வயதில் குழந்தை பெற்றாலும் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

74 வயது மங்காயம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டாலும், இது நல்ல முன்னுதாரணமல்ல என்கிற பேச்சும் பரவலாக எழுகிறது. `ஐவிஎஃப்’ செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் பல்வேறு சாதனைகளைச் செய்துவரும் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் இதுபற்றிக் கேட்டோம்.

ஐவிஎஃப்
ஐவிஎஃப்

‘`ஐவிஎஃப் (In Vitro Fertilisation) என்பது கருமுட்டையையும் விந்தணுவையும் செயற்கையாக இணையச்செய்து கருவை உருவாக்கி, அதை 48 மணி நேரத்துக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவது. பொதுவாக, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்ளும்போது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன் மாத்திரைகள் தரப்படும். சம்பந்தப்பட்ட பெண்ணின் செயலற்ற அல்லது சுருங்கிப்போன கர்ப்பப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக்கொண்டு வரப்படும். சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் பெண்ணுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற உடல்நல பாதிப்புகள் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 74 வயது மங்காயம்மா கர்ப்பத்தைத் தாங்குவதற்கும், ஆரோக்கியமான சிசுக்களை தன் கருவில் வளர்ப்பதற்கும் எந்தளவுக்கு உடல் தகுதியுடன் இருந்திருப்பார் என்பது கேள்விக்குறி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

79-74 வயதுகளில் பெற்றோராகி இருக்கும் இந்தத் தம்பதி, அந்தக் குழந்தைகளை வளர்க்கும் ஆரோக்கியத்துடனும், பொருளாதார பலத்துடனும் இருப்பார்களா? அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், சாதனை ஆர்வத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவக்குழுவும், குழந்தை ஆசையில் அந்தத் தம்பதியும் இதை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு மருத்துவரும், மருத்துவ நெறிமுறைகளுக்கு உட்பட்டே சிகிச்சையளிக்க வேண்டும்.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

மங்காயம்மாவுக்கு மெனோபாஸ் முடிந்துவிட்டதால், மற்றொரு பெண்ணிடமிருந்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை, உயிரணு உற்பத்திக்கும் வயோதிகத்துக்கும் தொடர்பில்லை. என்றாலும், விந்தணுவின் எண்ணிக்கையும் சுறுசுறுப்புத் தன்மையும் குறைவாகக் காணப்படலாம். ஐவிஎஃப் சிகிச்சை முறையில் இந்தப் பிரச்னைகள் ஒரு பொருட்டல்ல என்பதால், ராஜா ராவின் விந்தணு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, 21 முதல் 45 வயதுவரை உள்ள ஆண்களின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். பெண்களுக்கு 21 முதல் 35 வயதுவரை கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும். அதிகபட்சம் 50 வயதுவரை ஆணும், 45 வயதுவரை பெண்ணும் குழந்தை பெறத் தகுதியுடையவர்கள். இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சலின் வழிகாட்டுதலும் உறுதி செய்துள்ளது. 74 வயதில் குழந்தைப்பேறு என்பது மருத்துவத்தில் சாதனையாகப் பார்க்கப்பட்டாலும் நல்ல முன்னுதாரணமல்ல என்பதை ஆணித்தரமாகச் சொல்வேன்’’ என்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை என்பது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதம் என்றாலும், குறிப்பிட்ட வயதுக்குள் இந்த சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்’’ என்று சொல்லும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன், அந்த வயது நிர்ணயத்துக்கான காரணம் பற்றியும் விளக்கினார்.

‘`ஒரு பெண் முதுமைப் பருவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நேரிடும்போது கருச்சிதைவு, கர்ப்பகால ரத்த அழுத்தம், கர்ப்பகால நீரிழிவு, குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள், குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகள், மன நலிவு, நஞ்சு சார்ந்த பிரச்னைகள், தாய்ப்பால் சுரக்காமை, தாய், சேய் மரணம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான அபாயம் அதிகரிக்கிறது என்பதே, வயது நிர்ணயத்துக்குக் காரணம்.

குழந்தையின்மை சிகிச்சை என்பது இப்போது பெரிய வணிகமாக வளர்ந்துவருகிறது. `வயது தடையல்ல, குழந்தைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம்' என்றெல்லாம் மக்களை எண்ண வைப்பதற் கான ஒரு வகை விளம்பரம்தான் இது. எனவே, இது முன்னுதாரண செய்தி அல்ல என்பதையே நாம் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் சசித்ரா தாமோதரன்.

இது அறம் சார்ந்ததல்ல!

குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன், ‘`செயற்கைக் கருத்தரிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் ‘அசிஸ்டட் ரீபுரொடக்டிவ் டெக்னாலஜி மசோதா (ART Bill - 2017)’, தம்பதிகளுக்கான செயற்கை கருவுறுதல் வயதை நிர்ணயித்துள்ளது. பெண்களுக்கு 18 வயதுக்குக் கீழும் 45 வயதுக்கு மேலும், ஆண்களுக்கு 21 வயதுக்குக் கீழும் 50 வயதுக்கு மேலும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை அளிக்கப்படக் கூடாது என்கிறது இந்த மசோதா.

தேவநேயன்
தேவநேயன்

ART மசோதாவைச் சுட்டிக்காட்டி, `இந்தியன் சொஸைட்டி ஃபார் அசிஸ்டட் ரீபுரொடக்‌ஷன் (ISAR)’, `இந்தியன் ஃபெர்டிலிட்டி சொஸைட்டி (IFS)’, `அகாடமி ஆஃப் க்ளினிக்கல் எம்பிரியாலஜிஸ்ட்ஸ் (ACE)’ ஆகிய மூன்று அமைப்புகளும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், 74 வயதான பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவுக்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. `இது அறம் அல்ல, சட்டத்துக்குட்பட்டது அல்ல, மேலும் கண்டிக்கத்தக்கது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விஷயத்தைக் குழந்தைகளின் தரப்பில் இருந்து பார்க்கும்போது, ஓர் இயல்பான சூழலிலிருந்து அவர்களின் பால்யமும் எதிர்காலமும் மாறுபட்டிருக்கும். ‘ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் வயதின் கூட்டுத் தொகை 90-ஐ தாண்டியிருக்கக் கூடாது’ என்கிறது தத்தெடுப்புச் சட்டம். மங்காயம்மாவைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தைகளுக்கு 16 வயதாகும்போது அவர் 90 வயதை எட்டியிருப்பார். எப்படி அவரால் பெற்றோருக்கான கடமைகளைச் செய்ய முடியும்? குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் என்கிற முறையில் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார்.

குழந்தைகள் வளர வளர..!

ங்காயம்மா - ராஜா ராவ் தம்பதி உளவியல்ரீதியாக எதிர்கொள்ள நேரக்கூடிய பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் சொல்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

“குழந்தைகளின் ஆரம்ப வயதுகளில் அவர்களை வளர்க்க மங்காயம்மா, ராஜா ராவ் தம்பதி சிரமங்களுக்கு உள்ளாகலாம். பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது சமூக கேலிக்கு ஆளாக நேரிடலாம். குழந்தைகளின் திருமணம், பிள்ளைப்பேறு போன்ற முக்கியக் கடமைகளின்போது இவர்களின் வயது எந்தளவுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரியாது.

சிவபாலன் இளங்கோவன்
சிவபாலன் இளங்கோவன்

பெற்றோர் இருவரும் முன்கூட்டியே சமூகத்தின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளின் பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது வித்தியாசமான பார்வைகளை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு முக்கியத் துவம் கொடுக்கக் கூடாது. இளம் பெற்றோருடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தங்கள் வயதுக்குச் செய்ய முடிகிறவற்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னொரு பக்கம், குழந்தைகள் வளரும்போது மற்ற பெற்றோர்களுடன் தங்கள் பெற்றோரை ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்னைகளும் எழலாம். அதையெல்லாம் இவர்கள் தங்கள் அன்பால் ஈடுசெய்ய வேண்டும். ‘நீங்க பிறக்கிறதுக் காகத்தான் நாங்க இவ்ளோ நாள் காத்திருந்தோம்’ என்று சொல்லிப் புரியவைக்க வேண்டும். தங்களுக்குப் பிறகு அவர்களுக்கான பொருளாதார பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான கார்டியன் பற்றியும் சிந்திக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்யும்பட்சத்தில், அந்தக் குழந்தைகள் சிறப்பாக வளர்வார்கள்.’’

74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள்! - சாதனையா? சோதனையா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism