Published:Updated:

நெல்லை: வறுமையில் வாடும் ஆட்டோ டிரைவர்... கீழே கிடந்த ரூ.2 லட்சம்! - உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை

ஆட்டோ டிரைவர் தம்பதிக்குப் பாராட்டு
ஆட்டோ டிரைவர் தம்பதிக்குப் பாராட்டு

சாலையில் கிடந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர், அதை உரியவரிடம் ஒப்படைத்தார். கடுமையான பணத் தேவையில் இருக்கும் அவர் நேர்மையுடன் செயல்பட்டதை அறிந்த காவல்துறை துணை ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிமுருகன். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான அவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். அவரின் மகன், சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

என்னைக் கலங்கவைத்த அயர்ன்காரரின் நேர்மை! -நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

மகனின் மருத்துவச் செலவுக்காகப் பலரிடம் கடன் வாங்கியதுடன் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோ ஓட்ட முடியாததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். அதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பதால் இரவு பகலாக ஆட்டோ ஓட்டி கடனுக்கான வட்டி செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மகனுக்கு மருந்துகளை வாங்குவதற்காக ரஜினிமுருகனும், அவரின் மனைவி கோகிலாவும் ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது உள்ளே கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

ஆட்டோ டிரைவர் ரஜினிமுருகன்
ஆட்டோ டிரைவர் ரஜினிமுருகன்

யாரோ பணத்தைத் தொலைத்துவிட்டு தவிப்பார்களே என்று எண்ணிய ரஜினிமுருகன் அந்த பைக்குள் நன்றாகப் பார்த்தபோது அதன் உள்ளே கிடந்த வங்கி சீட்டில் பெயர் இருந்துள்ளது. உடனையாக சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று அந்த நபர் யார் என்பதையும் அவரது முகவரியையும் கண்டுபிடித்தனர்.

சுப்பிரமணியன் என்பவர் அவசரத் தேவைக்காக வங்கியில் இருந்து 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்தபோது சாலையில் தவறவிட்டுச் சென்றுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடித்த ஆட்டோ டிரைவர் ரஜினிமுருகனும் அவரின் மனைவி கோகிலாவும் பணத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

இது பற்றிய தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன், ஆட்டோ டிரைவர் அவரது மனைவி ஆகியோரை நேரில் அழைத்து அவர்களின் நேர்மையைப் பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார். தான் வறுமையில் வாடினாலும் பிறரின் பணத்துக்கு ஆசைப்படாத ரஜினிமுருகனின் செயல் பாராட்டுக்குரியது என துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு