Published:Updated:

இந்தியாவுக்கே பட்ஜெட் போட்ட தமிழர்கள்!

ஒரு சிறப்புப் பார்வை

பிரீமியம் ஸ்டோரி

சுதந்திர இந்தியாவில் 1947-ம் ஆண்டு ஆரம்பித்து இன்றுவரை வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய நிதியமைச்சர்களாக இருந்து, தேசத்தின் பொருளாதாரத்துக்கு தமிழர்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருக்கிறார்கள். 1947-ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆர்.கே.சண்முகம் செட்டியாரும் தமிழர்தான்; வரும் பிப்ரவரி முதல் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழர்தான். தமிழகத்தைச் சேர்ந்த ஆறு அரசியல் ஆளுமைகள் மத்திய நிதியமைச்சர்களாக இருந்து, சிறப்பான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1947-1948)

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்துவிட்டு சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்திருக்கிறார்.

ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம்
ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம்

1947-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இந்தியாவின் பொருளாதாரத்தை ஆராய்வதற்கான பட்ஜெட்டாக அது இருந்தது. புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அகதிகள் மறுவாழ்வு, உணவு தானியங்களுக்கான மானியங்கள் ஆகியவை பட்ஜெட்மீது பெரும் சுமையை ஏற்றின. பட்ஜெட் வருவாய் ரூ.171.15 கோடி, செலவு ரூ.197.39 கோடி.

டி.டி.கிருஷ்ணமாச்சாரி (1957-1958 & 1964-1966)

தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி இந்தியாவின் நிதியமைச்சராக இரண்டு முறை இருந்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், டி.டி.கே குழுமம் என்ற பெயரில் தன் வணிக நிறுவனத்தை 1928-ம் ஆண்டு நிறுவினார். பிறகு அரசியலில் இறங்கினார். இந்திய அரசியல் சாசன வரைவுக்குழுவில் இடம்பெற்றிருந்தார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. 1957-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1957-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இறக்குமதி உரிமம் முறை மூலமாக இறக்குமதிமீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். பணம் செலுத்துதலில் இருக்கும் ஆபத்துகளிலிருந்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இ.ஆர்.ஐ.சி (Export Risk Insurance Corp) என்ற அமைப்பை உருவாக்கினார். சொத்து வரி, செலவினங்கள் மீதான வரி, ரயில் பயணக் கட்டணம் மீது வரி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறை உள்கட்டமைப்புகள் ஆகியவற்றைக் கட்டமைத்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். சமூகப் பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்திய இவர், 1964-ம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தை விரிபடுத்தினார். `புதிய குடும்ப ஓய்வூதியத் திட்டம்’ என்ற ஒன்றைக் கொண்டுவந்து, மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் பயனடையும் வகையில் திட்டத்தை மாற்றினார். சுதந்திர இந்தியாவின் முதலாவது மிகப்பெரிய ஊழலான `முந்த்ரா’ ஊழலில் இவரின் பெயர் தொடர்புப்படுத்தப்பட்டதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சி.சுப்பிரமணியம் (1975-1977)

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையத்தில் பிறந்தவர் சி.சுப்பிரமணியம். ராஜாஜியின் வழிகாட்டலில் அரசியலும் நிர்வாகமும் பயின்ற சி.சண்முகம், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இந்திய அரசியல் சாசன சபையில் உறுப்பினராக இருந்து, இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் பங்களித்தவர். 1952 முதல் 1962-ம் ஆண்டு வரை மாநில அரசில் கல்வி, சட்டம் மற்றும் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.

இவருக்கு முன்னதாக நிதியமைச்சராக இருந்த ஒய்.பி.சவான் மேற்கொண்ட வரிச் சீர்திருத்தங்களை, இவர் தொடர்ந்து எடுத்துச் சென்றார். நாட்டில் அவசரநிலை பிரகடனப் பட்டிருந்தபோதிலும், வரி விகிதங்களைக் குறைத்தார். சொத்து வரி விகிதங்களையும் குறைத்தார். வரிச்சட்டங்களில் 1976-ம் ஆண்டில் திருத்தங்களைக் கொண்டுவந்து `மூலத்தின் (Source) அடிப்படையிலான வரிவிதிப்பு’ என்ற முறையைக் கொண்டுவந்தார்.

ஆர்.வெங்கட்ராமன் (1980-1982)

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆர்.வெங்கட்ராமன். சட்டம் படித்தவர். 1980 முதல் 1982-ம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராகவும், 1982 முதல் 1984-ம் ஆண்டு வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1984-ம் ஆண்டு குடியரசுத் துணைத்தலைவராகப் பதவியேற்ற ஆர்.வெங்கட்ராமன், 1987-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரானார்.

ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம்
ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம்

மத்திய நிதியமைச்சராக, 1980-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், உயிர் காக்கும் மருந்துகளுக்குக் கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. சைக்கிள் மற்றும் சைக்கிள் உதிரி பாகங்கள், பற்பசை, தையல் இயந்திரம், பிரஷர் குக்கர், மலிவு விலை சோப்புகள் ஆகியவற்றுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.8,000 - ரூ.12,000 வரை என்று முதலாவது பட்ஜெட்டிலும், ரூ.15,000 என இரண்டாவது பட்ஜெட்டிலும் அவர் அதிகரித்தார்.

ப.சிதம்பரம் (1997-1998, 2004-2008, 2012-2014)

சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ப.சிதம்பரம் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் 1984-ம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்றார். மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் என ப.சிதம்பரம் பதவிகளை வகித்தார். 1997-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்றார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட், `கனவு பட்ஜெட்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பட்ஜெட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன், வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அதன் பிறகு அவர் எட்டு பட்ஜெட்களைத் தாக்கல் செய்தார். அதிக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களில் மொரர்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ப.சிதம்பரம்.

`மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர்’ என்ற பெருமையைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமன்

மதுரையில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி சீதாலெட்சுமி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தபோது, மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும், மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார் நிர்மலா.

Budget
Budget

கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்தபோது, மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன். `மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண் அமைச்சர்’ என்ற பெருமையைப் பெற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு நிதியமைச்சர் பதவியை வகிப்பவர் நிர்மலாதான். கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதை அறிய இந்திய மக்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்!

தாய்நாட்டுக்கு பட்ஜெட் போடுவதில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமிருப்பதை நினைத்து நாம் நிச்சயம் பெருமைப்படலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு