பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

திருமணத்துக்கு முன்... பார்க்க வேண்டிய 5 ஃபைனான்ஷியல் பொருத்தங்கள்!

financial
பிரீமியம் ஸ்டோரி
News
financial

நிதித் திட்டமில்

திருமணத்துக்கு முன், பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பத்து பொருத்தங்களில் எத்தனைப் பொருத்தங்கள் பொருந்திவருகின்றன எனப் பார்ப்பார்கள். பிறகு கல்யாண மண்டபம் முதல் குழந்தையின் ஸ்கூல் வரை எல்லா விஷயங்களைப் பற்றியும் கலந்தாலோசிக்கும் மணமக்கள், நிதி விஷயங்களைப் பற்றி மட்டும் அதிகமாகப் பேசுவதில்லை. நிதி விஷயங்களைப் பற்றி முதலிலேயே பேசிவைத்துக்கொண்டால், வாழ்வின் இலக்குகளை எளிதாக அடைய முடியும். அதே நேரத்தில், தாம்பத்ய வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் இருக்கும். ஆனால், நூற்றில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் மட்டுமே நிதி விஷயங்களைப் பற்றி கலந்தாலோசிக்கின்றன. திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் கலந்தாலோசிக்க வேண்டிய முக்கிய நிதி விஷயங்கள் குறித்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன்.

சா.ராஜசேகரன்
சா.ராஜசேகரன்

கடன் நிலைமை

உங்கள் வாழ்க்கைத்துணையின் கடந்தகால மற்றும் தற்போதைய கடன் நிலைமை, உங்கள் எதிர்காலச் செலவுகள் மற்றும் முதலீட்டுத் திட்டமிடலை வெகுவாக பாதிக்கும். திருமணச் செலவுக்காவோ அல்லது திருமணத்துக்கு முன் வீடு அல்லது வாகனம் வாங்குவதற்காகவோ கடன் வாங்கியிருக்கலாம். திருமணத்துக்குப் பின், சம்பளத்தின் பெரும் பகுதி வட்டிக்கோ அல்லது வீட்டுக் கடன் இ.எம்.ஐ செலுத்தவோ சென்றுவிடும். இது குறித்து திருமணத்துக்கு முன்னர் பேசாமல் விட்டுவிட்டால், குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்பட ஆரம்பித்து, சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. அதனால் கடந்தகால கடன்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். நீங்கள் ஏற்கெனவே இருக்கும் கடன்களிலிருந்து விடுபட, தம்பதியாகச் சேர்ந்து முயலலாம். மேலும், எதிர்காலக் குறிக்கோள்களுக்காகக் கடன் வாங்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்வதும் நல்லது.

ஜாயின்ட் வங்கிக் கணக்கு

திருமணத்துக்குப் பிறகு இரண்டு தனித்தனி வங்கிக் கணக்குகளை வைத்துக்கொள்ளலாமா அல்லது ஜாயின்ட்டாக ஒரு வங்கிக் கணக்கை வைத்துக்கொள்ளலாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம். திருமணம் முடிந்தவுடன் ஒரு ஜாயின்ட் கணக்கைத் திறந்து, வரவு செலவுகளை மேற்கொள்ளலாம். திருமணம் முடிந்ததும் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு மனைவியை நாமினியாக நியமிப்பது நல்லது. தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை வருவாய்க்கேற்ப எஃப்.டி., ஆர்.டி., மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

பெற்றோர்களுக்கு உதவி

குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்கும் ஒரு பெண்ணால் திருமணத்துக்குப் பிறகு அவற்றை விட்டுவிட்டு எளிதில் வெளிவர முடியாது. மகள்கள் வீட்டின் நிதிகளை நிர்வகித்தவர்களாகவும் இருந்திருக்கலாம். பெண்கள் வருமானத்தின் ஒரு பகுதியை அவர்களின் பெற்றோர்களுக்குக் கொடுக்க விரும்பலாம். சில நேரங்களில், திருமணத்துக்காவோ, கல்விக்காகவோ பெற்றோர் வாங்கிய கடனை அடைக்கும் கடமையும் இருக்கலாம். இந்தப் பொறுப்புகளைப் பற்றி வாழ்க்கைத்துணையுடன் முன்கூட்டியே பேசிவிடுவது மிகவும் நல்லது.

திருமணத்துக்கு முன்... பார்க்க வேண்டிய 5 ஃபைனான்ஷியல் பொருத்தங்கள்!

நிதி இலக்குகள் சீராக இருக்கின்றனவா?

நிதி இலக்குகளை அடைவதற்கு பட்ஜெட் போடுவது மிக முக்கியம். சம்பளம் வந்த முதல் நாள், ஒரு மணி நேரம் செலவு செய்து, அந்த மாதத்துக்கான பட்ஜெட்டை முடிவு செய்வதன் மூலம் செலவைக் குறைத்து, முதலீட்டை அதிகரித்து, நம் நிதி இலக்குகளை எளிதில் அடையலாம். சம்பளத்திலிருந்து, வட்டி, இ.எம்.ஐ மற்றும் அத்தியாவசியத் தேவைகள் போக, மீதமிருக்கும் பணத்தில் ஒரு பங்கை, அவசரகால நிதியாகச் சேமிக்க வேண்டும். இது, குறைந்தபட்சம் நமது மூன்று மாத சம்பளத்துக்கு நிகரானதாக இருக்க வேண்டும். பிறகு, நமது நிதி இலக்குகளுக்காகப் பணம் சேர்க்க வேண்டும். நமது வருமானத்தால், நமது நிதி இலக்குகளை அடைய முடியுமா என்று பார்க்க வேண்டும்.

உதாரணமாக, கார் வாங்க நினைத்தால் அதன் விலை நமது பத்து மாத வருமானமாக இருப்பது சிறந்தது. நமது வருமானத்தில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் மட்டுமே வாங்க முடியும்; ஆனால், நமது ஆசை பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவது என்றால், அதற்கு ஏற்ப, நமது வருமானத்தை உயர்த்த வேண்டும். இது பற்றியெல்லாம், திருமணத்துக்குப் பிறகு பேசுவதைவிட, திருமணத்துக்கு முன்பே பேசிவிடுவது முக்கியம்.

செலவா, சேமிப்பா?

நம் எல்லோருக்குமே கனவுகள் உண்டு. நீங்கள் ஷாப்பிங் பிரியராக இருக்கலாம்; பயணக் காதலராக இருக்கலாம். ஆனால், உங்கள் துணையோ சேமிப்பை விரும்புபவராக இருக்கலாம். இதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். அதிகம் செலவு செய்ய விரும்பும் பின்னணியிலிருந்து நீங்கள் வந்திருக்கலாம். உங்கள் துணையோ சிக்கனத்தை ஊக்குவிக்கும் வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கலாம். இந்தப் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் வாதங்கள் எழக்கூடும். ஒவ்வொரு நபருக்கும் பணத்தை நிர்வகிக்க வெவ்வேறு வழிகள் உள்ளன. ஆனால், தம்பதியராக வாழ்க்கையில் ஒன்றாகப் பயணிக்க முடிவு செய்யும்போது, நீங்கள் இருவரும் ஒரே விதத்தில் செலவு செய்தால், நிதிப் பிரச்னைகளை வெகுவாகத் தவிர்க்க முடியும்.

திருமணத்துக்கு முன், நமது நிதி இலக்குகளைப் பற்றி நிதி ஆலோசகருடன் பகிர்ந்துகொண்டு அவர்களின் ஆலோசனைப்படி நிதி முடிவுகளை எடுப்பது நல்லது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லையென்றாலும், இன்று நம் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது பணம்தான். இதைப் பற்றி முதலிலேயே கலந்தாலோசித்துவிட்டால், உங்கள் குடும்ப வாழ்வு சுகமாக அமைந்துவிடும்!