Published:Updated:

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் ஆனந்த விகடன்!

சாமான்யனின் குரலாக இருக்கும் ஆனந்த விகடனுக்கு, பீகார் காவல்துறையின் இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆனந்த விகடன்
ஆனந்த விகடன்
“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமையை நான் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்!”
Ananda Vikatan
Ananda Vikatan

வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட வால்டேரின் வரிகள் இவை. கருத்துச்சுதந்திரத்துக்கான அடிப்படையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல் இது. ஆனால், கருத்துச்சுதந்திரத்தின் இந்த அடிப்படை மதிப்பீடு கேள்விக்குள்ளாகும் சூழல்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

'சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்கும் எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டு’ என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர், இந்தியாவின் ஆளுமைமிக்க 49 பிரபலங்கள். அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், மணிரத்னம், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா, நடிகைகள் அபர்ணா சென், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யலாம் என பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் இதற்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இன்று (09.10.2019) நூற்றுக்கும் அதிகமான பிரபலங்கள் இந்த வழக்கு நடவடிக்கைக்கு எதிராக மற்றுமொரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

Right to Freedom of Speech
Right to Freedom of Speech

கருத்துச்சுதந்திரத்துக்கு எப்போதும் தோளோடு தோள் நிற்கும் விகடன், இதை நாளை (10.09.2019 ) வெளியாகும் ஆனந்த விகடன் தலையங்கத்தில் 'கருத்துச்சுதந்திரம் காக்கக் கைகோப்போம்!' என்ற தலைப்பில் அதன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. இந்த வார ஆனந்த விகடன் இதழில் இதுகுறித்து அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என ஆனந்த விகடனின் ஆசிரியர் குழு தீர்மானித்தது. அதற்கேற்ப, அச்சு இதழில் தலையங்கம், அட்டைப்படம், பிரபலங்களின் கருத்துகளுடன் கூடிய கட்டுரை என கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான தன் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

இத்தகைய சூழலில், இன்று மாலை பீகார் காவல்துறை, இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி இந்த வழக்கை முடித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது. அதே போல், வழக்குப் பதிவு செய்த சுதீர் ஓஜா மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இதுகுறித்துப்பேசிய காவல்துறை அதிகாரி ஜிதேந்திர குமார், "இது விளம்பர நோக்கில் பதியப்பட்ட வழக்கு. ஆதலால், ஓஜாவின் மீது வழக்கு பதிய இருக்கிறோம் " என்றார்.

சாமான்யனின் குரலாக இருக்கும் ஆனந்த விகடனுக்கு, பீகார் காவல்துறையின் இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விகடன் தன் 93 ஆண்டு கால வரலாற்றில், என்றுமே கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும், அதற்கு எதிரான சூழல் உருவாகும் போது, அதைத் தட்டிக் கேட்க தயாராகவும் இருந்திருக்கிறது. இருக்கும். விகடனுக்கு இந்தச் செய்தி இந்த நாளை மேலும் இனிமையாமதாக்குகிறது.