கட்டுரைகள்
Published:Updated:

ஆனந்த விகடன் பொக்கிஷம்... கப்பலில் வந்த காய்ச்சல்

ஆனந்த விகடன் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் பொக்கிஷம்

19-06-1957 இதழிலிருந்து...

எலுமிச்சம்பழமே, உனக்கு ஓராயிரம் கோடி நமஸ்காரம். உலகத்தைப் போல் நீயும் உருண்டையாய் இருக்கிறாய் என்பதற்காக நான் உன்னை வணங்கவில்லை; அல்லது உப்பிலும் சேருவாய், சர்க்கரையிலும் சேருவாய், உனக்கு எதுவும் வித்தியாசம் கிடையாது என்ற உத்தம குணத்தைக் கண்டும் நான் உன்னை வணங்கவில்லை. பின் எதற்கு உன்னை வணங்குகிறேன் தெரியுமா? இத்தனை நாளாய் மனிதனின் பல்லுக்கு மட்டும் சத்துருவாய் விளங்கி, அவன் பல்லைப் பதம் பார்த்த நீ, இன்று இன்புளூயன்ஸா கிருமிகளின் பல்லை உடைத்து அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாய் என்றும், உன் பெயரைக் கேட்டதுமே இன்புளூயன்ஸா கிருமிகள் ஓடுகின்றன என்றும் சிலர் சொல்கிறார்களே அதற்காக உனக்கு வணக்கம்!

‘எலுமிச்சம் பழச்சாற்றை வெந்நீரில் விட்டுச் சிறிது உப்பு போட்டு சாப்பிட்டால் இந்த இன்புளூயன்ஸா வியாதி வராது’ என்று ஒருவர் கூறுகிறார்.

ஆசியா
ஆசியா

இன்னும் ஒரு விசேஷம். இப்பொழுது எங்கு திரும்பினாலும் திடீரென்று பக்தி ஏற்பட்டிருக்கிறது! வீட்டுக்கு வீடு பக்தி, வீதிக்கு வீதி பக்தி! தெய்வமே இல்லை என்று கூறுவோரின் இல்லங்களிலும் பக்தி! ஆபீசிலும் பக்தி, அடுக்களையிலும் பக்தி! அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் சாம்பிராணிப் புகை!

இந்தச் சாம்பிராணிப் புகையிலும் இன்புளூயன்ஸா கிருமிகள் இறந்து விடும் என்ற நம்பிக்கை! இதனால் ஊரே மணக்கிறது! இதன் காரணமாக குங்கிலியம் ரோசனம் கோந்து எல்லாமே சாம்பிராணியாக மாறிவிட்டன.

எலுமிச்சம்பழம், சாம்பிராணி, இன்புளூயன்ஸா மிக்சர், நீலகிரித் தைலம், அமிர்தாஞ்சனம், வைட்டமின் சி மாத்திரை நிலவேம்புக் கசாயம், சித்தரத்தைக் கசாயம் எல்லாம் கியூவில் நின்று இந்த அரக்கனை விரட்டப் பார்க்கின்றன. ஆனால் இந்த அரக்கனோ இவைகளுக்கு எல்லாம் அஞ்சுவதாகத் தெரியவில்லை!

இந்த சுரத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு நண்பரைப் பார்க்கச் செல்லுபவர், வாய் திறந்து விசாரிக்காமல், வாயில் துணியை வைத்துக்கொண்டு மௌனமாக நின்று தலையை மட்டும் ஆட்டுகிறார். ஏன்? இந்த இன்புளூயன்ஸா காய்ச்சல் உள்ளவர்களுடன் பேசினாலே காய்ச்சல் ஒட்டிக்கொண்டுவிடுமாம்!

இது ஊருக்கே வந்த ஒரு சாபம் போலும்! பாதிக்குமேல் பஸ்கள் ஓடவில்லை. டாக்டர்கள் வீட்டு வாசலில் கியூ வரிசைகள் நிற்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பலர் வேலைக்கு வரவில்லை. வீடுகள் எங்கும் இருமல், காய்ச்சல், முக்கல் , முனகல்! இவ்வாறு ஊரையே பிடித்து ஆட்டுகிறது கப்பலில் வந்த இந்தக் காய்ச்சல். ஒவ்வொரு தாயும் தந்தையும் எங்கே தங்கள் வீட்டுக்குள் இந்த வியாதி நுழைந்துவிடுமோ என்று பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வளவு பயத்திற்கும் காரணம் என்ன?

1919-ம் வருசம் ஒரு இன்புளூயன்ஸா காய்ச்சல் நாட்டில் பரவியது. அது பல ஆயிரக்கணக்கானவர்களைப் பலியாக்கிவிட்டது என்ற பயம் ஒன்று. இன்னொரு பயம், அணுகுண்டு வெடிப் புகைகளால் ஏற்பட்ட உத்பாதகமோ இது என்ற அச்சம்!

பயந்தவனைக் கண்டால் பசுமாடுகூட முட்ட வரும்போது காய்ச்சல் விடுமா? ஓட ஓட விரட்டுகிறது. இதன் பயனாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை. சினிமாக்களில் மத்தியானக் காட்சிகள் நிறுத்தப்பட்டன. பயப்படாதீர்கள் என்று அறிக்கைகள் பறக்கின்றன. இந்த அறிக்கைகளைப் பார்த்ததும் பயம் அதிகரிக்கிறது. ஆனால் காய்ச்சலோ நகரிலிருந்து இப்போது மற்ற ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது என்று கேள்விப்படுகிறோம்.

இது பரவுகிற வேகத்தைக் காட்டிலும் இதனால் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் கிலியைக் கண்டு விகடன் திடுக்கிட்டுவிட்டான். வியாதியைத் தடுத்துவிடலாம். ஆனால் கிலியைத் தடுப்பதற்கு எத்தனை டாக்டர்கள் இருந்தாலும் போதாது என்று யோசித்தான். இந்த வியாதியைத் தடுப்பதற்கு ஒரு நிச்சயமான மருந்து இருக்குமாயின் ஜனங்களின் பயம் ஒருவாறு நீங்கும் என்று யோசித்த உடனே வைத்திய முனிவர் குருசாமி முதலியாரை அணுகினான்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்

என்னும் திருக்குறளில் கண்டபடி குருசாமி முதலியார் அவர்கள் வைத்தியனுக்கு உரிய இலக்கணங்கள் முழுவதும் அமைந்தவர்கள்.

அவரைப் பேட்டி கண்ட பிறகுதான் விகடனின் கவலை நீங்கியது.

டாக்டர் குருசாமி முதலியார் கூறுவது என்ன?

“இந்த இன்புளூயன்ஸா கிருமிகள் காற்றோடு பரவக்கூடியவை. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கஷ்டத்தால் இவைகளைத் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவைப் போன்ற ஜன நெருக்கம் மிகுந்த நாடுகளில் இது நுழைந்துவிட்டால் அது சில நாள்கள் இருந்துவிட்டுத்தான் போகும். ஆனால் இது பறக்கும் வியாதி போன்றது. வெகு சீக்கிரத்தில் இந்த நாட்டை விட்டுப் பறந்து போய்விடும்! அதோடு இப்பொழுது வந்துள்ள சுரம் கடுமையானதல்ல, ஆதலால் பயமில்லை’’ என்றார்.

ஆனந்த விகடன் பொக்கிஷம்... கப்பலில் வந்த காய்ச்சல்

“காய்ச்சல் கண்டவர்களுக்கு அருகில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு இது எளிதில் பற்றிக்கொள்ளும். உதாரணமாக, நோயாளி இருமும்போது நாம் ஐந்தடி தூரத்தில் இருந்தால் உடனே தொற்றிவிடும்; பத்தடி தள்ளி இருந்தால் சற்று நேரமாகும்; எட்டி இருந்தால் கிட்ட வராது’’ என்றும் சொன்னார்.

“ இந்த நோய் ஒருவரைத் தாக்கியிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள் என்ன?” என்று கேட்டபோது முதலில் தொண்டையில் கரகரப்பும் நெஞ்சுக்கட்டும் ஏற்படும். அதன்பின் உடம்பு முழுவதிலும் வலி ஏற்படும். உடனே சுரம்! சில நாள்கள் இருந்துவிட்டுப் போய்விடும்” என்று தெரிவித்தார்.

“அணுகுண்டு வெடிப்பினால் இந்த சுரம் ஆசிய நாடுகள் பூராவும் பரவி இருக்கிறது என்றுகூடச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே’’ என்று கேட்டதற்கு, அவர் சிரித்துவிட்டு “இந்தக் கட்டுக்கதை பரவுவதைத் தடுக்க முடியாது. ஆனால், இந்த சுரத்தைத் தடுத்துவிடலாம்” என்றார்.

“இது எஸ் எஸ் ரஜூலாவில் இருந்துதான் இறக்குமதி ஆயிற்று. பாவம் கப்பலை நடுக்கடலிலிருந்து திருப்பி அனுப்பிவிடாமல் நம்மவர்கள் அதை வரவேற்றார்கள். நம் டாக்டர்களும், நர்சுகளும் உதவி செய்யப்போய் இதை வாங்கி வந்து ஊரெங்கும் விநியோகம் செய்துவிட்டு, தாங்களும் ஜனங்களோடு சேர்ந்து தவிக்கிறார்கள். இந்தக் காய்ச்சல் ஒரு உல்லாசப் பிராணியைப் போன்றது! முதலில் ஜப்பானில்தான் இது ஆரம்பித்தது. பிறகு இந்தோ சீனாவுக்கு திக் விஜயம் செய்தது; அதன்பின் சிங்கப்பூரிலும் மலாய் நாட்டிலும் சுற்றிப்பார்த்துவிட்டு இப்போது சென்னையைப் பார்க்கக் கப்பலில் வந்திருக்கிறது. இங்கு இதன் திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டு பம்பாய்க்குப் போயிருக்கிறது! அதன்பின் வேறு எங்காவது காற்றோடு போய்விடும்” என்றார்.

“அதுவரையில் நம் கஷ்டத்துக்கு மருந்து என்ன?”

“எல்கோஸின்...’’

“இந்த எல்கோஸின் மாத்திரை எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். அதை இப்பொழுதே கையில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாய் ஒரு வாரம் சாப்பிடுங்கள். இந்தக் காய்ச்சல் அணுகாது, வருமுன் காப்பது நல்லது. காய்ச்சல் கண்டவர்கள் காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் சாப்பிடலாம். காய்ச்சல் உடனே குணமாகும். என்னுடைய அனுபவத்தில் இந்த மருந்து உடனே சுரத்தைக் கண்டிக்கிறது” என்றார் டாக்டர்.

ஆனந்த விகடன் பொக்கிஷம்... கப்பலில் வந்த காய்ச்சல்

“எலுமிச்சம்பழம் சாம்பிராணி இவைகள் எல்லாம்” என்று கேட்டேன்.

“இதெல்லாம் மனச் சாந்தியைக் கொடுக்கலாம். ஆனால் சுரத்தை நிறுத்தி விடாது” என்று சொல்லிய டாக்டர் மேலும் ``மக்களுக்கு நான் சொல்லக்கூடியது இதுதான்’’ என்றும் சொன்னார்:

1 . இந்த சுரம் பரவுவதைக் கண்டு அதிகமான பீதி அடைய வேண்டியதில்லை

2. ஜனக்கூட்டமாய் உள்ள இடங்களில் அதிகம் நிற்காதீர்கள்.

3. முடியுமானால் திறந்தவெளியில் படுங்கள்.

4. சுரம் கண்ட நபரிடம் நெருங்கிப் பேசாதீர்கள்.

5. ஒரு வீட்டில் யாருக்காவது சுரம் கண்டால் மற்றவர்கள் முன்ஜாக்கிரதையாகவே தினம் இரண்டு வேளை நான்கைந்து நாள்களுக்கு எல்கோஸின் மாத்திரைகள் உட்கொள்ளுங்கள்.

6. சுரம் கண்டவர்கள் சுரத்தின் வேகத்திற்கு தக்கபடி தினமும் மூன்று அல்லது நான்கு மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

7. குழந்தைகளுக்குப் பாதி அளவு கொடுத்தால் போதும்.

இந்த எல்கோஸின் மாத்திரைகளைக் கடைகளிலிருந்து ஜனங்கள் நேரிடையாக வாங்கிவிட முடியாது என்றும், வைத்தியர்களின் சீட்டு வாங்கிக்கொண்டுதான் பெற முடியும் என்றும் நாம் அறிகிறோம். எனவே இந்த சுரம் பரவியுள்ள ஊர்களில் உள்ள வைத்தியர்கள் தாராளமாக இதற்குச் சீட்டுகள் வழங்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம்.