Election bannerElection banner
Published:Updated:

ஆந்திரா: ஒதுங்கிய மக்கள்... சடலத்தைத் தூக்கிக்கொண்டு 1 கி.மீ நடந்தே சென்ற பெண் உதவி ஆய்வாளர்!

சடலத்தைத்  தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.
சடலத்தைத் தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.

இறந்தவரின் உடலை மீட்க பொது மக்கள் யாரும் முன் வரவில்லை. எனவே, தானே அந்த உடலை மீட்டு காவல்துறை வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு தூக்கிக்கொண்டு நடந்தே வந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் - ஶ்ரீகாகுளம் பகுதியில், ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு, இறுதிச்சடங்கு செய்வதற்காகத் தன் தோளில் தூக்கி 1 கிலோ மீட்டர் பயணம் செய்த காவல்துறைப் பெண் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சடலத்தை  தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.
சடலத்தை தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.

`ஆந்திர மாநிலம் அடவி கொத்தூர் கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் ஆதரவற்ற ஒரு நபர் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதியில் உள்ள காசிபுகா காவல் நிலையத்தில் பொது மக்களால் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா சம்பவ இடத்துக்கு காவல்துறை பணியாளர் களுடன் சென்றுள்ளார். குறுகிய சாலை என்பதால், காவல்துறை வாகனத்தை சம்பவ இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றுள்ளார்.

இறந்தவரின் உடலை மீட்க பொது மக்கள் யாரும் முன் வரவில்லை. எனவே, தானே அந்த உடலை மீட்டு காவல்துறை வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு தூக்கிக்கொண்டு நடந்தே வந்துள்ளார். இது குறித்து சிரிஷா வழங்கிய பேட்டி ஒன்றில், ``நான் இளங்கலை பார்மஸி முடிச்சுருக்கேன். எங்க அப்பாவின் ஆசையை நிறைவேற்றத்தான் காவல்துறை பணிக்குச் சேர்ந்தேன். ஆனால், காவல்துறை சீருடையை அணிந்த அன்றே என்னோட ஒவ்வொரு நிமிஷமும் மக்களுக்கானது என்பதை முடிவு செய்துவிட்டேன்.

சடலத்தைத் தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.
சடலத்தைத் தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.

மக்கள் கொடுத்த புகாரின் பேரில் காசிபுகா அருகில் உள்ள சம்பங்கி புரத்துக்கு விசாரணைக்குச் சென்றேன். இறந்தவரின் உடலை சோதனையிட்டதில், அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வயது முதிர்வு மற்றும் பசியின் காரணமாகவே உயிர் இழந்துள்ளார் என்பது உறுதியானது. பொது மக்களிடம் அவரைப் பற்றிய தகவலை விசாரித்தபோது, அடவி கொத்தூர் பகுதியில் சாலையில் வசிப்பவர் என்பது தெரிய வந்தது.

அவரின் உடலை மீட்க அந்தப் பகுதி மக்களிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. யாரும் அருகில் வந்து பார்க்கக்கூட தயாராக இல்லை. பொது மக்களோட மனநிலையில் நாமளும் இருக்கக் கூடாது என்பதற்காக அவரை மீட்க எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்தேன். மிகவும் குறுகிய சாலை. அதனால் வாகனங்கள் எதுவும் ஊருக்குள் வர இயலாத சூழல். மக்களிடம் இருசக்கர வாகன உதவி கேட்டோம் கிடைக்கவில்லை.

சடலத்தைத் தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.
சடலத்தைத் தூக்கிச் செல்லும் காவல் துறை உதவி ஆய்வாளர்.

அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து ரெண்டு பேர் உதவ முன்வந்தாங்க. அவர்களோடு சேர்ந்து 25 நிமிடம் நடைப்பயணமாக இறந்தவரின் உடலை தூக்கிக் கொண்டு காவல்துறை வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அவரின் உடலை தூக்கிக்கொண்டு வரும்போது பயமோ, தேவையில்லாத உணர்ச்சிகளோ, பொது மக்களின் மீது கோபமோ இல்லை. என் கடமையைச் செய்திருக்கிறேன். ஆனாலும் மக்களின் மனநிலை மாற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு