Published:Updated:

சுஜித் வீடு அருகே இருந்த மற்றொரு ஆழ்துளைக் கிணறு! - களத்தில் இறங்கி மூடிய அதிகாரிகள்

சுஜித் உயிரிழந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு ஆழ்துளைக்கிணறு இருந்ததை திருச்சி மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றது விகடன்.

ஆழ்துளைக்கிணறு
ஆழ்துளைக்கிணறு

கடந்த 25-ம் தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். அவனின் உடல் திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நடுக்காட்டுப்பட்டியை அடுத்துள்ள பாத்திமா புதூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் சிறுவன் தவறி விழுந்த ஆழ்துளைக்கிணறு சிமென்ட் கலவை போட்டு மூடப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு திரண்டு வந்த ஏராளமான பொதுமக்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டு வருகிறார்கள்.

சுஜித்தின் தாய்
சுஜித்தின் தாய்

சிறுவன் சுஜித் வில்சன் அடக்கம் செய்யப்பட்டதும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றனர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சுஜித் வில்சனின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். இன்று மாலை நடுக்காட்டுப் பட்டிக்கு வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.

இந்தநிலையில், சுஜித் வில்சன் சிக்கிக்கொண்ட ஆழ்துளைக் கிணறு அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே இன்னொரு ஆழ்துளைக் கிணறு ஒன்று முறையாக பராமரிக்கப்படாமல் பெரும் பாறாங்கல்லை வைத்து மூடிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 5 நாள்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரிய ரிக் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தோல்வி அடைந்து, சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த வாகனங்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு
மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு
vikatan

மீட்புப் பணிகள் கடந்த 5 நாள்களாக தீவிரமாக நடந்து வந்த நிலையில், அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே இன்னொரு ஆழ்துளைக்கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கிணறு வெறுமனே பாறாங்கல்லை வைத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில்தான் இருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றுக்கு அருகே உள்ள ஒரு கிணற்றில் சுஜித் வில்சனின் உறவினரும் ராணுவ வீரருமான ஜான் பிரிட்டோ என்பவர் கோழியைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் தவறி விழுந்து தண்டுவடத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன்பிறகு அந்தக் கிணற்றைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டது. இப்படியொரு சூழலில்தான், ஆள்துளைக் கிணற்றில் சிக்கி சுஜித் வில்சன் இறந்துள்ளார். இன்னொரு உயிர்ப்பலி நிகழ்வதற்குள்ளாக பராமரிப்பில்லாமல் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை முறையாக மூட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவைத் தொடர்பு கொண்டு, சுஜித் வில்சன் வீடு அருகே ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருப்பது குறித்து தெரிவிப்பதற்காகத் தொடர்பு கொண்டோம். அவர் நம்முடைய அழைப்பை ஏற்காத நிலையில், இதுகுறித்த தகவலை அவருக்கு மெசேஜாக அனுப்பினோம்.

இதையடுத்து, வட்டார வளர்ச்சி அதிகாரி பெரியசாமி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆழ்துளைக் கிணற்றை மூடினர். அப்போது, பேசிய பெரியசாமி, " இதேபோன்று சுற்று வட்டாரப் பகுதிகளில் பராமரிப்பின்றி இருக்கிற அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் கண்டுபிடித்து சில தினங்களில் மூடிவிடுவோம்" என உறுதியளித்தார்.

சிறுவன் சுஜித் வில்சன் வீட்டின் அருகே பராமரிப்பில்லாமல் பாராங்கல்லால் மூடப்பட்டிருந்த இன்னொரு ஆழ்துளை கிணற்றை...

Posted by Vikatan EMagazine on Tuesday, October 29, 2019