Published:Updated:

ஓ.டி.டி தொழில்நுட்பம்... ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடிப் பாய்ச்சல்!

Apple OTT
பிரீமியம் ஸ்டோரி
News
Apple OTT

வாசு கார்த்தி

டெக்னாலஜி

ழக்கமாக தன்னுடைய சேவைகளுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்யும் ஆப்பிள் நிறுவனம், தற்போது தனது உத்தியை மாற்றி, அதிரடியான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மாதம் 99 ரூபாயில் ஆப்பிள் டிவி சேவையைப் பெறலாம் என்பதே அந்த அறிவிப்பு. இது அமெரிக்க டாலர் கணக்கில் பார்த்தால், வெறும் 1.40 டாலர் மட்டுமே. அமெரிக்காவில் இந்தக் கட்டணம் 4.99 டாலர் ஆகும்.

ஓ.டி.டி தொழில்நுட்பம்... ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடிப் பாய்ச்சல்!

ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து நெட் ஃபிளிக்ஸ், டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. போட்டி நிறுவனங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்டவற்றின் கட்டணம் (அமேசான் மாதம் ரூ.129, ஆண்டுக்கு ரூ.999, நெட்ஃபிளிக்ஸ் ரூ.199 முதல் ரூ.799 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது) மிக அதிகமாக இருக்கும் நிலையில், மிகக் குறைந்த விலையை ஆப்பிள் நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்தச் சேவை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. 40 மொழிகளில் டப்பிங் மற்றும் சப் டைட்டிலில் வெளியிடப்படும் எனச் சொல்லப்பட்டிருந்தாலும், எந்தெந்த மொழிகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஒன்பது சீரியல்கள் தொடங்கப்பட உள்ளன. இவற்றை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்க முடியும் என ஆப்பிள் அறிவித்திருக்கிறது.

சர்வதேச அளவில் 140 கோடி எண்ணிக்கையிலான ஆப்பிள் தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளன. ஐபோன், ஐபேட், மேக், ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் ஆப்பிள் டிவியைப் பார்க்க முடியும். இதுதவிர, சாம்சங் ஸ்மார்ட் டிவி, அமேசான் ஃபயர் டிவி, எல்ஜி, சோனி உள்ளிட்ட இதர டிவிகளில்கூட ஆப்பிள் சேவையைப் பெற முடியும். செப்டம்பர் 10-ம் தேதிக்குப்பிறகு, ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கும் அனைவருக்கும் ஓர் ஆண்டுக்கு ஆப்பிளின் இந்தச் சேவை இலவசமாகக் கிடைக்கும்.

ஏன் ஓ.டி.டி?

ஓ.டி.டி துறையில் அதிக வாய்ப்புகள் இருப்ப தால், ஆப்பிள் இதில் களமிறங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு, இந்தியர்களின் மொபைல் டேட்டாவில் 70% திரைப்படம், பொழுதுபோக்கு சம்பந்தமான வீடியோக்களில் தங்களுடைய நேரத்தை செலவு செய்வதாக கே.பி.எம்.ஜி தெரிவிக்கிறது. பெருநகரங்களில் மட்டுமல்ல, நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் போன்ற ஓ.டி.டி (Over The Top - OTT) நிறுவனங்கள் சிறு நகரங்களிலும் வளர்ந்து வருகிறது. தவிர, அதிக சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமல்ல, ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குக்கீழ் சம்பளம் பெறுபவர்களும்கூட இந்த ஓடிடி சேவையைப் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தை. 2023-ம் ஆண்டுக்குள் 50 கோடி இந்தியர்கள் ஓ.டி.டி சேவையைப் பயன்படுத்துவார்கள் என கே.பி.எம்.ஜி அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச அளவிலும் ஓ.டி.டி வளர்ந்து வரும் பிரிவு என்பதால், ஆப்பிளால் இந்தப் பிரிவை ஒதுக்க முடியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கட்டணம் குறைவு ஏன்?

அமேசான், ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், சோனி உள்ளிட்ட பல ஓ.டி.டி நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இவர்களிடம் உள்ள சந்தையைக் கொஞ்சமாவது பெறவேண்டும் என்றால், குறைந்த கட்டணத்தால் மட்டுமே முடியும் என்று புரிந்துகொண்டே ஆப்பிள் இப்படிச் செய்திருக்கிறது. தவிர, ஆப்பிள் 11 போன் மாடல்களின் விலையைச் சுமார் 16% அளவுக்கு இந்தியாவில் குறைத்துள்ளது. இந்த போன் செப்டம்பர் 27-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

ஆப்பிள் போன்களின் விலை அதிகமாக இருப்பதால், இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையில் ஆப்பிளின் பங்கு 1% மட்டுமே. ரூ.20,000-க்குக் கீழே உள்ள ஸ்மார்ட் போன்கள் அதிக விற்பனையாவதால், விலையைக் குறைக்க ஆப்பிள் முடிவெடுத்திருக்கிறது. ஓ.டி.டி சேவை குறித்த புரிந்துகொள்ளல் மக்களிடம் வந்துவிட்டது. இந்த பிசினஸ் மாடலில் தெளிவு ஏற்படுவதற்காக ஆப்பிள் இதுவரை காத்திருந்தது. ஒரிஜினல் படைப்புகளுக்கு (content) சுமார் 600 கோடி டாலர் முதலீடு செய்யத் தயார் எனப் பல்வேறு நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றன.

‘content is the king’ என்பார்கள். இந்த கன்டென்ட்தான் இனி ஓ.டி.டி வடிவில் நம் மக்களைக் கட்டியாள உள்ளது!