Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 62

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அம்மா கொஞ்சம் கோபமாகக் கதைத்தாள். நான் பதிலுக்கு எதுவும் கதையாமல் நின்றுகொண்டேன். பூட்டம்மா போர்வையை விலக்கிக்கொண்டு எழும்பியிருந்தாள்

கடவுள்... பிசாசு... நிலம்! - 62

அம்மா கொஞ்சம் கோபமாகக் கதைத்தாள். நான் பதிலுக்கு எதுவும் கதையாமல் நின்றுகொண்டேன். பூட்டம்மா போர்வையை விலக்கிக்கொண்டு எழும்பியிருந்தாள்

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

மூன்று மணித் தியாலங்களுக்கு மேல் அந்த மரத்தடியிலேயே அமர்ந்திருந்தேன். அங்கிருந்த போராளி, இடையிடையே வந்து கதைத்துவிட்டுப்போனார். அவருக்கு இயக்கத்தின்மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன என்பதை அறிய முடிந்தது. “என்னோடு கதைப்பதைப்போல உங்களுடைய பொறுப்பாளரிடம் விமர்சனங்களைச் சொல்வீர்களா?” என்று கேட்டேன். “நான் தமிழ்ச்செல்வனிடமே சொல்வேன்!” என்றார். நான் சிரித்துக்கொண்டு, ‘அப்படித்தான் இருக்க வேண்டும்’ என ஆமோதித்துத் தலையசைத்தேன். அந்த முகாமைவிட்டு நான் வெளியேறும் நேரத்துக்கு முன்பு, அவர் வேறெங்கோ புறப்பட்டார். முகாம் தனித்துக்கிடந்தது. நான் உள்ளே செல்லவில்லை. அந்த மரத்தடியிலேயே அமர்ந்திருந்தேன். மாலையானதும் நுளம்புக்கடி அதிகமாக இருந்தது. சகிக்க முடியவில்லை. நானும் முகாமைவிட்டு வீதிக்கு வந்தேன். மீண்டும் கிளிநொச்சிக்குப் பேருந்தில் ஏறிப் பயணிக்க வேண்டும். புதுக்குடியிருப்பிலிருந்து வருகிற பேருந்தில் ஏறினேன். இரண்டு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சீருடையோடு நின்றுகொண்டிருந்தனர். ஒருவர் நன்றாகத் தெரிந்த முகம். பன்னிச்சையடி கிராமத்தைச் சேர்ந்தவர். என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்கே வா!’ என்று கையசைத்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சென்றேன்.

“இப்ப எங்க இருக்கிறியள்?” என்று கேட்டார்.

நாங்கள் இடம்பெயர்ந்திருக்கும் இடத்தைச் சொன்னேன். அம்மாவின் சுகநலத்தை விசாரித்தார். எல்லோரும் சுகமென்று ஆசைக்காகச் சொன்னேன். அவர் முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றலாகியிருப்பதைச் சொன்னார். தமிழீழ காவல்துறையின் மிக முக்கியமான ஆளுமையாக அறியப்பட்டவர் இவர். பன்னிச்சையடி கிராமத்துக்குப் பெருமை சேர்த்தவர்களில் இவருமொருவர். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி, வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன். சொந்த மண்ணில் நடந்து திரியும் சுகவுணர்வு, மனித ஆத்மாவுக்கு அளவில்லாத இன்பத்தை மீட்டுகிறது. நிகழும் வாழ்வு இறந்தகாலத்தில் எச்சமென மிஞ்சுகையில், இந்த நிலம் முழுவதும் விடுதலை கண்டிருக்குமா என்று மனதுக்குள் நினைத்தேன். மண்ணுக்காகப் போரிட்டு, மண்ணுக்குள் விதைந்து, மண்ணிலிருந்து முளைவிட்டுச் செடியெனத் துளிர்க்கும் வீரயுகத்தின் சாவும் வாழ்வும் யாராலும் நம்ப முடியாதவை. நான் வீட்டை அடைந்ததும் பூட்டம்மாவைப் பார்த்தேன். அவள் நன்றாகப் போர்த்தியபடி படுத்திருந்தாள். ஆழமான கடலில் அலைகளற்ற பொழுதைப்போல கண்களை மூடியிருந்தாள். அம்மா ரொட்டிக்குப் பச்சைமிளகாய் வெட்டிக்கொண்டிருந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 62

“எங்கையடா உலாத்திப்போட்டு வாறாய்?”

“எங்கையெண்டு இல்லாமல் சும்மா பஸ்ல ஏறி போய்ட்டு வந்தனான்.”

“உனக்கென்ன விசரே, மாறி மாறி கிபிர் அடிக்குது. நீ சும்மா சுத்தி திரியிறாய்.”

அம்மா கொஞ்சம் கோபமாகக் கதைத்தாள். நான் பதிலுக்கு எதுவும் கதையாமல் நின்றுகொண்டேன். பூட்டம்மா போர்வையை விலக்கிக்கொண்டு எழும்பியிருந்தாள். என்னைப் பார்த்து ‘`இங்கே வா’’ என்று அழைத்தாள். அவளுக்கருகில் ஓடிப்போனேன்.

“உனக்கு நல்ல நிழல் தேவைப்பட்டது, அப்பிடித்தானே”? என்று கேட்டாள்.

எனக்குக் கொஞ்சம் நடுக்கமாயிற்று. பூட்டம்மாவுக்கு எப்படி எல்லாம் தெரிகிறது. விரிக்கப்பட்ட சாக்கு மேல் படுத்திருந்தபடி எல்லாவற்றையும் அறியும் பூட்டம்மாவையே அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ஓம், எனக்கு நிழல் தேவைப்பட்டது. தேவைப்படுகுது.”

“மோனே, இஞ்ச வாழுற எல்லாருக்கும் நிழல் தேவைப்படுகுது. ஆனால் அப்படியொரு நிழல் இனி எங்களுக்கில்லை. கொடூரமான வெந்தணல் வானத்தில் பொழியக் காத்திருக்கு. எங்களுடைய கூத்தும் பாட்டும் சொற்களற்றுப் போய்விடப்போகுது. நினைத்தாலே நிணமும் அச்சமும் சூழ்ந்துபோகும் கொடிய காலம் எங்கள் முற்றங்களில் வெடித்தெழும்பக் காத்திருக்கிறது” என்றாள்.

நான் பூட்டம்மாவைக் கட்டியணைத்தபடி “இப்படி எதுவும் சொல்லாமல் இருங்கோ, எனக்கு பயமாய் இருக்கு” என்றேன்.

“பயப்பிடாத மோனே, இனிவரும் நாள்களில் பயமும் எங்களிடமிருந்து அகன்றுவிடும். பயப்பிடாத மோனே.”

இரவு எட்டு மணியாகியிருந்தது. அம்மா ரொட்டியும் பச்சைமிளகாய்ச் சம்பலும் செய்திருந்தாள். நல்ல உருசை. அம்மாவின் சம்பலுக்குத் தனி எலுமிச்சைச் சுவை உண்டு. மூன்று ரொட்டிகளைச் சாப்பிட்டு முடித்தேன். பூட்டம்மாவுக்கு உளுத்தம்மாவில் களி கிண்டிக்கொடுத்திருந்தாள். அம்மாவும் சாப்பிட்டு முடித்ததும், லாம்பு வெளிச்சத்தைக் குறைத்துவிட்டு உறங்க ஆயத்தமானோம்.

சண்டை தொடங்கியிருந்தது. ராணுவம் பாரிய முன்னெடுப்பைச் செய்தது. இரவினில் தொடங்கும் சண்டைக்கு மூர்க்கம் அதிகம். இரு தரப்பிலும் இழப்புகள் பெருகிவிடும். போராளிகளான நாங்கள் தற்காப்புச் சமரையே செய்தோம். வலிந்த தாக்குதலுக்கான எண்ணமும் அவசியமும் இயக்கத்திடம் இல்லை. முன்னரங்கில் நிற்கும் ஒவ்வொரு போராளியின் சுடுகுழலும் இலக்கைக் கண்டால் மட்டும் சுடக் காத்திருந்தது. பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. போராளிகள் காயமடைந்து அலறுகிற சத்தம் கேட்கிறது. நாங்களிருக்கும் இடத்தை நோக்கி எதிரியின் தாக்குதல் தொடங்கியது.

இளவெயினி, பூம்பாவை ஆகிய இருவரும் என்னைவிட்டு வேறொரு அணியில் சேர்க்கப்பட்டுவிட்டார்கள். நான் இப்போது வேறு சிலரோடு இருக்கிறேன். இவர்கள் நினைக்கவியலாத இயல்போடு இந்தப் போர்க்களத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் போர்முனையென்பது பழக்கமான மைதானம் போன்றிருந்தது. ஒரு போட்டிக்கான களிப்போடு அவர்கள் சண்டையை எதிர்கொள்ளும்விதம் எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் அளித்தது. என்னை அவர்கள் ஒரு புதிய ஆளாக பாவித்தார்கள். யுத்தமுனையின் துடிப்புகளையும் இறுக்கத்தையும் அவர்கள் சொல்லித் தந்தனர். நான் யுத்தமுனையின் பாலர் வகுப்பில் நின்றுகொண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு அ, ஆ என்று உயிர் எழுத்துகளைச் சொல்லித் தருகிறார்கள். எத்தனை ஆசிரியர்கள், எத்தனை பாடங்கள், எத்தனை கண்டிப்புகள்... இந்தக் களமுனையில் இப்போது எதிர்கொள்ளும் இந்தச் சண்டையை அவர்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இந்தச் சண்டை குறித்து அதிலொருவர் சொன்னார்.

“இப்போது நடப்பது, சண்டையில்லை. சும்மா சொறிஞ்சு விளையாடிக்கொண்டிருக்கிறம். அவன் அடிச்சால் திரும்பி அடிக்க முடியாதபடி நாங்கள் அவங்களை மூர்க்கமாய்த் திருப்பித் தாக்க வேணும். ஆனால் நாங்கள் இப்ப அப்பிடி ஒண்டும் செய்யேல்ல.”

“நீயேன் அப்பிடி நினைக்கிறாய்? பெரிய சண்டை இருக்கும். இயக்கம் அதுக்கான திட்டத்தைப் போடும். ஆனால் அதைச் செயல்படுத்த நேரம் பார்த்திட்டு இருக்கும்.” – இன்னொருவரின் பதில் இப்படி வந்தது.

“நான் அப்பிடி நினைக்கையில்ல... இயக்கம் சண்டை செய்ய யோசிக்குதோ எண்டு யோசனையாய் இருக்கு.”

“இல்லை. இயக்கம் ஒரு பெரிய திட்டத்தை வெச்சிருக்கு. அப்பிடித்தான் எனக்குத் தெரியுது. நீங்கள் என்ன நினைக்கிறியள் தூரிகை?”

நான் இப்போது ஏதாவது பதில் சொல்ல வேண்டும். ஆனால், எனக்கு என்ன தெரியும். இயக்கத்தின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு நான் இப்போதில்லை. ஆனால் இந்த உரையாடலில் நான் இணைந்துகொள்ள வேண்டுமெனச் சிலர் எண்ணுகிறார்கள். நான் சொன்னேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 62

“இயக்கம் சண்டை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒரு தீர்வை நோக்கி அரசாங்கம் வரும்” என்றேன்.

“இதென்ன தூரிகை பழைய அறிக்கையாய் இருக்கு. இயக்கம் தொடங்கேக்க கதைச்ச கதை இது. நாங்கள் சண்டை செய்து அரசாங்கம் தீர்வுக்கு வந்திடுமெண்டு நினைக்கிறதெல்லாம் பகல் கனவு.”

“இல்லை. நான் சொல்லுறது இப்ப தொடங்கியிருக்கிற சண்டையைச் சொன்னான். இனிமேல் நாங்கள் பெறப்போகிற படையியல் வெற்றி ஒவ்வொன்றும் முக்கியமானது.”

“எந்த வகையில முக்கியமென்று நினைக்கிறியள்?”

“நாங்கள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கிற ராணுவத்தோட செய்யிற இந்தச் சண்டையில, எதிரி தோத்திட்டால் எங்கட படை வலிமை அவங்களுக்குத் தெரிஞ்சிடும். அதனால் அவங்கள் கொஞ்சம் யோசிப்பாங்கள்.”

“இதென்ன பகிடிக்கதையாய்க் கிடக்கு தூரிகை, இந்தச் சண்டையில அவங்களவிட எங்களிட்ட ஒரேயொரு பலம்தான் கூடக் கிடக்கு. அது மனோபலம். மிச்சபடிக்கு ஆயுதத்திலும் ஆள்பலத்திலும் அவங்களுக்குக் கொட்டிக்குடுக்க எத்தனையோ நாடுகள் இருக்கு. இது உங்களுக்குத் தெரியாதா?”

“எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்பிடி நினைக்கேல்ல. எவ்வளவு ஆயுதங்களாலும் எங்களைத் தாக்கலாம். ஆனால் நாங்கள் பயந்துபோக மாட்டோம். அப்பிடி எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சண்டை செய்தால், வலுவுள்ள வரைக்கும் போராடுவம்.”

“நீங்கள் எதிரியைச் சும்மா எடை போடுகிறியள். நாங்கள் நினைக்கிற மாதிரி அவன் சண்டை செய்ய மாட்டான்.”

“அதுதான் சொல்லுறன், அவன் நினைக்கிற மாதிரி நாங்களும் செய்ய மாட்டம்” என்றேன்.

இந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தது. சில மணி நேரங்களில் மீண்டும் மோதல் எழுந்தது. நாங்களிருந்த பக்கத்தில் எதிரிகளின் சூடுகள் பறந்துவந்தன. நாங்கள் எதிர்த்திசையில் எதிரியின் இருப்பை இனங்கண்டுத் தாக்கினோம். சண்டை ஒரு களிப்போடு இருளை வழிநடத்தியது. கந்தகப்புகை நாசியை அடைத்தது. எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. மோட்டார் ஷெல்கள் அதி பயங்கரமானவை. வீழ்ந்து வெடித்து பலரைக் காயப்படுத்தின. போராளிகள் காயமுற்று வலியில் துடித்தனர். குருதி கொதித்து மனித உடலிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. துவக்குகள் குருதியில் தோயுண்டன. போரின் ஒவ்வொரு கணமும் சிலிர்ப்பும் பயங்கரமும் எழுந்து எழுந்து அடங்குகிறது. எனக்கு ஆதீரனின் நினைவு வந்தது. அவனைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றுகிறது. என்னுடைய சுடுகலன் எதிரியினது இலக்குகளைத் தாக்கிக்கொண்டே இருக்கிறது. நான் ஆதீரனை நினைத்துக்கொள்கிறேன். நான் வீரச்சாவு அடைந்தால் அவன் தாங்கிக்கொள்ளப் போவதில்லை. நான் அவனைக் கருவில் சுமக்காத தாய். என்னுடைய தாய்மையை எனக்கு உணர்த்திய பிள்ளை அவன். இந்தப் போர்க்களத்திலிருந்து ஒரு விடுமுறை கிடைத்தால், அவனைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும். என்னுடைய சுடுகலன் இறுகி நின்றுவிட்டது. நான் அதனைக் கழற்றுகிறேன்.

எனக்கருகில் வீழ்ந்து வெடித்தது ஒரு மோட்டார் ஷெல். களமெங்கும் புகை மூட்டம்.

(நீளும்...)