Published:Updated:

அன்பால் இவனை தம்பி ஆக்கிட்டோம்... டெரர் ‘அரிசிராஜா’ கும்கியான கதை!

டெரர் ‘அரிசிராஜா’
பிரீமியம் ஸ்டோரி
டெரர் ‘அரிசிராஜா’

பாசத்தாலதான் அது முடியும்னு ராகிக்களி, தேங்காய், கரும்பு, பழம்னு அதுக்குப் பிடிச்ச ஆகாரம் நிறைய குடுத்தோம்.

அன்பால் இவனை தம்பி ஆக்கிட்டோம்... டெரர் ‘அரிசிராஜா’ கும்கியான கதை!

பாசத்தாலதான் அது முடியும்னு ராகிக்களி, தேங்காய், கரும்பு, பழம்னு அதுக்குப் பிடிச்ச ஆகாரம் நிறைய குடுத்தோம்.

Published:Updated:
டெரர் ‘அரிசிராஜா’
பிரீமியம் ஸ்டோரி
டெரர் ‘அரிசிராஜா’

அந்த ஒற்றைக் காட்டுயானை ஒரு காலத்தில் கோவையை நடுநடுங்கவைத்தது. 2017, ஜூன் 2-ம் தேதி அதிகாலை வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அது, கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நான்கு பேரைக் கொன்றது. வனத்துறை ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். ஆக்ரோஷமாகக் காணப்பட்ட அந்த யானையை, மயக்க ஊசி செலுத்திப் பிடித்து டாப்ஸ்லிப் பகுதியில் விட்டனர். பிரச்னை தீரவில்லை, இடம் மாறியது. நவமலையில் 7 வயது பழங்குடிச் சிறுமி, விவசாயி உட்பட மூன்று பேரைக் கொன்றது அந்த யானை.

அந்த யானைக்கு அரிசி மிகவும் பிடித்த உணவு. அதற்காக வீடுகளை உடைத்து, அரிசி எடுத்துச் சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. இடையில் யார் புகுந்தாலும் அடிதான். இதனால் அதற்கு ‘அரிசிராஜா’ என பெயர் வைத்தனர். அடுத்தடுத்த உயிரிழப்பால் 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி அர்த்தநாரி பாளையம் பகுதியில் வைத்து, அரிசிராஜா மீண்டும் பிடிக்கப்பட்டது. இதை இனி காட்டில் விட முடியாது என்று, கூண்டில் அடைத்து கும்கி பயிற்சி கொடுக்கத் தொடங்கினர். காட்டில் இருக்கும்போதே மிரட்டியவன், கூண்டுக்குள் எப்படியிருப்பான் எனக் கேட்கவா வேண்டும்... டெரர் அரிசிராஜாவுக்கு, உயிரைப் பணயம் வைத்து பயிற்சி கொடுத்து, அவனை ‘முத்து’ என்ற கும்கியாகியிருக்கிறார்கள் பாகன்கள்.

கோவை ஆனைகட்டி அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்தது அரிசிராஜா! அதன் பாகன்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.

அன்பால் இவனை தம்பி ஆக்கிட்டோம்... டெரர் ‘அரிசிராஜா’ கும்கியான கதை!

“கலீமை வெச்சுத்தான் இந்த யானையைப் பிடிச்சு ட்ரெய்னிங் பண்ணுனோம். இப்ப அதே கலீம்கூட சேர்ந்து முதல் ஆபரேஷனுக்கு வந்துருக்கு. முதல்ல ரொம்ப அட்டூழியுமாத்தான் இருந்துச்சு. பயங்கர டென்ஷனான யானை. யார் போனாலும் அடிக்கப் பார்க்கும். அரிசிபாளையத்துல இதைப் பிடிக்கறப்ப, கலீமையே அடிச்சுக் காயப்படுத்திருச்சு. அதனால எங்களுக்கே பயமாத்தான் இருந்தது. கூண்டுக்குள்ள இருந்தப்ப எங்களையுமே அடிக்கப் பார்த்துச்சு. தேக்கு மரத்தால செஞ்ச கூண்டுல முட்டி முட்டி, இதோட கொம்புகூட (தந்தம்) கொஞ்சம் உடைஞ்சுருச்சு. யானை, குட்டியா இருந்தா பழக்கறது ஈஸி. இதுக்கு நடுத்தர வயசு. முதல்ல அதோட டென்ஷனைக் குறைக்கணும்னு முடிவு பண்ணினோம்.

பாசத்தாலதான் அது முடியும்னு ராகிக்களி, தேங்காய், கரும்பு, பழம்னு அதுக்குப் பிடிச்ச ஆகாரம் நிறைய குடுத்தோம். ஒவ்வொரு தடவை சாப்பாடு குடுக்கறப்பவும், எங்க வாசமும் அதுக்குப் பழகிடுச்சு. அப்படியே பாசம் காமிச்சு, பழகிப் பழகித்தான் வெளிய எடுத்தோம். இப்ப எங்க கட்டளைகளை அப்படியே கேக்க ஆரம்பிச்சுடுச்சு. இப்ப எங்க குழந்தை மாதிரி ஆகிடுச்சு. எங்க பேச்சை மீறி எதுவும் செய்யறது இல்லை. என்னடா தம்பி?” என பாகன் ராஜ்குமார் கொஞ்சியதும் ஒருவித ஒலியை எழுப்பி ஆமோதித்தது அரிசிராஜா.

மற்றொரு பாகன் ஜோதிராஜ் கூறுகையில், “கூண்டுக்குள்ள வெச்சு என்னைய ரெண்டு தடவை கொல்ல பாத்துச்சு சார். ஜஸ்ட் மிஸ்ல நான் உயிர் தப்பிச்சேன். ஆரம்பத்துல கேம்ப்ல இருக்கற மத்த யானைகளைக்கூட மிரட்டி அடிக்கப் பார்த்துச்சு. மதம் பிடிச்சுருந்தப்ப, ஒரு குட்டி யானையைத் தாக்கப் பார்த்துச்சு. அப்ப இதுகிட்ட இருந்து அந்தக் குட்டியைக் காப்பாத்திட்டோம். படிப்படியா அன்பைக் காமிச்சு, அதோட நெனைவுல இருந்த கோபங்களையெல்லாம் மறக்கடிச்சோம். இப்ப கேம்ப்ல இருக்கற மத்த யானைகளோட நெருங்கிப் பழகறான். எந்தக் குட்டியை அடிச்சதோ, அதே யானைகூட விளையாடுது. காவிரி, தேவி, சின்னத்தம்பி, மாரியப்பன், ராம் எல்லாம் இவனோட நண்பர்கள்.

காட்டுலயும், விவசாய நிலத்துலயும் விதவிதமா சாப்பிட்டுருக்குமேன்னு நாங்களும் அதுக்கு பலா, மா, வாழை, தேங்காய், வெல்லம், கரும்புனு நெறய குடுத்தோம். ஆனா, பேருக்குத் தகுந்த மாதிரி அவனுக்கு அரிசிச் சாப்பாடுதான் அதிகம் பிடிக்குது. கேம்ப்புக்கு வந்தப்புறம் இவனுக்கு ‘முத்து’னு பேர் வெச்சோம். அது ஒரு அதிகாரியோட பேரு. அதை நாங்க வெளிப்படையாச் சொல்லிக் கூப்பிட முடியாது. அதனால இவனை ‘தம்பி’னுதான் கூப்பிடுவோம். காட்டுயானையை வளர்ப்பு யானையோட சேர்க்கிறது, கல்யாணம் மாதிரிதான். அதனால, இவன் எங்க குடும்பத்து மாப்பிள்ளை... இருந்தாலும் பாசத்துல ‘தம்பி’னு கூப்பிடுறோம். அவன் வந்து மூணு வருஷம் ஆகிடுச்சு. இப்ப நாங்க ரெண்டு பேரும் இல்லாட்டி இவன் சாப்பிடக்கூட மாட்டேங்குறான்.இவனனைவிட்டு எங்கேயாச்சும் வெளியே போனாக்கூட, `என்ன பண்ணுறானோ, சாப்பிட்டானா இல்லையா?’னு இவன் ஞாபகமாகவே இருக்கும். சில யானைகள், கூட்டத்தைப் பார்த்தாலே மிரளும். இவன் முன்னாடியே டவுனுக்குள்ள வந்து பழகின யானைங்கறதால அப்படி எல்லாம் பண்ணலை. வண்டியிலயும் அமைதியா வந்துட்டான். எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு. கும்கியைப் பொறுத்தவரை பாகனோட துணிச்சலும் நம்பிக்கையும்தான் யானைக்கும் வரும். எங்க நம்பிக்கையை இவன் காப்பாத்துவான்” என்றார் நம்பிக்கையுடன்.

ஒரு ரௌடியை, போலீஸ் ஆக்கிவிட்டார்கள். அன்பு எல்லாவற்றையும் மாற்றும்!