அரசியல்
அலசல்
Published:Updated:

‘எல்லாம் முடிந்த பிறகுதான் மக்களை வெளியேற்றினார்கள்...’ - பேரிடர் மேலாண்மையில் கோட்டைவிட்டதா அரசு?

நீர்வரத்தற்ற ஏரிகள் மறுபுறம்...
பிரீமியம் ஸ்டோரி
News
நீர்வரத்தற்ற ஏரிகள் மறுபுறம்...

கடந்த ஐந்து நாள்களாகக் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், இதுவரை எந்த அமைச்சரும் மக்களைச் சந்தித்து உதவவில்லை.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந் திருக்கும் நிலையில், அரசு சார்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதுதான் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டு லட்சம் கனஅடியைத் தாண்டியதையடுத்து, அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் ஈரோடு மாவட்டம் பவானி, கொடுமுடி, கருங்கல்பாளையம் போன்ற பல்வேறு கிராமங்களில் 600-க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. அதேபோல கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், சின்ன காரமேடு, எருக்கன் காட்டுப்படுகை போன்ற பல்வேறு கிராமங்களில் 1,500-க்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. கிராமங்களுக்குள் நீர் வந்த பிறகுதான், அந்தப் பகுதி மக்களை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் சென்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நீலகிரியில் பல மலைவாழ் கிராமங்களில் வெள்ளநீர் புகுந்திருக்கிறது. இன்னொரு பக்கம், அரியலூர் மாவட்டத்தில் 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியிருக்கிறது.

வெள்ளம் ஒரு புறம்...
வெள்ளம் ஒரு புறம்...

ஸ்டாலின் உத்தரவும்... பழனிசாமி குற்றச்சாட்டும்!

தொடர்மழைக்கு நடுவே, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே திருச்சி, சேலம், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, ``தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் உடனடியாக திருச்சி, ஈரோடு, நாமக்கல்லுக்குச் செல்ல வேண்டும். மாநில அவசரக் கட்டுப்பட்டு மையம், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பொதுமக்களுக்கு அறிவிப்பு தராமல் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குச் சுத்தமான குடிநீர், உணவு, குழந்தைகளுக்குப் பால் போன்ற அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துகொடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார் முதல்வர். இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்தனர்.

பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``கடந்த ஐந்து நாள்களாகக் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், இதுவரை எந்த அமைச்சரும் மக்களைச் சந்தித்து உதவவில்லை. நான் வருகிறேன் என்று தெரிந்ததுமே, சில அமைச்சர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். முகாம்களில் சரியான மருத்துவ வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை. அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீர்வரத்தற்ற ஏரிகள் மறுபுறம்...
நீர்வரத்தற்ற ஏரிகள் மறுபுறம்...

அரசு ஆர்வம் காட்டவில்லை!

இதுகுறித்து முன்னாள் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம். ``காவிரியில் இரண்டு லட்சம் கனஅடி நீரைத் திறக்கப்போவது அரசுக்கு முன்பே தெரியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதியில் இருந்த மக்களைக் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றி, முகாம்களில் முன்பே தங்கவைத்திருக்க வேண்டும். பல இடங்களில் ஊருக்குள் வெள்ளநீர் வந்த பிறகுதான் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். முதல்வரும், அமைச்சர்களும் வெள்ள பாதிப்பு குறித்து எந்தவித அக்கறையும் காட்டவில்லை யென்றால் அதிகாரிகளும் அப்படித்தான் செயல்படுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையையும், நிவாரணத்தையும் உடனே வழங்க வேண்டும்” என்றார் அழுத்தமாக.

அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் கேட்டும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைப் பலமுறை தொடர்புகொண்டோம். அவரிடம் பேச முடியவில்லை. இதையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் வேண்டாம் என்ற வேண்டுகோளோடு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்...

``அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதிலிருந்து, தண்ணீர் செல்லும் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. மயிலாடுதுறைப் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 3,000-க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருக்கிறார்கள். அதேபோல, நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு முதல் அனைத்து வசதிகளும் அரசு சார்பில் செய்துகொடுக்கப் பட்டிருக்கின்றன. தண்ணீர் செல்லும் வழியில் எங்காவது உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகள் அதைச் சரிசெய்துகொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருமே தொடர் ஆய்வு நடத்திவருகிறார்கள்” என்றார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று சொல்லப்பட்டாலும் உண்மையில், காலதாமதமாகவே நடவடிக்கை எடுக்கப்பட் டிருப்பதாக, பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதால், பல கால்வாய்கள் உடைந்து வயலுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இன்னொருபுறம், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், திருச்சியைச் சுற்றியுள்ள பல ஏரிகளில் இன்னும் பாதி அளவுக் குக்கூட நீர் நிரம்பவில்லை. இன்னும் சில ஏரிகளுக்கு நீர் செல்லவில்லை என்று அந்தப் பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் சொல்கிறார்கள். பருவமழை காலத்தில் அரசு முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, கரைகளைப் பலப்படுத்தி, முறையாகத் தூர் வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், வருங்கால ஆபத்திலிருந்து தப்பலாம். தவற்றைச் சரிசெய்து கொள்ளுமா அரசு?