Published:Updated:

சடலத்தை எரிக்கவிடாத சாதித் தீ!

அரியலூர்
பிரீமியம் ஸ்டோரி
அரியலூர்

அரியலூரில் நடந்த அவலம்

சடலத்தை எரிக்கவிடாத சாதித் தீ!

அரியலூரில் நடந்த அவலம்

Published:Updated:
அரியலூர்
பிரீமியம் ஸ்டோரி
அரியலூர்
கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒன்று, உலகையை உலுக்கிப்போட்டுள்ளது. இத்தனை காலம் மனிதன் வைத்த நம்பிக்கைகள் தொடங்கி அவன் கண்டுபிடித்த நவீன தொழில்நுட்பங்கள் வரை எதுவுமே வைரஸ் முன்பு எடுபடவில்லை.

இந்த நிலையிலும், மனிதர்களின் சாதியப் பாகுபாடு ஒழியவில்லை. அரியலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் முடித்திருத்தும் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் இறந்துவிட, அவரது உடலை ஊர் பொது மயானத்தில் எரிக்கவிடாமல் தடுத்துள்ளார்கள் ஆதிக்கச் சாதியினர். விவகாரம் காவல்துறை வரை சென்றும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியவில்லை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது திருப்பெயர் கிராமம். இங்கு முடித்திருத்தும் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த கற்பககுமார் என்கிற இளைஞர், சமீபத்தில் தஞ்சாவூரில் விபத்தில் இறந்துவிட்டார். அவரது சடலத்துக்குத்தான் இந்தக் கொடுமை நேர்ந்துள்ளது.

அம்சவள்ளி
அம்சவள்ளி

இறந்துபோன கற்பககுமாரின் அம்மா அம்சவள்ளியிடம் பேசினோம். “எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. என் கணவர் கர்ணன், வெளிநாட்டுல வேலைபார்க்கிறார். முடித்திருத்தும் சமூகத்தைச் சேர்ந்த நாங்க, பல தலைமுறையா இங்க வசிக்கிறோம். என் மகன், தஞ்சாவூர்ல சலூன் வெச்சிருந்தான். மே மாசம் 9-ம் தேதி `மூடிக் கிடக்கும் கடையை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேன்’னு சொல்லிட்டுப் போனவன். தஞ்சாவூர்ல நடந்த விபத்துல அடிபட்டு இறந்துட்டான். ஒத்தை பையனைப் பொத்திப் பொத்தி வளர்த்தோம். ஆனா அவன் சாவுக்குப் பின்னாடிகூட, அவனை நிம்மதியா அடக்கம் பண்ண முடியலை” என்றவர் அதன் பிறகு நடந்தவற்றை அழுகையுடன் சொல்லத் தொடங்கினார்.

“எங்க சமூகத்துல இறந்தவங்களைப் புதைக்கிறதுதான் வழக்கம். ஆனா, எங்க சொந்தக்காரங்க, ‘இறந்தவன் இளவட்ட பையன். கல்யாணம்கூட ஆகலை. அதனால, புதைக்க வேண்டாம்... எரிக்கிறதுதான் நல்லது’னு சொன்னாங்க. ஊர் பொது சுடுகாட்டுல இருக்கிற தகன மேடையில விறகை அடுக்கி வெச்சு, என் மகனின் உடலை சொந்தக்காரங்க தூக்கிட்டுப் போனாங்க. அங்கதான் பிரச்னை ஆகியிருக்கு.

சடலத்தை எரிக்கவிடாத சாதித் தீ!

அங்க இருந்த மேல்சாதி ஆளுங்க, எங்க ஆளுங்களை சாதியைச் சொல்லித் திட்டி, தகன மேடையில் இருந்த விறகுக்கட்டையை எல்லாம் தூக்கி வீசியிருக்காங்க. ‘இது அரசாங்கச் சுடுகாடுதானே’ன்னு எங்க ஆளுங்க கேட்க... ‘சின்ன சாதிப் பயலுக, எங்களை எதிர்த்துப் பேசுறீங்களா?’ன்னு கேட்டு, கட்டைகளை எடுத்து அடிக்க வந்தாங்களாம். உடனே எங்க ஆளுங்க கீழபளூர் காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்காங்க. சுடுகாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, மேல்சாதிக்கார ங்களுக்கு ஆதரவா பேசியிருக்காங்க. எங்க ஆளுங்ககிட்ட, ‘வீண்சண்டை எதுக்கு, பிணத்தை மேடையில வைக்காம கீழே வெச்சே எரிச்சுடுங்க’னு சொல்லி கொல்லி வைக்கிறவரோட கையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போயி அவசர அவசரமா எரிக்க வெச்சிருக்காங்க. இதெல்லாம் சுடுகாட்டுக்குப் போன எங்க சொந்தக்காரங்க சொல்லித்தான் எனக்குத் தெரிஞ்சது.

மறுநாள் காலையில சுடுகாட்டுக்குப் போனவங்க பதறிக்கிட்டு ஓடியாந்து, ‘உன் மவன் பிணம் சரியா எரியவேயில்லை. பாதி எரிஞ்ச நிலையில் நாய்களெல்லாம் தின்னுட்டு இருக்கு’ன்னு தகவல் சொன்னாங்க. உடனே நான் சுடுகாட்டுக்கு ஓடினேன். அங்க பாதி எரியாத நிலையில் என் மவன் பிணம் கிடந்துச்சு. உசுருக்கு உசுரா தூக்கி வளர்த்த பையனோட உடம்பை இப்படிப் பார்க்கிற துர்பாக்கிய நிலை எந்த ஒரு தாயுக்கும் வரக் கூடாது. நான் நாய்களையெல்லாம் துரத்திவிட்டுட்டு, அழுதுக்கிட்டே என் பையனோட உடம்பை மறுபடியும் முழுசா எரிச்சு தகனம் பண்ணேன்” என்று கதறினார்.

சடலத்தை எரிக்கவிடாத சாதித் தீ!

பாதிக்கப்பட்டவரின் உறவினரான கணேசன் என்பவரிடம் பேசினோம். “இந்தச் சம்பவத்துக்கு மறுநாள் போலீஸ்காரங்க, ‘உங்களுக்கு வேறு இடத்தில் சுடுகாடு கட்டித் தர ஏற்பாடு செய்கிறோம். இதை பெருசுபடுத்தாதீங்க’னு எங்க வாயை அடைச்சுட்டாங்க. இந்தப் பிரச்னைக்குப் பிறகு நாங்க பால் வாங்கிட்டு இருந்த வீட்டுல எங்களுக்கு பால் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எங்க சமூகத்துல ஒருத்தர் மளிகைக்கடை வெச்சிருக்கிறார். அவர்கிட்டயும் மேல்சாதியைச் சேர்ந்தவங்க யாரும் பொருளை வாங்குறதில்லை. சாதிப் பிரிவினையால புழுங்கிக்கிட்டு வாழ்ந்த எங்களுக்கு சாவிலும் நிம்மதி யில்லாமப்போயிடுச்சு” என்றார்.

திருப்பெயர் கிராமத்தில் இருக்கும் ஆதிக்கச் சாதியினரிடம் பேசினோம். “கொரோனா அச்சத்தால்தான் அங்கே பிணம் எரிப்பதைத் தடுத்தோம். மற்றபடி எங்கள் ஊரில் சாதிப் பாகுபாடு கிடையாது” என்றவர்களிடம், “பால் தருவதில்லை... அவர்கள் சமூகத்தினரின் மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குவதில்லை என்று சொல்கிறார்களே?” என்று கேட்டோம். “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது” என்றபடி அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி-யான சீனிவாசனிடம் பேசினோம். “நீங்கள் சொல்லி யிருக்கும் சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க உத்தரவிடுகிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது” என்றார் கண்டிப்புடன்!

கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று நம்பிக்கை இருக்கிறது... சாதியை?