
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!


அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வரலாற்றுபூர்வமாக அணுக வேண்டும். பாசனம், தொழில், வணிகம், விவசாயம், சுற்றுலா என எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வரலாற்றுபூர்வமாக இந்த மாவட்டத்தைப் பெரும்பாலும் அணுகவில்லை. ஒருசில மாவட்ட ஆட்சியர்கள் மட்டும், சில முன்னெடுப்புகளை எடுத்திருந்தாலும்கூட அதில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை!
சோழர்களின் வணிகப் பாய்ச்சல்!
சோழப் பேரரசு, வட இந்தியாவில் பல பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளையும் தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்த வல்லரசு. அலெக்ஸாண்டர், நெப்போலியன் போன்ற மாவீரர்களைப் பற்றிப் பேசுகிற அளவுக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் ராஜேந்திர சோழனும், ராஜராஜ சோழனும். ஆனால் சோழப் பேரரசரின் புகழ், உலக அளவில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக, கடல் வணிகத்துக்காகவும், துறைமுகத்துக்காகவும் இலங்கையை முழுவதுமாக வென்றதால்தான் `முடிகொண்டான்’ என்று பெயர்பெற்றான் ராஜேந்திர சோழன்.
இன்றைய சிங்கப்பூர் என்பது `சிங்கபுரம்’ என்று ராஜேந்திர சோழன் வைத்த பெயரின் திரிபு. மலேசியா, சிங்கப்பூர் பகுதிதான் கடாரம். அந்தப் பகுதிகளை வென்று ஆண்டதால், `கடாரம்கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரும் பெற்றான். தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, ஜாவா, நிக்கோபார் எனத் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அவனது ஆட்சி பரவியிருந்தது. அதற்குக் காரணம் வணிகம்தான். 1014-ம் ஆண்டு முதல் 1044-ம் ஆண்டு வரை அவனது ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டில் பெரும் வணிகப் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆறுகள், வாய்க்கால்களெல்லாம் சோழர்கள் உருவாக்கியவை. மண்ணையும் மக்களையும் புரிந்துகொண்டதால்தான் சோழர்களால் இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது. கொள்ளிடத்தின் வடகரை நீர்ப்பாசன அமைப்பு வேறு, தென்கரை நீர்ப்பாசன அமைப்பு வேறு. வரலாறு, தொல்லியல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகினால் அது வந்து நிற்கிற இடம், தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் கனவு அல்லது டிரில்லியன் டாலர் கனவு மீட்பு என்றுகூடச் சொல்லலாம். டிரில்லியனைத் தாண்டிய கனவு ராஜேந்திர சோழனுடையது. இது நாம் மறந்த கனவு. வாருங்கள், நாம் இதற்குப் புத்துயிர் கொடுப்போம்.


நீர் மேலாண்மை!
நாம் முதலில் பார்க்கப்போவது, நீர் மேலாண்மையை ஒட்டிய 3,000 கோடி அளவுக்கு முதலீட்டை ஈர்க்கக்கூடிய வளர்ச்சி. சுமார் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகொண்ட அரியலூரில், தோராயமாக 1.2 லட்சம் ஹெக்டேர் பகுதிகள் மட்டுமே வேளாண் நிலங்களாக உள்ளன. இவற்றில் 66 சதவிகிதம் மானாவாரிப் பகுதியாக இருக்கிறது. பிற கணக்கெடுப்பின்படி, தோராயமாக 32 சதவிகிதம் பாசனப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எஞ்சியுள்ள 2 சதவிகிதம் கொள்ளிடம் ஆற்றின் அருகேயுள்ள காவிரிப்பாசனப் பகுதியாக உள்ளது.
உலகத்தரம் வாய்ந்ததாகவும், மேன்மையான அறிவாற்றல் மிக்கதாகவும் சோழர்களின் நீர்ப்பாசன அமைப்பு இருக்கிறது. இதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால், அரியலூர் மாவட்டத்தில் பழைமையான நீர்ப்பாசன அமைப்பை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த மாவட்டத்திலுள்ள சோழர்களின் நீர் மேலாண்மையை மறுசீரமைப்புச் செய்தாலே போதும். வேளாண்மையில் மட்டுமல்ல, அரியலூரின் மொத்தப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த மாவட்டத்தில் சோழர்கள் சுமார் 544 பேரேரிகளை உருவாக்கியிருந்தார்கள். அவற்றில் தற்போது சுமார் 300 பேரேரிகள் பாசனத்துக்குப் பயன்படுகின்றன. அரியலூர் மாவட்டத்தில் ஏரிப்பாசனத்தின் `தலைவாசல்’ எனப்படுவது செம்பியன் மாதேவி பேரேரி (கண்டராதித்தம்), பரப்பளவு சுமார் 631 ஹெக்டேர். பெருங்கடல்போல இருக்கும் இது மிகவும் பிரமிப்பாக உள்ளது. இதற்கு அருகே நரதுங்க பேரேரி (காமரசவல்லி), 475 ஹெக்டேர் பரப்பளவு. அடுத்துள்ள மலையவிச்சாதார பேரேரி (கீழப்பழூர்), 380 ஹெக்டேர் பரப்பளவு. பவித்ரமாணிக்கம் பேரேரி (சுத்தமல்லி), 350 ஹெக்டேர் பரப்பளவு. பராந்தகப் பேரேரரி (ஸ்ரீபுரந்தான்), 250 ஹெக்டேர் பரப்பளவு. சோழகங்கை பேரேரி (பொன்னேரி), 300 ஹெக்டேர் பரப்பளவு. பாண்டிய பேரேரி, கோவதட்டை பேரேரி, வளவனேரி என நாம் அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு இன்னும் பல ஏரிகள் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவையெல்லாமே சோழர்கள் காலத்தின் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் பெயரில் உருவாக்கப்பட்டவை.



கொள்ளிடத்திலிருந்து வரும் நீரானது, நேராக செம்பியன் மாதேவி பேரேரியில் நிரம்பும். அது தன் கொள்ளளவை எட்டியவுடன், உபரிநீரானது அடுத்த ஏரிக்குச் செல்லும். அது தன் கொள்ளவை எட்டியவுடன், அடுத்த ஏரியை நோக்கிச் செல்லும். இப்படிப் படிப்படியாக அனைத்து ஏரிகளும் நிரம்பி, இறுதியாக `வடவாறு’ என்று அழைக்கப்படும் மதுராந்தகப் பெரிய வாய்க்காலில் சேரும். இதுதான் வீராணம் ஏரிக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்கண்ட இந்த மொத்த அமைப்பையும் `கொள்ளிடத்தின் வடகரை நீர்ப்பாசன அமைப்பு’ (Northern Bank Irrigation System) என்று கூறலாம்.
நாளடைவில் இந்தப் பேரேரிகளும் இணைப்பு வாய்க்கால்களும் சீரழிவுக்கு ஆளாக்கப்பட்டு விட்டன. இந்தப் பேரேரிகளை மறுசீரமைப்பு செய்து, கைவிடப்பட்ட வாய்க்கால்களைப் புனரமைப்பு செய்தாலே `வானம் பார்த்த பூமி அரியலூர்’ என்ற பெயரை மாற்றி `அரியலூர் டெல்டா மாவட்டம்’ என்கிற பெயரை மீண்டும் நிலைநாட்டலாம். சுமார் 66% மானாவாரிப் பகுதியான இதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், தோராயமாக 3,000 கோடி தேவைப்படும். இதற்கு, தமிழ்நாட்டின் பங்களிப்பாக 10 சதவிகிதம் தொகையை அதாவது 300 கோடி ரூபாய் அளித்தால், மீதியுள்ள 90 சதவிகிதம் தொகையை Asian Development Bank, Japan International Cooperation Agency, World Bank போன்ற உலக வங்கிகளின் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், சேவைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த 3,000 கோடி ரூபாய் பணப்புழக்கமே அந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதனால் விவசாயமும் செழித்து வளருவதோடு, அதையொட்டிய பல்வேறு தொழில்களும் வளர்ச்சியடைந்து, பொருளாதார முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும். இதன் காரணமாக, அரியலூரின் முகமுமே மாறிவிடும்!
(இன்னும் காண்போம்)