Published:Updated:

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

புதைபடிவ அருங்காட்சியகம்
பிரீமியம் ஸ்டோரி
புதைபடிவ அருங்காட்சியகம்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

Published:Updated:
புதைபடிவ அருங்காட்சியகம்
பிரீமியம் ஸ்டோரி
புதைபடிவ அருங்காட்சியகம்
கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அதன் மிகப்பெரிய வளமே அதன் வரலாறுதான். அதன் வரலாற்றை அறிந்துகொள்ள உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களும், சுற்றுலாப்பயணிகளும் வருகின்றனர். இவர்களின் வருகையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், பல முன்னெடுப்புகளை மேற்கொண்டால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் பொருளாதார மேம்பாட்டை உருவாக்க முடியும். பழம்பெரும் கோயில்கள், புதைபடிவங்கள், அரியவகைப் பறவைகள் என இந்தப் பகுதியில் காண வேண்டியவை ஏராளம்!

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

கங்கைகொண்ட சோழபுரம்!

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களைத்தான் உலக மரபுச் சின்னங்களாக (World Heritage Monuments) யுனெஸ்கோ குறிப்பிட்டிருக்கிறது. இவற்றிலுள்ள கங்கைகொண்ட சோழபுரம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இன்றளவும் இதன் கட்டடக்கலை, தொல்லியல் ஆய்வாளர்களாலும் கட்டடக்கலை நிபுணர்களாலும் வியக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பு, இந்தக் கோயில் குறித்த புகழ், பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளைச் சென்றடையவில்லை. இதை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கலாம்.

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
harikesh pk

வெளிநாட்டிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக தஞ்சை பெரியகோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்ற இடங்களைப் பார்வையிடுகின்றனர். அப்படியே புதுச்சேரியிலுள்ள இடங்களைப் பார்த்துவிட்டு, சென்னைக்குத் திரும்பி, தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால் இடையிலுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

இந்தப் பக்கம் வரும் சுற்றுலாப்பயணிகள், இந்த இடத்தைத் தவறவிடக் கூடாது எனும் வகையில் பாரம்பர்ய உணவகங்கள், வெளிநாட்டினருக்கான பிரத்யேக உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போன்று கோயிலின் நேர அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து, அந்தப் பகுதி பொருளாதார முன்னேற்றம் காணும்.

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்!

`பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என `இருவர் உள்ளம்’ படத்தில் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலுக்கு உயிரூட்டும் வகையில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கன், சாம்பல் நிறக் கொக்கு, மயில்கால்கோழி, ஆலா, கரண்டி மூக்கன், நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, முக்குளிப்பான் உள்ளிட்ட நீர்ப்பறவைகளும், அழிந்துகொண்டிருக்கும் பறவை இனங்களான Greater Spotted Eagle, Oriental Darter, Black-headed Ibis, Spot-billed Pelican உள்ளிட்ட சுமார் 188 வகையான பறவைகளைக்கொண்டது கரைவெட்டி பறவைகள் சரணாலயம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. ஆனால், அதைவிடப் பல மடங்கு பெரியது கரைவெட்டி பறவைகள் சரணாலயம். சுமார் 454 ஹெக்டேர் பரப்பளவில் பிரமாண்டமாக விரிந்துகிடக்கும் இந்தச் சரணாலயத்துக்கு இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 50,000 பறவைகள் வந்துசெல்கின்றன. கூட்டம் கூட்டமாக இங்கு வரும் பறவைகளைக் காண, இரு கண்கள் போதாது என்றாலும் அவற்றுக்கு இணையாகக்கூட இங்கே சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லை என்பது வேதனையளிக்கும் விஷயம். இத்தனைக்கும், அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்தச் சரணாலயம் அமைந்திருக்கிறது. ஆனால், நமக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவிலுள்ள ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம் பல மாநிலத்தவரும் வந்து கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மாற்றியமைக்க வேண்டும்.

முதலாவதாக, சரணாலயத்துக்குள் படகுப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைகளைக் கவரும்விதமாக பூங்கா அமைக்க வேண்டும். இங்கிருக்கும் பறவைகளைவைத்து, இந்தச் சரணாலயத்தின் ஒரு பகுதியை போட்டோ ஸ்பாட்டாக (Photospot) இணைக்கலாம். குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து, பயணிகளுக்கான உணவகங்கள், தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதும் அவசியம். இவ்வாறு பல முன்னெடுப்புகளைச் செய்தாலே இந்த இடம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழியும். இதனால் அந்தப் பகுதி பொருளாதார முன்னேற்றம் காணும். பலருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
Kirkikis

புதைபடிவ அருங்காட்சியகம்!

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டும் காணக்கூடிய படிமப் பாறைகள் அரியலூர் மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளன. இவை சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் படிவங்கள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். அவற்றிலிருந்து சுமார் 10 வகையான படிமங்கள் டைனோசர் முட்டைகளா என்கிற ஆய்வும் ஒரு பக்கம் நடந்துவருகின்றன. இதற்காக வாரணவாசியில் சுமார் 100 ஏக்கரில் புதைபடிவ அருங்காட்சியகம் (Fossil Museum) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதைபடிவங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த அருங்காட்சி யகத்துக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இங்கிலாந்திலுள்ள `ஸ்டோன்ஹெஞ்ச்’ (Stonehenge) உலக அளவில் புகழ்பெற்றது. இது வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னமாகக் கருதப்படுகிறது. இங்கே பெருங் கற்கள் (Megalith) வட்ட வடிவத்தில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளன. இதைக் காண உலகின் பல இடங் களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கே பிரமாண்டமான கற்களைத் தவிர வேறு இல்லை. ஆனால், இவற்றைக் காண பலரும் ஆர்வமாக இருக் கின்றனர். இதேபோல இந்த மாவட்டத்திலுள்ள புதைபடிவ அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் காணும் வகை யில் பல முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

முதலில், குழந்தைகளைக் கவரும் வகையில் சுவாரஸ்யம், திகில் ஆகியவற்றை உள்ளடக்கிய Natural History Museum-ஆக மாற்றி அமைக்க வேண்டும். அந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் அரங்கு அமைத்து `ஸ்கேரி ஜங்கிள்’ (Scary Jungle) நிறுவ வேண்டும். இதில் டைனோசர், ரைனோசரஸ் உள்ளிட்ட விலங்குகளின் மாதிரிகளைத் திகிலுட்டும் வகையில் வடிவமைப்பது அவசியம். இந்த வடிவமைப்பை, காடு போன்ற பயமுறுத்தும் தோற்றத்தில் அமைக்க வேண்டும். மேலும், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களைக் கவரும் வகையில் அரியலூரின் வரலாற்றுச் சிற்பங்களையும், சோழர்களின் கல்வெட்டுகளையும் இணைத்தால் இன்னும் கூடுதல் வரவேற்பு பெறும். பல்வேறு நாடுகள், பிற மாநிலங்களிலிருந்தும் கல்வி அடிப்படையில் நேரடிக் கள ஆய்வுக்காகவும் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்விடத்துக்கு வந்து போகின்றனர். அவர்களுக்கு உரிய கல்வி உள் கட்டமைப்பை நிறுவுவது பயனுள்ளதாக இருக்கும்.

கனவு - 15 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

அரியலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை எளிதாகச் சென்றடையவும், குறைந்த நேரத்தில் அதிக இடங்களைப் பார்வையிடும் வகையிலும் ஒரு Tourist Circuit Map தயாரிப்பது அவசியம். அந்தவகையில் அரியலூரிலிருந்து 40 நிமிடப் பயண தூரத்தில் சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கரைவெட்டி பறவைகள் சரணாலயம். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் 20 நிமிடப் பயண தூரத்தில் அமைந்துள்ளது வாரணவாசி புதைபடிவ அருங்காட்சியகம். இங்கிருந்து ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 45 நிமிடங்களில் ஜெயங்கொண்டத்தை அடையலாம். அங்கே இளைப்பாறுதலுக்கான உணவகங்கள், விடுதிகள் உள்ளன. அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் 10 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. இந்த இடத்துக்குச் சுமார் 15 நிமிடங்களில் சென்று சேரலாம். இந்தக் கோயிலை தரிசித்துவிட்டு, அங்கிருந்து அருகேயுள்ள சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளையும் பார்க்க முடியும்.

உலக நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து அரியலூருக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 1.7 லட்சம் பேர் மட்டும்தான். ஆனால், திருவனந்த புரத்துக்குச் சுமார் 2 கோடி பேரும், சென்னைக்கு 4 கோடி பேரும் வருகின்றனர். இவர்களிலிருந்து 5 சதவிகிதத்தைக் கைப்பற்றினாலே ஆண்டுக்குச் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதோடு, பொருளாதார மேம்பாடும் அடைவார்கள்.

* கங்கைகொண்ட சோழபுரத்தை எனது குழு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது, அதில் வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்து நிறைய தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டியிருந்தது. அதற்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தவர் கோமகன் (பொறியாளர், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்).

(இன்னும் காண்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism