மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

அரியலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
அரியலூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்தில் அல்ட்ரா டெக் சிமென்ட், இந்தியா சிமென்ட்ஸ், டால்மியா சிமென்ட்ஸ், மெட்ராஸ் சிமென்ட், செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன், தி ராம்கோ சிமென்ட்ஸ், ஜேப்பியார் சிமென்ட்ஸ் உள்ளிட்ட சுமார் எட்டு சிமென்ட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் இந்நிறுவனங்களால் பெரிய அளவில் அரியலூர் மக்கள் பயனடையவில்லை! இந்த சிமென்ட் நிறுவனங்களில் பணிபுரிய அதற்குரிய கல்வித்தகுதி பலரிடம் இல்லாததால், பெரிய அளவிலான வேலைவாய்ப்பு இப்பகுதி மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் சிமென்ட் தொழில்நுட்பத்தைக் கற்றுத்தர தனியாகக் கல்லூரி இல்லை. இந்திய அரசின் சிமென்ட் மற்றும் கட்டடப் பொருள்களுக்கான தேசிய கவுன்சில் (National Council for Cement and Building Materials) ஹைதராபாத்தில் உள்ளது. இங்கே ஓராண்டு டிப்ளோமா படிப்பும் (Diploma in Cement Technology), ஆறு வார சர்டிஃபிகேட் கோர்ஸும் (Cement Manufacturing Technology including Simulator Based Training) இருக்கின்றன. மேலும், அகமதாபாத், புவனேஸ்வர், பல்லாகார் (Ballabgarh) உள்ளிட்ட இடங்களிலும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இதற்கான படிப்பு ஒன்றுகூட இல்லை.

கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

சிமென்ட் தொழில்நுட்பக் கல்லூரி!

அரியலூரில் சுமார் எட்டு சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளதால், இதற்கு அருகே ஓர் அரசு சிமென்ட் தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவ வேண்டும். இதனால் பல நூறு இளைஞர்கள் படித்து, அதனால் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏற்கெனவே பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கிவருகிறது. அதேபோல சென்னை, கிண்டியில் சிப்பெட் (CIPET) இயங்கிவருகிறது. இவ்விரு கல்லூரிகளை அடிப்படையாகக்கொண்டு, சிறிது மாற்றங்களுடன் புதிய பரிமாணத்தில் சிமென்ட் தொழில்நுட்பக் கல்லூரியை அமைக்க வேண்டும்.

அந்தவகையில், ஓராண்டு டிப்ளோமா படிப்பு (Diploma cement technology), மூன்று ஆண்டுகள் படிப்பு (B.Sc cement technology), நான்கு ஆண்டுகள் படிப்பு (B.Tech cement technology) என வகை பிரித்துப் பயிற்றுவிக்கலாம். இதைத் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை (Director of industries and commerce) சார்பில் தொழில்நுட்பக் கல்லூரியை (Govt Institute of Cement technology) அமைப்பதோடு, அங்கே சிமென்ட் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூடத்தையும் நிறுவ வேண்டும். இக்கல்லூரியை அமைக்க நமக்கு சுமார் 10 ஏக்கர் நிலமும், குறைந்தபட்ச முதலீடாக 50 கோடி ரூபாயும் தேவைப்படும். டிப்ளோமா, ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், இன்ஜினீயரிங் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்லூரியாக இருப்பதால், மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பயனடைவர். அதோடு தொழிற்சாலைகளுக்குத் தேவையான பலதரப்பட்ட வேலைகளுக்கான பல படிநிலைகள் உள்ள பதவிகளையும் அவர்கள் வகிக்க முடியும். இதனால், அந்தப் பகுதியில் பொருளாதார முன்னேற்றம் அடைவதோடு, அதைச் சுற்றிப் பிற தொழில்களும் வளர்ச்சியடையும்.

இந்தக் கல்லூரியை அரசுதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை. மாறாக, இங்கே அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் சில பள்ளி, கல்லூரிகளை நடத்திக் கொண்டிருப்பவைதான். அவர்களில் எவர் ஒருவரும் இக்கல்லூரியை நிறுவலாம். அப்படி அமையும்போது, உள்ளுர் மாணவர்களுக்கு முன்னுரிமை, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்பினருக்குச் சலுகை, அரசின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்றவற்றைக் கவனத்தில்கொள்வது அவசியம். அதேபோல அரசும் இடம், மானியம், கடனுதவி போன்ற சலுகைகளைத் தந்து தனியாரை ஊக்குவிக்க வேண்டும்.

கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

சவுக்கு - பேப்பர் தொழிற்சாலை!

தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் கம்ப்யூட்டர், ஐபாட், செல்போன் என டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சொடக்குப் போடும் நேரத்தில் எல்லா வகையான தகவல்களும் கைக்குக் கிடைத்துவிடுகின்றன. இருந்தபோதிலும் தினசரிப் பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பலதரப்பட்ட நூல்கள் எனப் பலவிதங்களில் பேப்பரின் தேவை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தேவையைக் கருத்தில்கொண்டு, இந்த மாவட்டத்தில் ஒரு பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும். அதற்கு இங்கேயுள்ள சுமார் 8,000 ஏக்கர் மானாவாரி நிலத்திலிருந்து போதுமான நிலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பேப்பர் உற்பத்தியில் தனியார் மட்டுமின்றி, அரசும் ஈடுபட்டுவருகிறது. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அரசு சார்பில் தொடர்ந்து நல்ல லாபத்துடன் செயல்பட்டுவருகிறது. அதே போன்று தனியார் நிறுவனமான சேஷாயியும் பேப்பர் உற்பத்தியில் முன்னால் நிற்கிறது. ஏறக்குறைய 1,300 தொழிலாளர்களுடன் ஆண்டுக்குச் சுமார் 1,208 கோடி ரூபாய் அளவில் வருமானம் பெறுகிறது.

பலவிதமான மரங்களிலிருந்து பேப்பர் உருவாக்க முடியும் என்றாலும், பெரும்பாலும் சவுக்கு மரத்திலிருந்துதான் பேப்பர் தயாரிக்கப்படுகிறது. சவுக்கில் பல வகை உண்டு. மலைப்பகுதிகளில் செழித்து வளரும் பைன் ட்ரீ (Pine Tree) பேப்பர் தயாரிக்க உகந்த மரங்களில் ஒன்று. அதேபோல, சிஹெச்எஸ்1 (CHS1), சிஹெச்எஸ்5 (CHS5) உள்ளிட்ட ரகங்களையும் வேளாண் வல்லுநர்கள் சிபாரிசு செய்கிறார்கள். பொதுவாக சவுக்கு மரங்களுக்கு அதிக நீர் தேவைப்படாது. மழைக்காலங்களிலிருந்து கிடைக்கும் நீரே அதற்குப் போதுமானதாக இருக்கும் என்பதால், இந்த வகை ரக மரங்களை மானாவாரி நிலத்தில் பயிரிட வேண்டும்.

கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 17 - அரியலூர் - வளமும் வாய்ப்பும்

இந்த மாவட்டத்திலுள்ள மானாவாரி நிலத்திலிருந்து சுமார் 5,000 ஏக்கர் மட்டும் எடுத்துக்கொண்டு, சவுக்கு பயிரிட்டால் 80,000 டன் பேப்பர் கிடைக்கும். அந்த வகையில் சவுக்குத் தொழிற்சாலையிலிருந்து மட்டும் ஆண்டுக்குத் தோராயமாக 320 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம். நேரடி, மறைமுகமாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதோடு பொருளாதார மேம்பாட்டையும் அடைவார்கள்.

(இன்னும் காண்போம்)

நம் அடுத்த கனவு தருமபுரி!