Published:Updated:

‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்... பிடிபட்டது எப்படி? - சினிமாவை மிஞ்சும் ‘திக் திக்’ நிமிடங்கள்!

‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்

ஒவ்வொரு கொள்ளை முடிந்த பின்னரும் செல்போன், சிம் கார்டு இரண்டையுமே எரித்துவிடுவது அவர்களின் வழக்கம்.

‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்... பிடிபட்டது எப்படி? - சினிமாவை மிஞ்சும் ‘திக் திக்’ நிமிடங்கள்!

ஒவ்வொரு கொள்ளை முடிந்த பின்னரும் செல்போன், சிம் கார்டு இரண்டையுமே எரித்துவிடுவது அவர்களின் வழக்கம்.

Published:Updated:
‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்

மைசூர் சிறைச்சாலையில் பிளான், நாடு முழுக்கக் கொள்ளை, மத்தியப் பிரதேசத்தில் பதுக்கல்... என பக்காவாக ‘தொழில்’ செய்துவந்த பௌரியா கொள்ளைக் கும்பலை (பவாரியா கொள்ளையர்கள் வேறு), கடுமையான முயற்சிக்குப் பிறகு கைதுசெய்திருக்கிறது அரியலூர் மாவட்டக் காவல்துறை. `தீரன்’ திரைப்படத்தையும் மிஞ்சும் அந்த உண்மைச் சம்பவம் இதுதான்!

கடந்த மார்ச் 4-ம் தேதி தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்பில் 61 பவுன் நகை கொள்ளை, ஏப்ரல் 16-ல் கரூர் மாவட்டம் புலியூரிலுள்ள சிமென்ட் தொழிற்சாலை ஊழியர் குடியிருப்பில் 21 பவுன், அதற்கு மறுநாள் அரியலூர் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை ஊழியர் குடியிருப்பில் 81 பவுன் தங்க நகைகள் கொள்ளை என அடுத்தடுத்து குடியிருப்புகளைக் குறிவைத்து நடந்த கொள்ளைச் சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தியது.

‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்... பிடிபட்டது எப்படி? - சினிமாவை மிஞ்சும் ‘திக் திக்’ நிமிடங்கள்!

அதேநேரத்தில், ஒரே மாதிரி நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளின் கைரேகைகூட கிடைக்காமல் திணறிப்போனது காவல்துறை. ஆனால், 25 நாள்களுக்குப் பிறகு ஒற்றை செல்போன் சிக்னலில் நூல் பிடித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, பல்வேறு சாகசப் பயணங்களுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் நான்கு குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறது.

சென்டிமென்ட் செல்போன்!

இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படைக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் சகாய அன்பரசுவிடம் பேசினோம். “ஒவ்வொரு கொள்ளை முடிந்த பின்னரும் செல்போன், சிம் கார்டு இரண்டையுமே எரித்துவிடுவது அவர்களின் வழக்கம். ஆனால், ‘கடைசியாக அரியலூரில் 81 பவுன் கொள்ளையடித்தபோது பயன்படுத்திய ராசியான செல் என்பதால், சிம்மை மட்டும் எரித்துவிட்டு, அதே செல்லை மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த செல் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்த நிலையில், 25 நாள்களுக்குப் பிறகு அதில் புதிய சிம் கார்டை செருகிய சிக்னல் எங்களுக்குக் கிடைத்தது. அதை ஃபாலோ செய்தபோது, மத்தியப்பிரதேசம் டு பெங்களூர் வந்து தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்குள் நுழைந்த விஷயம் தெரியவந்தது. உடனே இரவோடு இரவாக தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அதற்குள் அவர்கள் எட்டு வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்துவிட்டு, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர்.

‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்... பிடிபட்டது எப்படி? - சினிமாவை மிஞ்சும் ‘திக் திக்’ நிமிடங்கள்!

ருசி கண்ட பூனையாக மீண்டும் அவர்கள் அரியலூருக்குள் நுழையலாம் என யூகித்து, அரியலூரிலுள்ள காவல்துறையை உஷார்படுத்தினார் எஸ்.பி. கணித்ததுபோலவே, பல மணி நேரத்துக்குப் பிறகு அரியலூரில் சில விநாடிகளுக்கு செல் ஆன்-ஆகி சிக்னல் காட்டியது. விரைந்து சென்ற நாங்கள் அமீர், ஹாளியா, சர்தார் ஹுரூ ஆகிய மூன்று கொள்ளையர்களைக் கைதுசெய்தோம். ஆனால், இவர்களுக்குத் தலைமை தாங்கிய நாம்கா பௌரியா மட்டும் தப்பிவிட்டான். அவனைப் பிடிக்க மத்தியப்பிரதேசம் வரை தேடியலைந்து கைது செய்தோம். அப்போதுதான், இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அனைத்துமே மைசூர் சிறையிலுள்ள பரத் பௌரியா என்பவனால் திட்டமிடப்பட்டு, ஒவ்வொன்றும் அவனது வழிகாட்டுதலின்படியே நடத்தப்பட்டிருக்கும் விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது” என்றார்.

நாம்கா பௌரியா
நாம்கா பௌரியா

மாறுவேடத்தில் தேடுதல் வேட்டை!

‘ஆபரேஷன் பௌரியா’-வுக்காக அரியலூரிலிருந்து 20 பேர்கொண்ட தனிப்படையினர், இரண்டு வேன்களில் ஆயுதங்களோடு மத்தியப்பிரதேசம் சென்றிருக்கிறார்கள். அங்கு தார் மாவட்டம், டாண்டா போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிலுள்ள பகோலி, பக்கில்டியா கிராமங்கள்தான் கொள்ளையர்களின் பூர்வீகம். கொள்ளையடிப்பதை மட்டுமே தொழிலாகக்கொண்ட அந்தக் கிராமங்களைச் சேர்ந்த சிலரை லோக்கல் போலீஸார் அழைத்து விசாரிக்க, கோபமடைந்த கிராமத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனையே தீவைத்துக் கொளுத்தி யிருக்கிறார்கள். எனவே, ஏ.கே.47 ஆயுதங்களோடு, லோக்கல் போலீஸார் சிலரையும் அழைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் கிராமத்தினுள் நுழைந்திருக்கிறது போலீஸ். தோளில் ஆயுதம், அது வெளியே தெரியாமல் இருக்க, உடல் முழுக்க போர்வையால் சுற்றி, தலையில் முண்டாசு கட்டி, அந்தக் கிராமத்தினர்போலவே உருமாறி தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருக்கின்றனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும், ஓலைவேய்ந்த தார்ப்பாய் மூடிய ஒரே வீட்டில் 20 பேருக்கும் மேல் வசிப்பார்களாம். பெரும்பாலும் பெண்கள்தான் இருப்பார்களாம். ஆண்களோ, வருடத்தில் இரண்டு மாதங்கள் தவிர மற்ற நேரங்களில் கொள்ளையடிக்கக் கிளம்பிவிடுவார்களாம். அன்று நள்ளிரவில் அப்படியொரு வீட்டில் வைத்துத்தான் கொள்ளையர்களைப் பிடித்திருக்கிறது போலீஸ்.

‘பௌரியா’ கொள்ளைக் கும்பல்... பிடிபட்டது எப்படி? - சினிமாவை மிஞ்சும் ‘திக் திக்’ நிமிடங்கள்!

பௌரியாக்களைப் பற்றி விசாரித்தால், கொள்ளையடிப்பதை நுணுக்கமாகவும் தைரியமாகவும் செய்யக்கூடியவர்கள், தேவைப்பட்டால் கொலையும்கூடச் செய்வார்கள். வெறும் ரொட்டியை மட்டுமே தின்று, கிடைத்த இடங்களில் உறங்கி எழுந்து, நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சுற்றியலைந்து கைவரிசை காட்டிவருகிறார்கள். ஆந்திரா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் என இந்தியா முழுக்கக் கைவரிசை காட்டிய மிகப்பெரிய பௌரியா கொள்ளைக் கும்பலை அவர்களின் வரலாற்றிலேயே முதன்முறையாகக் கைதுசெய்திருக்கிறது அரியலூர் மாவட்ட காவல்துறை என்கிறார்கள்.

‘‘இன்னும் எங்கள் ஆபரேஷன் முழுதாக முடியவில்லை. இந்தக் கொள்ளைக்கூட்டத் தலைவனான மைசூர் சிறையிலுள்ள பரத் பௌரியாவை விரைவில் கைதுசெய்து, கொள்ளைபோன நகைகள் எவ்வளவு, அவற்றை எங்கு பதுக்கிவைத்திருக்கிறார்கள் என்பதை விசாரிக்கவிருக்கிறோம். விரைவில் அனைத்தையும் மீட்டுவிடுவோம்” என நம்பிக்கையோடு சொல்கிறது அரியலூர் காவல்துறை!

பரத் பௌரியா மட்டுமே அறிந்த ரகசியம்!

கொள்ளையடிப்பதற்கும், தப்பிச் செல்வதற்கும் எந்த வாகனத்தையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. குவார்ட்டர்ஸ்களைச் சுற்றி (அங்கு மட்டுமே பெரும்பாலும் திருடுகிறார்கள்) பெரும்பாலும் புதர்ப் பகுதிகளே இருப்பதால், இரவில் கொள்ளையடித்தவுடன் புதர்களில் பதுங்கியிருந்து, மறுநாள் போலீஸ் வருவதற்கு முன்பு, முதல் பேருந்தைப் பிடித்துக் கிளம்பிவிடுவார்களாம். மத்தியப்பிரதேசம் சென்றுதான் மீண்டும் பரத் பௌரியாவைத் தொடர்புகொள்வார்களாம். அப்போது, “இந்த இடத்தில், இந்த நம்பர் கார் வரும். அவர்களிடம் நகையைக் கொடுங்கள், பணம் தருவார்கள்” என உத்தரவிடுவானாம் பரத் பௌரியா. அதை வாங்கிச் செல்பவர்கள், அவற்றை இந்தூர், போபால் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றுவிடுவார்களாம். அவர்கள் யார் என்பது பரத் பௌரியா மட்டுமே அறிந்த ரகசியமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism