Published:Updated:

திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை, ருத்ராட்ச மாலை! -தஞ்சையில் கைதான அர்ஜுன் சம்பத்

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை போர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ருத்ராட்ச மாலை அணிவிக்கும் அர்ஜுன் சம்பத்
ருத்ராட்ச மாலை அணிவிக்கும் அர்ஜுன் சம்பத்

தஞ்சையில் மர்ம நபர்களால் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை போர்த்திள்ளார். மேலும், ருத்ராட்ச மாலை அணிவித்து நெற்றியில் திருநீறு பூசியதோடு, கற்பூரம் ஏற்றி வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மக்கள் கட்சியினர்
இந்து மக்கள் கட்சியினர்

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் அமைந்துள்ளது 5 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை. இங்குள்ள பொதுமக்களால் 200 வருடங்களுக்கு முன்பு இந்தச் சிலை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முக்கிய விஷேச தினங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டியதுடன் முகத்தில் சாணம் அடித்துவிட்டுச் சென்றனர். இதனால், கொதித்தெழுந்த மக்கள், `திருவள்ளுவருக்கு அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்' என கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தனிப்படை அமைத்து இச்செயலைச் செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

திருவள்ளுவருக்குக் காவி உடை
திருவள்ளுவருக்குக் காவி உடை

இந்தநிலையில், சதய விழாவை முன்னிட்டு ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ஆதரவாளர்களுடன் நேராக பிள்ளையார்பட்டிக்குச் சென்றார். அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடையைப் போர்த்தியவர், ருத்ராட்ச மாலையை அணிவித்து சிலையின் நெற்றியில் திருநீறு பூசினார். இதைத் தொடர்ந்து கற்பூரம் ஏற்றி தீபத்தைக் காட்டிவிட்டு, திருவள்ளுவரை வணங்கிவிட்டு கீழே இறங்கிச் சென்றார்.

இதுகுறித்துப் பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், ``திருவள்ளுவர் இறைபக்தி உடையவர். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திருவள்ளுவருக்கு எனத் தனிக் கோயில் உள்ளது. அவருடைய பழைய உருவ அமைப்பே காவி உடை அணிந்தபடிதான் இருந்திருக்கிறது. அதனால்தான் நாங்கள் காவி உடை, ருத்ராட்ச மாலையை அணிவித்தோம்'' என்கின்றனர்.

இதனையடுத்து, உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதிக்கு மரியாதை செய்துவிட்டு வந்த அர்ஜுன் சம்பத்தைப் போலீஸார் கைது செய்தனர்.