Published:Updated:

UK: `எங்கள் பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!’ - அர்னாப் நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம்

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி

கடந்த 2019-ம் ஆண்டு, செப்டம்பர் 6-ம் தேதியன்று யுனைடெட் கிங்டமில் ரிபப்ளிக் பாரத் சேனலில் `பூச்தா ஹை பாரத்’ (Poochta Hai Bharat) நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

கடந்த 2019 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி ஒளிபரப்பப்பட்டதாக அர்னாப் கோஸ்வாமியின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை யுனைடெட் கிங்டம் கட்டுப்பாட்டாளர்கள் குழு கண்டறிந்து அபராதம் விதித்துள்ளனர்.

சமீப காலமாக, அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. டி.ஆர்.பி. வழக்கில் ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரிபப்ளிக் டிவி'யின் ஹிந்தி மொழி செய்தி சேனல் பிரிவான ரிபப்ளிக் பாரத்திற்கு (Republic Bharat) இங்கிலாந்தின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் 20,000 பவுண்டுகள் (கிட்டத்தட்ட ரூபாய் 19.73 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. தனிநபர்கள், குழுக்கள், மதங்கள் மற்றும் சமூகங்களை இழிவுபடுத்தும் விதமாக ரிபப்ளிக் பாரத்தின் நிகழ்ச்சி இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சேனலில் மன்னிப்பினை கேட்குமாறும் ரிபப்ளிக் பாரத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி

கடந்த 2019-ம் ஆண்டு, மாதம் 6-ம் தேதியன்று பிரிட்டனில் ரிபப்ளிக் பாரத் சேனலில் `பூச்தா ஹை பாரத்’ (Poochta Hai Bharat) நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்தநிகழ்ச்சியின் தொகுப்பாளரும், ரிபப்ளிக் டி.வி-யின் தலைமைச் செய்தி ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிகழ்ச்சியில் பங்கெடுத்த விருந்தினர்களில் சிலர் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் ரிபப்ளிக் பாரத்தை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை வைத்திருக்கும் வேர்ல்டுவியூ மீடியா நெட்வொர்க் லிமிடெட் (Worldview Media Network limited) மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ரிபப்ளிக் பாரத்தில் வெளியான பூச்தா ஹை பாரத் நிகழ்ச்சி இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலப் பணி தொடர்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் இந்திய இலக்குகளுக்கு எதிராக பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டு கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

``நிகழ்ச்சியின் விவாதத்தின்போது அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிகழ்ச்சியின் விருந்தினர்கள் தெரிவித்த கருத்துகள், பாகிஸ்தானிய மக்களுக்கு எதிரான, வெறுக்கத்தக்க மற்றும் பாகிஸ்தான் மக்களை இழிவாக நடத்தும்விதத்தில் அமைந்துள்ளன" என்று கட்டுப்பாட்டாளர்கள் குழு தெரிவித்திருக்கிறது.

விருந்தினர்கள் மற்றும் கோஸ்வாமி நிகழ்ச்சியில், பாகிஸ்தானிய மக்களைக் குறிப்பிட்டுப் பேசுகையில், ``பாகிஸ்தானிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அவர்களின் தலைவர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பயங்கரவாதிகள். அங்கே ஒவ்வொரு குழந்தையும் ஒரு பயங்கரவாதி" என்பது போன்ற கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்திருக்கிறது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானிய மக்களைக் குறிப்பிட்டு, ``நாங்கள் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம்; நீங்கள் பயங்கரவாதிகளை உருவாக்குகிறீர்கள்" என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், நிகழ்ச்சியின் விருந்தினர்களில் ஒருவரான ஜெனரல் சின்ஹா, பாகிஸ்தான் மக்களை `யாசகர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அர்னாப்
அர்னாப்

இந்த நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்த பிரிட்டனின் செய்தி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையமான ஆஃப்காம் (ofcom), ``பார்வையாளர்களிடையே பாகிஸ்தான் மக்கள் மீதான சகிப்பின்மையை ஊக்குவித்து, நியாயப்படுத்துகிறது” எனக் கூறியிருக்கிறது. மேலும், `பாக்கி’ (Pakki) என்ற வார்த்தையின் பயன்பாட்டை கவனத்தில்கொண்ட ஆஃப்காம், `இது ஒரு இனவெறி வார்த்தை’ என்றும், `இங்கிலாந்து பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றும் தெரிவித்திருக்கிறது.

அதையடுத்து, பிரிட்டனில் ரிபப்ளிக் டி.வி நிகழ்வுகளை ஒளிபரப்பும் வேர்ல்ட்வியூ மீடியா நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத்துறை 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்திருக்கிறது. இது, இந்திய மதிப்பில் ரூபாய் 19.73 லட்சம். மேலும், இது குறித்து ரிபப்ளிக் டி.வி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு