Published:Updated:

`என் பப்பா என்னை வெளியே தள்ளி 'ஓடிக்கோ' என்றார்'- நிலச்சரிவில் சிதிலமடைந்த கேரளத்தின் கதைகள்!

'உருள்பொட்டல்' என மலையாள மக்கள் பீதியுடன் கூறும் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களை நினைத்து உறவுகள் கண்ணீர் வடிக்கின்றன. பெருகி ஓடும் வெள்ளத்தில் வீடுகள் மண் குவியலாகக் கிடப்பதைப் பார்த்து மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்

2018, 2019-ம் ஆண்டுகளில் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகள் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டன. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டன. ஒட்டுமொத்த கேரளத்தையும் மறு சீரமைப்பு செய்யும் அளவுக்கு கனமழை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மழை என்றாலே கேரள மக்கள் அலறும் அளவுக்கு சேதங்களைக் கடந்த மழைக்காலத்தில் கேரளம் சந்தித்தது. இந்த ஆண்டு கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர் மழை பெய்துவருகிறது. தினமும் ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் என பலவித எச்சரிக்கைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுவருகின்றன. கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிக்கல் பகுதியிலும், இடுக்கி மாவட்டத்திலும் கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்தனர். கேரள மழையில் 39 பேர் மரணம் அடைந்ததாகவும், ஆறு பேர் காணாமல்போனதாகவும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

நிலச்சரிவு
நிலச்சரிவு
மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பிறகு பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்!

கேரளத்தில் பெருமழையால் 213 வீடுகள் முழுமையாகத் தகர்ந்து வீழ்ந்தன. 1,393 வீடுகள் பாதி உடைந்து சேதம் அடைந்திருக்கின்றன. கோட்டயம் மாவட்டம், முண்டகாயம், கல்லேப்பாலம் பகுதியில் ஜெபி என்பவரது வீடு வெள்ளத்தில் சுக்குநூறாக உடைந்துபோன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை எடுத்த அமீர் கூறுகையில், ``என் வீடு ஜெபி-யின் வீட்டுக்கு எதிரில் மேடான பகுதியில் இருக்கிறது. என் வீட்டிலிருந்து பார்த்தபோது ஜெபி-யின் வீட்டின் பின்புறத்தில் பாய்ந்து சென்ற வெள்ளம் மண்ணைக் கரைத்துச் செல்வதைக் கண்டேன். ஜெபி-யின் இளைய மகளின் திருமணத்துக்காக நிறைய பொருள்கள் வாங்கி வைத்திருந்தார்கள். வீடு இடிவதற்கு 15 நிமிஷத்துக்கு முன்பு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டிலுள்ள பொருள்களை வெளியே எடுப்பதற்காக என்னை அழைத்தார்கள். நான் அவரது வீட்டுக்குச் சென்று உதவினேன். அவர்களது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் வீடு கவிழ்ந்து விழுந்தது. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஜெபி-யின் வீடு இடிந்து விழுந்த சிறிது நேரத்தில் சிறிது தொலைவில் உள்ள கண்ணனின் வீடு இடிந்து விழுந்தது" என்றார்.

இந்த ஆற்றின் கரையிலுள்ள மஜித் என்பவரது வீடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. மஜித் கூறும்போது, ``இங்கு 35 வருடங்களாக வசிக்கிறேன். எனக்கு 61 வயது ஆகிறது. இது போன்ற சம்பவத்தை இப்போதுதான் பார்க்கிறேன். ஆற்றில் வெள்ளத்தின் மட்டம் உயர்வதை அறிந்துகொள்ள இங்கு ஓர் அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவைத் தாண்டி தண்ணீர் மட்டம் உயர்ந்ததும், சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோம்" என்றார். கல்லேப்பாலம் பகுதியில் அடுத்தடுத்து உடைந்து வீழ்ந்த வீடுகளைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. ஒரு செங்கல்கூட மிஞ்சாத அளவுக்கு ஆற்றுவெள்ளத்தில் காணாமல்போன வீடுகளை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர் மக்கள்.

செம்பு பாத்திரத்தில் சென்று திருமணம்
செம்பு பாத்திரத்தில் சென்று திருமணம்

ஆலப்புழா மாவட்டம், அப்பர் குட்டநாடு பகுதியில் செம்புப் பாத்திரத்தில் மிதந்து சென்று திருமணம் செய்து கவனம் ஈர்த்திருக்கின்றனர் ஆகாஷ்- ஐஸ்வர்யா தம்பதியர். செங்கனூர் தனியார் மருத்துவமனையில் நர்ஸிங் அசிஸ்டென்ட்டாக வேலை செய்யும் ஐஸ்வர்யாவும், அதே மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளரான ஆகாசும் காதலித்து, வீட்டினர் எதிர்ப்பை மீறி கடந்த 15-ம் தேதி பதிவு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அம்பலப்புழா உள்ளிட்ட சில கோயில்களுக்குச் சென்று தாலிகடும் நிகழ்ச்சி நடத்த முயன்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கிய பனையனூர் காவு கோயிலில் திருமணம் செய்ய தீர்மானித்தனர். அங்கு செல்லும்போது ஆடை நனையாமல் இருக்க நண்பர்கள் சேர்ந்து காதல் ஜோடியை பெரிய செம்பு பாத்திரத்தில் அமரவைத்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு உயரமான மேடையில் தாலிகட்டும் வைபவம் முடிந்த பிறகு மீண்டும் அதே செம்புப் பாத்திரத்தில் அமர்ந்து கரையை அடைந்தனர். இந்த மணமக்களின் புகைப்படம் கேரளத்தில் வைரலாகப் பரவியது.

ஹிமாச்சல்: `திடீர் நிலச்சரிவு; உருண்டோடி விழுந்த பாறைகள்!' - பெண் மருத்துவர் உட்பட 9 பேர் பரிதாப பலி
நிலச்சரிவில் சிக்கி மீண்ட சிறுவன் ஜெபின்
நிலச்சரிவில் சிக்கி மீண்ட சிறுவன் ஜெபின்

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், இடுக்கி கொக்கையாறு பகுதியில் வசித்துவந்த ஷாஜி என்பவரின் வீடு முழுவதும் தகர்ந்தது. ஷாஜி தனது 11 வயது மகன் ஜெபினைக் காப்பாற்றிவிட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். தந்தையை நினைத்து அழும் ஜெபினின் சோகக் குரல் கேரளாவையே உலுக்கியிருக்கிறது. ``நானும் பப்பாவும் (அப்பா) வீட்டுக்குள் இருந்தோம். அப்போது பெரிய சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தோம். ரோட்டுக்கு எதிர்பக்கமுள்ள மலையிலிருந்து பெரிய பாறாங்கற்கள் எங்கள் வீட்டை நோக்கி உருண்டு வந்தன. என் பப்பா என்னை வெளியே தள்ளி 'ஓடிக்கோ...' எனச் சத்தம்போட்டார். திடீரென கற்களும் மண்ணும் வந்து விழுந்தன. நான் மயங்கிவிட்டேன். பின்னர் வெள்ளத்தில் விழுந்தபோது மயக்கம் தெளிந்தது. தண்ணீரில் மிதந்துவந்த ஒரு காபி மரக் கம்பைப் பிடித்தேன்.

மீண்டும் வெள்ளப்பெருக்கு என்னைக் கீழ்ப்பகுதியிலுள்ள தோப்புக்கு இழுத்துச் சென்றது. அங்கிருந்து தப்பித்து வந்த எனக்கு காலிலும், உடல் முழுவதும் பலத்த அடி பட்டிருந்தது. மருத்துவமனையில் சேர்த்தபோது நான் பப்பாவைத் தேடினேன். அதன் பிறகு நான் பப்பாவை சடலமாகத்தான் பார்த்தேன். இன்னும் பெரிய கற்கள் உருண்டு வரும். என்னைக் காப்பாற்ற பப்பா இல்லையே..." எனக் கதறுகிறான் ஏழாம் வகுப்பு மாணவன் ஜெபின். ஜெபினின் தாய் ஆனியும், சகோதரனும் எர்ணாகுளத்திலுள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றதால் நிலச்சரிவில் சிக்காமல் தப்பித்திருக்கிறார்கள். இது போன்று பல ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது கனமழை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு