Published:Updated:

`இந்த தருணத்தில் வாழ்தல்’ - சத் தர்ஷன் ஆனந்தகுமார் | இவர்கள் | பகுதி 15

சத் தர்ஷன் ஆனந்தகுமார் | இவர்கள்
News
சத் தர்ஷன் ஆனந்தகுமார் | இவர்கள்

விலங்குகளும் பறவைகளும் பூச்சியினங்களும் தழைத்து வாழும் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளதால், அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவற்றின் ஆனந்த தாண்டவத்தை ஒருவரால் கண்டும், கேட்டும் உணர முடியும்.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

``அந்தி நேரத்தில் இலைகளை சலசலத்து சிலிர்க்கும் மரங்களைக் காணும்பொழுதெல்லாம் கால்களுக்கு ஒரு நாடோடியின் வேட்கை வந்துவிடுகிறது. அவ்வொலியானது மனதின் ஏக்கங்களை ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டது. இயற்கையிடம் சரணடைதல் என்பது தப்பித்தலோ வடிகாலோ அல்ல. அது வீடு திரும்புதல், கருவறைக்கு திரும்புதல். இயற்கையின் பாதைகள் அகத்தை நோக்கியே திரும்புகின்றன. அதன் ஒவ்வொரு தடமும் ஒரு ஜனனம். கல்லறைக்கும் கருவறைக்கும் ஒரே சாயல். அது தாய்மையின் சாயல் கூட.”

- ஹேர்மன் ஹெசே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனிதர்களுக்கு ஒரு வயதிற்குப்பின் எளியதொரு வாழ்வை வாழவேண்டுமென்பது விருப்பமாயிருக்கும், நம்மில் பலரும் அந்த விருப்பத்தை செயல்படுத்த நினைப்பதில்லை. மனிதன் அனுபவங்களுக்குப் பதிலாக ஆடம்பரங்களையே தேடிச் செல்கிறவனாய் இருக்கிறான். அதனாலேயே விட்டேற்றிகளாய்ச் சுற்றுகிறவர்களின் மீது ஒவ்வாமை ஏற்படுகிறது. தனது சுக துக்கங்களை ஒதுக்கிவைத்து உலகைச் சுற்றிவரும் பயணி தான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் அந்த உலகத்திற்கே கொடையாகத் திருப்பித் தருகிறான்.

கொமோரா என்றொரு நாவலை எழுதத் துவங்கிய நாட்களில்தான் ஆன்மீக ஞானி குர்ஜிஃபைக் குறித்து முதல் முறையாக அறிந்துகொண்டேன்.

ஓஷோ தன்னுடைய ஆசான்களில் ஒருவரென வியந்துபோற்றும் குர்ஜிஃபைக் குறித்து தேடி வாசிக்கத் துவங்கினேன். வாசிக்கக் கடினமான அந்த நூல்களைப் புரிந்துகொள்ள சிரமப்பட்ட வேளையில்தான் குர்ஜிஃப் குறித்து தமிழில் விலாவரியானதொரு நூல் எழுதப்பட்டிருப்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டேன். அந்த நூலை எழுதியவர் என்னும் அடிப்படையில்தான் ஆனந்தகுமார் அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். குர்ஜிஃபை ஆன்மீகப் பாதையில் நிகழ்த்திய பயணங்களும் கண்டுபிடிப்புகளும் மகத்தானவை, அப்படியான ஒருவரை வாசித்து முழுதாகப் புரிந்துகொள்வதென்பது வாழ்நாள் முழுமைக்குமான பணி. உலகம் முழுக்க அவரின் வழிபாட்டு முறையை பின்பற்றவும், அவரின் பாதையில் பயணிக்கவும் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் இயங்கி வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அவருக்கென குழுக்களையோ அவரைப் பின்பற்றுகிறவர்களையோ காண்பது அரிது.

ஆனந்தகுமார் எழுதிய நான்காம் தடம் – ஒரு போக்கிரி ஞானியின் கதை என்று நூல் குர்ஜிஃப் குறித்த நீண்ட அறிமுகத்தையும்

அவரின் வாழ்வையும் கண்டுபிடிப்புகளையும் குறித்து அபாரமான திறப்புகளையும் நமக்குத் தருகிறது.

இவர்கள்
இவர்கள்

கோவை நகரிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் அட்டப்பாடியில் மலைகளுக்கு நடுவில் சிறுவாணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சத்-தர்ஷன் என்னும் அற்புதமான அந்த ஆஸ்ரமம். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக வழியைப் பின்பற்றி வாழ்ந்து வரும் ஆனந்தகுமார் அவர்கள் துவங்கிய இந்த ஆஸ்ரமம் வாழ்விற்கும் இயற்கைக்குமான நெருக்கத்தை மனிதன் உணரவேண்டுமென்பதற்காகவே உருவாக்கப்பட்டது. இயற்கை வழியில் ஆன்மீகம் எனும் ஜென் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் ஆனந்தகுமார். மூன்று வருடங்களுக்கு முன்னால் நண்பர் லகுபரனோடு முதல் முறையாக அந்த ஆஸ்ரமத்திற்குச் சென்றிருந்தேன்.

நமது அன்றாட வாழ்க்கை எத்தனை சுமையானதென்பது அவற்றிலிருந்து நாம் விலகி நிற்கும்போதுதான் நமக்குப் பிடிபடுகிறது.

எல்லாவற்றையும் துறந்து செல்வதற்காகவோ, தனது அன்றாடங்களிலேயே மூழ்கிப் போவதற்காகவோ மனிதன் படைக்கப்படவில்லை. வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள இயற்கையை புரிந்து கொள்வது அவசியம். இயற்கை தன்னை உற்றுக் கேட்கச் சொல்லி குரலெழுப்பியபடியே இருக்கிறது, நாம் அதற்கு செவிசாய்க்க மறுக்கிறோம்.

சத் தர்ஷன் எனக்கும் நண்பருக்கும் இயற்கையின் குரலுக்கு செவி சாய்க்கப் பழக்கியது. சலசலத்து ஓடும் சிறுவானி ஆறு, அச்சுறுத்தாத சிறு குன்று, ஆஸ்ரமத்திற்கு அருகிலேயே நானூறு வருடங்கள் பழமையான பகவதி அம்மன் ஆலயம் என எங்கும் அமைதி சூழ்ந்திருந்ததால் பறவைகளையும், மரங்களின் சலசலப்பையும் உற்று கவனிக்க முடிந்தது. நண்பர்களுடனும் தனியாகவும் ஏராளமாகப் பயணிக்கும் வழக்கமுடையவன் நான், பெரு நகரங்களைத் தேடிச் செல்வதை விட இதுபோன்ற எளிய இடங்களை நோக்கிச் செல்லும் போதுதான் நமக்கான மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வதாகத் தோன்றும். தேவைக்கு அதிகமாக எதையும் சேர்த்து சுமக்காமல் பயணத்தில் வாழ்வைக் கடத்தும் ஏராளமான நண்பர்களைக் கடந்து வந்திருக்கிறேன். இங்கும் அப்படியானவர்களைச் சந்திக்க முடிந்தது. கூடி வாழ்வதுதான் மனித நாகரீகத்தில் நிகழ்ந்த முக்கியப் பரிணாமம், இப்படிக் கூடி வாழ்வதன் அடிப்படை எளிமையிலிருந்துதான் துவங்கும். எளிமையைத் தொலைக்கும் போது நாம் மனிதர்களின் அருகாமையையும் தொலைத்துவிடுகிறோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து சத் தர்ஷன் வருபவர்கள் மாதக் கணக்கில் தங்குவதுண்டு. ஆஸ்ரமத்தில் தங்குகிறவர்களிடத்தில் கட்டணமாக பெரிதாக வசூலிக்கப்படுவதில்லை. அடிப்படை செலவுகளுக்காக முன்னூறு ரூபாய்க்கும் குறைவாகவே பெற்றுக் கொள்கிறார்கள். ‘வெவ்வேறு மனிதர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக சத் தர்ஷன் திகழவேண்டும்’ என்பது ஆனந்தகுமாரின் விருப்பம்.

இந்த ஆஸ்ரமம் நிலைகொள் வேளாண்மை கோட்பாடுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைகொள் வேளாண்மை என்பது அமைப்பியல் சிந்தனை,

ஒப்புரவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகள் ஆகும்.

இந்த நெறிமுறைகள், வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்தபடுகிறது.

இவர்கள் | சத் தர்ஷன்
இவர்கள் | சத் தர்ஷன்

கொடைக்கானலில் போதிஜென்டோ என்ற ஜென் தத்துவ அமைப்பை நிறுவிய அருட்தந்தை திரு AMA சாமி மற்றும் அருட்தந்தை சிரில் அவர்களின் பணிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட திரு. ஆனந்தகுமார் அவர்களின் வழிகளைப் பின்பற்றியே 2006 -ம் வருடம் சத்-தர்ஷன் ஆஸ்ரமத்தை உருவாக்கியுள்ளார். ஜென் கூறும் தத்துவமான, ``இந்தத் தருணத்தில் வாழ்" என்பது கேட்பதற்கு எளிமையானது போல் தெரிந்தாலும் மனிதனால் கடைபிடிக்க முடியாத அகவொழுக்கம் தருணத்தில் வாழ்தல். அதனை செயல்படுத்தும் ஒர் முயற்சியாகவே சத்-தர்ஷன் அமைப்பின் செயல்பாடுகளை அமைத்துள்ளார் ஆனந்தகுமார். இயற்கை சூழலியலை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் இவ்விடத்தின் அமைப்பு உள்ளது.

துவக்கத்தில் யோக மற்றும் தியான பயிற்சிக்கான களமாக இருந்திருந்தாலும் சமீப காலங்களில் இவ்விடம் கலை இலக்கியம் மற்றும் உளவியல் துறைகளைச் சார்ந்த ஆர்வலர்களின் புகலிடமாக மாறியுள்ளதெனலாம். கலைஞர்களுக்கு தனிமை அவசியம்.

இயற்கையின் மடியில் விளையும் ஏகாந்தத்தில் மனதின் கசடுகள் நீங்குகின்றன. கசடுகளற்ற மனம் படைப்பு நிகழ்த்த வேட்கை கொள்கிறது.

அவ்வாற்றல் இசையாக, ஓவியமாக, சிற்பமாக, ஆன்மீக ஞானமாக வடிவம் பெறுகிறது. சத்-தர்ஷனில் இது சாத்தியமாகிறது.

விலங்குகளும் பறவைகளும் பூச்சியினங்களும் தழைத்து வாழும் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளதால் அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவற்றின் ஆனந்த தாண்டவத்தை ஒருவரால் கண்டும் கேட்டும் உணர முடியும். சத் தர்ஷனில் சூரியன் மறையும் நேரம் அற்புதமானது. மூங்கில் வனத்தின் நடுவே மின் மினிப் பூச்சிகள் பெருங்கூட்டமாய் ஒளி வீசுவதை நாம் அவற்றிற்கு நடுவிலிருந்து பார்க்கலாம். அந்த சில நிமிடங்கள் மின்மினிப் பூச்சிகளின் ஒளி நம்மை நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவில் இருப்பவரைப்போல் உணரவைக்கும். சூழலியல் வளமாக இருக்குமிடங்களில் மட்டுமே மின்மினிப் பூச்சிகளை அதிகம் காணமுடியும்.

`இந்த தருணத்தில் வாழ்தல்’ - சத் தர்ஷன் ஆனந்தகுமார் | இவர்கள் | பகுதி 15

எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், ஓவியர்கள் என பலரும் இங்கு வந்து தங்குகிறார்கள். இயற்கையின் மடியில் தங்கள் கலைக்கான ஆற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதிகாலையும், மாலை நேரமும் பத்து நிமிடங்கள் தியானவகுப்பு நடைபெறும், மாலை தியான வகுப்பிற்குப்பின் ஒரு உரையாடல். கலைக்கு சுதந்திரம் எவ்வளவு இன்றியமையாததோ அதேயளவு அகவொழுக்கமும் அவசியம் என்பதை கலைஞர்கள் சிலர் புரிந்து கொள்ள தவறிவிடுவதுண்டு. அதனாலேயே அவர்களது ஆற்றலும் குறுகிய காலத்தில் அழிந்து விடுவதுண்டு. சத்-தர்ஷன் உறைவிடத்தில் சுதந்திரமட்டுமல்லாது இங்கு வருபவர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய யோக பயிற்சிகளும், துப்புரவு சேவைகளும், நேரம் தவறாத உணவு வேளைகளும், உடற்பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆன்மீக வகுப்புகள், மலையேற்றம், தியான வகுப்புகள், குறும்பட விழா, இலக்கிய விழா என ஏராளமான நிகழ்வுகள் சத் தர்ஷனில் நடத்தப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஸ்ரமம் அமைந்துள்ள அட்டப்பாடியில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். ஆனந்தகுமார் தனது நண்பர்களோடு இணைந்து இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தந்துகொண்டிருக்கிறார். அருகாமையிலிருக்கும் கிராமத்தில் ஒரு நூலகம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதில்லாமல் அந்த மக்களுக்கு அவ்வப்போது நல்ல திரைப்படங்களைப் போட்டுக் காட்டுவதுண்டு. ஆஸ்ரமத்தைப் போலவே இந்த மக்களின் மலர்ந்த முகமும் நம்மை ஆறுதல்படுத்துகின்றன.

சத் தர்ஷன் ஆனந்த குமார்
சத் தர்ஷன் ஆனந்த குமார்

இரண்டு விதமான பயணிகள் இருக்கிறார்கள், தங்கள் நெருக்கடியான வாழ்விலிருந்து சிறிய ஓய்வெடுத்துக் கொண்டு கொண்டாட்டமாக பயணிப்பவர்கள் ஒருவகையினர். பயணம் வாழ்வின் இன்னொரு அங்கமென்பதைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு பயணத்தையும் அர்த்தப்பூர்வமாக மாற்றிக்கொள்ள நினைப்பவர்கள் இன்னொருவகை. இரண்டாவது வகை பயணிகளுக்கு பெரும் நெருக்கடியாய் இருப்பது பொருளாதாரம். இன்றைக்கு உலகம் முழுக்க woofing மாதிரியான ஏராளமான அமைப்புகள் இந்த வகை பயணிகளுக்கு உதவிகரமாய் இருந்து வருகின்றன. சத் தர்ஷனும் அந்த வகை பயணிகளுக்கான ஒரு இடம் தான்.

எளிய வேளாண்மை, கூட்டு வாழ்க்கை, பயணங்களென பெருங்கூட்டத்தினர் உலகின் வெவ்வேறு எல்லைகளை நோக்கி பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்களைப் போன்ற பயணங்களும் பயணிகளும்தான் உலக வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாய் இருந்திருக்கிறார்கள். குர்ஜிஃப் அர்மீனியாவைச் சேர்ந்தவர், சிறுவயதில் தான் எதிர்கொண்ட அபூர்வமான சம்பவத்தால் மனம் உந்தப்பட்டு மெய்ஞானத்தைத் தேடி பயணிக்க முடிவெடுக்கிறார். பெரும் வாகன வசதிகள் இல்லாத பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் அவர் நிகழ்த்திய பயணங்கள் அசாதாரணமானவை. அந்தப் பயணங்கள்தான் whirling dervishes என்னும் கலை மரபு உருவாக காரணமாய் அமைந்தது. வசதியான குடும்பத்தில் பிறந்து, நல்ல வேலை வருமானம் என்று வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து விலகி, எளிமையாக கூட்டு வாழ்க்கை வாழும் ஆனந்தகுமார் மாதிரியானவர்கள் நமக்கு முக்கியமானதொரு படிப்பினையைத் தருகிறார்கள். ``எளிமையான வாழ்க்கைதான் இயற்கையோடும் உலகத்தோடும் நம்மை என்றென்றைக்குமாய் பிணைத்து வைத்திருக்கும்.”

(இவர்கள்... வருவார்கள்)