Published:Updated:

``மழைக்காலம் முடியுற வரைக்குமாவது எங்க வீடுகளை இடிக்காதீங்க"- கண்ணீரில் 47 குடும்பங்கள்

குடிசை வீடுகள்
News
குடிசை வீடுகள்

``வீடுகளை காலி பண்ண நாங்க தயாராதான் இருக்கோம். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்குற மாற்று இடத்துக்கு பாதையே இல்லை, கரண்ட் வசதி, தண்ணீர் வசதியும் கிடையாது. வயக்காட்டுக்கு நடுவுல நாங்க எப்படி வசிக்க முடியும்"

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குளக்கரையில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் குடிசை வீடுகளை இடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். ``இங்கு வசிக்கக்கூடிய அனைத்து குடும்பங்களுமே, விவசாயக் கூலி வேலைக்கு சென்றுதான் ஜீவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு இடம் இல்லை. தனிநபர்களுக்குச் சொந்தமான விவசாய வயல்களுக்கு இடையே எங்களுக்கு வழக்கப்பட்ட மாற்று இடத்துக்குச் செல்ல பாதையோ, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளோ இல்லை. மழைகாலம் முடியும் வரையிலாவது எங்களது குடிசை வீடுகளை விட்டு வையுங்கள்" எனத் தமிழக அரசுக்கு இப்பகுதி மக்களுடன் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார்கள். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். வருகிற 25-ம் தேதி திங்கள்கிழமை இவர்களது வீடுகள் இடிக்கப்பட உள்ளதால் மிகுந்த பதைபதைப்புடனும் பதற்றத்துடன் இருக்கிறார்கள்.

வீடுகள்
வீடுகள்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட, நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட சக்கரை குளத்தின் கரையில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக, 47 விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகிறார்கள். சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்களில் விவசாய வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் தினக்கூலி வருமானத்தைக் கொண்டே, இக்குடும்பங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் 2017-ம் ஆண்டு, நன்னிலம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தசாமி , சென்னை உயர்நீதிமன்றத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வழக்கு தொடர்ந்தார், அந்த வழக்கின் தீர்ப்பில், குளக்கரை ஆக்கிரமிப்புகளை, அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடாக, வருவாய்த்துறையினர், பருத்தி திடல் என்ற பகுதியில் இந்த 47 குடும்பங்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்து, பட்டா வழங்கினர். ஆனால் அங்கு வீடு கட்டி குடியேற முடியாத நிலை இருப்பதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். காரணம் பருத்தித் திடலுக்குச் செல்வதற்கு, சரியான சாலை வசதி கிடையாது. தனிநபர்களுக்கு சொந்தமான வயல் வரப்புகளின் வழியாகத்தான், அங்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனவே குளக்கரையில் வசித்து வரும் இந்த 47 குடும்பங்களை சேர்ந்தவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாற்று இடமான பருத்தி திடலுக்கு செல்ல சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி , செய்து தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். புதிதாக வழங்கப்பட்டுள்ள பருத்தி திடல் இடத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பின்னர்தான், தற்போது தாங்கள் வசித்து வரும் குடிசை வீடுகளை இடிக்க வேண்டும் என வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனு கொடுத்தனர்.

வயல்க்ளுக்கு நடுவே வழங்கப்பட்ட மாற்று இடம்
வயல்க்ளுக்கு நடுவே வழங்கப்பட்ட மாற்று இடம்

தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்தனர். நன்னிலம் வட்டாட்சியர் பத்மினியிடம் விளக்கம் கேட்டபோது ‘’இது நீதிமன்ற உத்தரவு. இதுல நாங்களாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. வீடுகளை இடிக்குறதுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு’’எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு வசித்து வருபவர்களில் ஒருவரான கல்யாணசுந்தரி ‘’இந்த மழைகாலத்துல, நாங்க எங்க புள்ளைகுட்டிகளோடு எங்க போக முடியும். 45 வருசமா இங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம். பேரூராட்சி நிர்வாகம், எங்களோட வீடுகளுக்கு வீட்டு வரி வசூல் பண்ணிக்கிட்டு வர்றாங்க. மின் இணைப்பெல்லாம் கொடுத்திருக்காங்க. அரசாங்கம் எங்களுக்கு இந்த முகவரியிலதான் ரேசன் கார்டு கொடுத்திருக்கு. ஆனாலும் கூட நீதிமன்றம் உத்தரவிட்டதால, வீடுகளைக் காலி பண்ண நாங்க தயாராகத்தான் இருக்கோம்.

கல்யாணசுந்தரி
கல்யாணசுந்தரி

ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்குற மாற்று இடத்துக்கு பாதையே இல்லை, கரண்ட் வசதி, தண்ணீர் வசதியும் கிடையாது. வயக்காட்டுக்கு நடுவுல நாங்க எப்படி வசிக்க முடியும். இந்த வசதிகளை செஞ்சி கொடுத்தால்தான் அங்க போயி ஒரு குடிசையாவது போட்டு வசிக்க முடியும். நாங்க எல்லாரும் ஏழைங்க. கூலி வேலைக்கு போனால்தான், ஒவ்வொரு நாளும் கஞ்சி குடிக்க முடியும். இன்னும் இரண்டு நாள்ல எங்க வீடுகளை இடிக்கப் போறாங்க, காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்த்துட்டு, முன்னேற்பாடுகளை வேகமாக செஞ்சிக்கிட்டே இருக்காங்க. எங்களுக்கு பயமா இருக்கு. மழைகாலம் முடியுற வரைக்குமாவது எங்களை இங்க அனுமதிக்கணும். தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகி, முறைப்படி கால அவகாசம் வாங்கித் தரணும். முதலமைச்சர் ஸ்டாலின் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு உடனடியாக, ஏதாவது உதவி செய்யணும். அவரைதான் நாங்க மலைப்போல நம்பிக்கிட்டு இருக்கோம்’’என வேதனையுடன் தெரிவித்தார்