Published:Updated:

சர்வதேச பழங்குடிகள் தினம்: தேவை `அடிப்படை தேவைகள்’

பழங்குடிகள்

தமிழக அரசின் ஏகலைவா பள்ளி என்பது மலைகிராமங்களில் மட்டும் தான் உள்ளன. அதுவும் 7 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. மலைகிராமங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் போதாமை, முறையற்ற கட்டுமானம் போன்ற பிரச்னைகள் உள்ளன.

சர்வதேச பழங்குடிகள் தினம்: தேவை `அடிப்படை தேவைகள்’

தமிழக அரசின் ஏகலைவா பள்ளி என்பது மலைகிராமங்களில் மட்டும் தான் உள்ளன. அதுவும் 7 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. மலைகிராமங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் போதாமை, முறையற்ற கட்டுமானம் போன்ற பிரச்னைகள் உள்ளன.

Published:Updated:
பழங்குடிகள்

பழங்குடியினர் பெரும்பாலும் காடுகளிலும் மலைகளிலும் வசித்தவர்கள் தான் என்றாலும், தற்போது சமவெளிப்பகுதியிலும் வாழ்கிறார்கள். மொத்தம் முப்பத்து ஆறு பிரிவு பழங்குடியினர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுரண்டப்படுபவர்களாக இருக்கின்றனர். இதற்கான அரசியல் சமூக காரணம் ஏராளம். யாரும் கண்டுகொள்ளாத இவர்களின் நிலை பலகட்ட விழிப்புணர்வுகளுக்கும், சில திரைப்படங்களுக்குப் பின்னும் பலரின் கவனத்துக்கும் அரசின் கவனத்துக்கும் வந்தது. அதன் பின்னர் பல இடங்களில் பழங்குடியின சமூகத்தினருக்கு வீட்டுமனைபட்டா தமிழக அரசால் கொடுக்கப்பட்டது.

பழங்குடி கிராமம் (file pic)
பழங்குடி கிராமம் (file pic)

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியான இன்று சர்வதேச பழங்குடியினர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநாவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக் குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 9 -ம் தேதி சர்வதேச பழங்குடியினர் நாளாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது. உலகமெங்கும் உள்ள பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் இந்த நாள் வருடாந்தோறும் கொண்டாடப்படுகிறது.

பழங்குடியினர் நாளை முன்னிட்டு அவர்களின் வாழ்கைநிலை, தேவைகள் குறித்து தெரிந்துகொள்ள பழங்குடியினர் நலனுக்காக வேலை செய்யும் இரு அமைப்பை சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் இருளர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்களிடம் பேசினோம். இந்த அமைப்பானது இருளர் மக்களின் நலனுக்காக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. பேராசிரியர் கல்வி மணி பேசுகையில், ``தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சுமார் 8 லட்சம் பழங்குடியினர் வாழ்கின்றனர். பழங்குடி சமூகத்தில் பெரிதாக ஓட்டுவங்கி இல்லாததால் இவர்களை அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பழங்குடி மக்கள் சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மீது ஏராளமான பொய்வழக்குகளும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சாதிச்சான்றிதழ் அதிகாரிகள் காலத்தொடு வழங்குவதில்லை. அரசு பல திட்டங்கள் அவர்களுக்காக கொண்டு வந்தாலும் பழங்குடியினரை சென்றடைவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. எஸ்.சி, எஸ்.டி வன்முறை தடுப்புச்சட்டம் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை. இருளர் மக்கள் மீது போலீஸின் தாக்குதல்கள் கொடூரமாகவே உள்ளன.

கல்விமணி
கல்விமணி

ஜெய்பீம் மாதிரியான படங்களுக்குப் பின்னால் அரசு பல நல உதவிகளை குறிப்பிட்ட பழங்குடியினர் மக்களுக்கு செய்தது. முன்பெல்லாம் சாதிச்சான்றிதழ் வாங்குவதற்கு மக்கள் நேரில் செல்ல வேண்டியிருக்கும் ஆனால் இப்போது அதிகாரிகளே மக்களை தேடி நேரில் வருகின்றனர். இது நல்ல முன்னேற்றமே. இது மட்டும் போதாது. அரசு, பழங்குடியினர் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளை அதிகமாக எழுப்ப வேண்டும்.பழங்குடி மக்கள் பொய்வழக்கு மூலம் வன்முறைக்குள்ளாக்கப்படுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட வன்முறைக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்” என்றார் பேராசியர் கல்விமணி.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சரவணன் அவர்களிடம் பேசினோம். அவர் பேசுகையில், ``தமிழகத்திலுள்ள பழங்குடியினர் சமூகத்திலேயே மிகவும் மோசமான நிலையில் இருளர் இன மக்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சமவெளியில் வாழக்கூடியவர்களாக உள்ளனர். தமிழக முழுவதும் எட்டு லட்சம் பழங்குடியினர் இருக்கும் சூழலில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் முப்பத்தாறு பிரிவு பழங்குடியின மக்களும் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டிற்கு போட்டியிட வேண்டியிருக்கு. இதனால் பழங்குடி மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின் தங்கி உள்ளனர்.

தமிழக அரசின் ஏகலைவா பள்ளி என்பது மலைகிராமங்களில் மட்டும் தான் உள்ளன. அதுவும் 7 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. மலைகிராமங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் போதாமை, முறையற்ற கட்டுமானம் போன்ற பிரச்னைகள் உள்ளன. இவையனைத்தும் களைய வேண்டும். சமவெளிகளில் வாழும் பழங்குடியினருக்கும் ஏகலைவா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ( ஏகலைவா பள்ளி என்றால் பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளி)

சரவணன்
சரவணன்

பழங்குடியினர் நலனுக்காக சிறப்பு உக்கூர் திட்டம் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்துக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மாநில அரசால் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது அல்லது வேறு திட்டத்துக்கு செலவு செய்யப்படுகிறது. சிறப்பு உக்கூர் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி பழங்குடி மக்கள் நலனுக்காகவே செலவிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் பழங்குடி நல வாரிய அட்டை வழங்க வேண்டும். இந்த அட்டையின் மூலம் பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், பெரியவர்களுக்கு ஏதாவது விபத்துகள் நேர்ந்தால் இழப்பீடும் கிடைக்கும். பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி தர ஒருவருக்கு 3 லட்சம் முதல் 4 லட்சத்து 90 ஆயிரம் வரை அரசு ஒதுக்கியுள்ளது. கேரளாவை போல இங்கும் இந்த தொகை பத்து லட்சமாக உயர்த்த வேண்டும்” என்றார் சரவணன்.

கல்வி, வேலை, மருத்துவம், இருப்பிடம் என்பது அடிப்படை தேவை. இவையனைத்தும் பழங்குடி மக்களை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்த நாளில் கோரிக்கையாக வைப்போம்!