Published:Updated:

“வீரப்பன் சாகறதுக்கு முன்னாலயே நீதி செத்துடுச்சு!”

வீரப்பன் செத்துட்டான். ஆனா அதுக்கு முன்னாலயே நீதி செத்துடுச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?

பிரீமியம் ஸ்டோரி
மேட்டூரை ஒட்டி, பாலமலைக்கும் செத்தமலைக்கும் நடுவில் இருக்கிறது சின்னப்பள்ளம். அடிவாரத்தில், ஒரு தேவாலயத்தை ஒட்டியிருக்கிறது அருள்தாஸின் வீடு. உடல் முழுமையாகத் தளர்ந்துபோயிருக்கிறது. ஊன்றுகோல் உதவியுடன் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறார். பக்கவாதம் பாதித்து ஒரு பக்கம் முடங்கியிருக்கிறது. வெளிச்சமும் குறைந்துவிட்டது. புன்னகைக்கிறார் அருள்தாஸ். ஜீவனில்லை.
“வீரப்பன் சாகறதுக்கு முன்னாலயே நீதி செத்துடுச்சு!”

“வாழ்ந்தென்ன, செத்தென்னன்னுதான் இருக்கு... ஆனா நீதி வேணுமே! தாயி, புள்ளைன்னு வேறுபாடு பார்க்காம நிர்வாணப்படுத்தி, கரண்டு ஷாக் கொடுத்து, உருளையால உடம்பை நசுக்கி... கிட்டத்தட்ட உசுரோடவே கொன்னுட்டாங்க. என்னை மட்டுமில்லை... மலையோரத்துல வாழ்ற பலநூறு பேரை... உடம்பெல்லாம் கூழாப்போச்சு...” - உணர்ச்சிவசப்படும்போது உடம்பு நடுங்குகிறது அருள்தாஸுக்கு.

ஒரு சாமானியனின் வாழ்க்கையில் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய கொடூர வன்முறைக்குச் சாட்சிதான் அருள்தாஸ். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட கர்நாடக அதிரடிப்படையின் கொடூர சித்ரவதைகளுக்கு உள்ளானவர். குற்றுயிரும் குலையுயிருமாக மரணத் தருவாயில் எப்.ஐ.ஆர் எழுதப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டவர். எட்டரையாண்டு நீதிப் போராட்டத்துக்குப் பிறகு ‘குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரமில்லை’ என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்.

அருள்தாஸ்
அருள்தாஸ்

“இதோ இந்த சர்ச் வாசல்ல ஏறும்போதுதான் முதன்முறையா என்னை போலீஸ் கூட்டிக்கிட்டுப் போச்சு. அந்த நாள்களை இப்போ நினைச்சாலும் நடுக்கமா இருக்கு. பெரிய குடும்பம் எங்களோடது. நான் பிறந்தது மைசூர்ல. அப்பா, அங்கே ஒரு பாதிரியார்கிட்ட மேஸ்திரியா இருந்தார். எனக்கு ஆறுவயசாகும்போது இந்த கிராமத்துக்கு வந்துட்டோம். நல்லாப் படிச்சேன். மைசூர் செயின்ட் பிலோமினாள் கல்லூரியில பி.ஏ முடிச்சேன். அப்பவே வெளிநாட்டு வேலைக்கான வாய்ப்புகள் வந்துச்சு. ‘அவ்வளவு தூரமெல்லாம் போகவேண்டாம்... உன் படிப்புக்கு இங்கேயே நல்ல வேலை கிடைக்கும். வெயிட் பண்ணு’ன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. தெரிஞ்சவர் மூலமா பர்கூர் பகுதியில இருக்கிற குவாரியில வேலை கிடைச்சுச்சு. அதுதான் எல்லாத் துயரங்களுக்கும் காரணம்” மௌனமாகிறார் அருள்தாஸ்.

அருள்தாஸுக்கு இப்போது வயது 68. அந்தச் சம்பவம் நிகழ்ந்தது 1993-ல். அப்போது பர்கூர் மலையில் பெஜிலிட்டிப் பகுதியில் இயங்கிய ஒரு குவாரியில் மேலாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வீரப்பனைப் பிடிக்க தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த நேரம். பாலாறு கடுக்காமடுவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்த காவல் வாகனத்தின்மீது வீரப்பன் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இரு மாநிலங்களிலும் அதிரடிப்படை கடும்கோபத்துடன் வீரப்பன் வேட்டையில் களமிறங்கியது.

அருள்தாஸ் - சிவகாமி
அருள்தாஸ் - சிவகாமி

“பாலாற்றுத் தாக்குதல் நடந்தபிறகு, குவாரியை மூடிட்டு எல்லோரும் ஊருக்குப் போயிருங்கன்னு சொல்லிட்டாங்க. நான் சின்னப்பள்ளம் வந்துட்டேன். வீட்டுல ஒரு வேலையும் இல்லை. எங்க திருமணம் காதல் திருமணம். என் மனைவியோட அப்பா கோயில் குருக்கள். நான் கிறிஸ்தவன். கடும் எதிர்ப்புக்கிடையிலதான் எங்க கல்யாணம் நடந்துச்சு. அதனால மனைவி தரப்புல இருந்தும் உதவிகள் கிடைக்கலை.

ஒருநாள் தமிழ்நாட்டு அதிரடிப்படையில இருந்த அசோக்குமார்ங்கிற இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து என்னை விசாரிக்கணும்னு கூட்டிக்கிட்டுப் போனார். ஜீப்புல போகும்போது ‘வீரப்பனுக்கு எவ்வளவு வெடிமருந்துகள் குடுத்தே’ன்னு கேட்டார். ‘அப்படி எதுவும் நான் குடுக்கலே’ன்னு சொன்னேன். முகாமுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் நான் சொன்னதை எழுதிக் கையெழுத்து வாங்கிட்டு, ரெண்டு நாள் வச்சிருந்துட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருநாள் ராத்திரி கர்நாடக அதிரடிப்படையில இருந்து வந்து என்னை விசாரிக்கணும்னு கூப்பிட்டாங்க. போனேன். என்கூட வேலை பார்த்த பொம்மனும் ஜீப்புல இருந்தான். ரெண்டு பேரையும் அங்கேயிங்கேன்னு அலைக்கழிச்சு மாதேஸ்வரன் மலை ஒர்க்‌ஷாப்புக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஒர்க்‌ஷாப்ன்னா, சித்ரவதை செஞ்சு மனித உடல் பாகங்களை அக்கு அக்கா கழட்டுற இடம். ஒரு சின்ன அறை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள்னு நாற்பது பேர் இருந்தாங்க. ஜட்டியோட என்னை உக்கார வச்சாங்க. கொஞ்ச நேரத்துல சித்ரவதை தொடங்கிருச்சு.

ஆணோ, பெண்ணோ யாரா இருந்தாலும் உள்ளே நிர்வாணமாத்தான் கூட்டிக்கிட்டுப் போவாங்க. ‘வீரப்பனுக்கு எவ்வளவு வெடிமருந்து குடுத்தே’ன்னு கேட்பாங்க. ‘நான் எதுவும் கொடுக்கலய்யா’ன்னு சொன்னேன். உடனே கரண்ட் ஷாக் கொடுக்கத் தொடங்கிட்டாங்க. அதுக்குன்னே ஒரு டைனமோ கருவி இருக்கு. தொப்புள், மார்பு, பிறப்புறுப்புல கிளிப்பை மாட்டி, அந்தக் கருவியைச் சுத்துவாங்க. ஷாக்ல உயிர் போயிட்டு திரும்ப வரும். அடுத்து, காலை நீட்டி உக்கார வச்சு, கால் கட்டை விரல் ரெண்டையும் பிணத்துக்குக் கட்டுறமாதிரி சேர்த்துக் கட்டிருவாங்க. இரண்டு முட்டியிலயும் ரெண்டு பேர் ஏறி நிப்பாங்க. ஒருத்தன் தலைமுடியைத் தூக்கிப் பிடிச்சுக்குவான். இன்னொருத்தன் பச்சை மூங்கில் கழியால பாதத்துல அடிப்பான். அப்படியே செத்துடலாம் போல இருக்கும்.

அப்புறம் காலைக் கட்டி தலைகீழா மேலே தொங்கவிட்டு, அப்படியே கீழே மோதவிடுவாங்க. தலைகீழா தொங்கும்போது கரண்ட் கொடுப்பாங்க. வாயிலயும் மூக்குலயும் ரத்தம் கொட்டும். விசாரணை அறைக்குள்ள போறதுக்கு முன்னாடி கழிப்பறைக்குப் போயிட்டு வரணும். இல்லேன்னா இந்தச் சித்ரவதையப்பவே போயிடும். அப்படி ஒருத்தன் மலம் கழிச்சுட்டான். அதையே அள்ளிச் சாப்பிட வச்சாங்க. கட்டையை உடம்புமேல வச்சு உருட்டுவாங்க. ஆணிகள் அடிச்சிருக்கிற ரப்பர் கட்டையால முதுகுல அடிப்பாங்க. துடிக்கும்போதே மிளகாய்ப்பொடியை அள்ளித் தூவுவாங்க.

கர்நாடக அதிரடிப்படை அதிகாரிகள் நாங்க அவஸ்தைப்படுறதை சிகரெட் குடிச்சுக்கிட்டே ரசிச்சாங்க. சிலபேர் அடி, உதை தாங்காம முகாமிலேயே செத்தாங்க. சில பேரை வாரக்கணக்குல விசாரிச்சுட்டு, வீரப்பனோட சீருடையப் போட்டு காட்டுக்குள்ள கொண்டுபோய் சுட்டுக்கொன்னாங்க. தண்ணி, சாப்பாடு எதுவும் கிடைக்காது. கண் முன்னாடி பெண்களைப் பாலியல் வன்முறை செய்வாங்க.

18 நாள் கர்நாடக அதிரடிப்படையோட சட்டவிரோதக் காவல்ல இருந்தேன். கசக்கிப் பிழிஞ்சு சக்கையா சிறையில தூக்கிப் போட்டாங்க. அந்த 18 நாளும் நான் எங்கேயிருந்தேன்னுகூட என் மனைவிக்குத் தெரியாது...” கண் கலங்குகிறார் அருள்தாஸ்.

கிரிக்கெட் விளையாடச் சென்ற இடத்தில் அருள்தாஸ் சிவகாமியைப் பார்த்துக் காதல் வயப்பட்டார். திருமணமாகி இந்த நாற்பது ஆண்டுகளில் அவர் படாத கஷ்டமில்லை. எல்லாத் துயரங்களையும் கண்ணீரால் உள்வாங்கிக் கொள்கிறார். மூன்று மகன்கள். எல்லோருமே மெல்லிய பதற்றத்தில்தான் எந்நாளும் இருக்கிறார்கள்.

“வீரப்பன் வழக்குல புடிச்சுக்கிட்டுப் போனா, அவங்க திரும்பி வர்றது உறுதியில்லைன்னு சொல்வாங்க. நாளாக நாளாக எனக்கு நம்பிக்கை போயிருச்சு. எங்கேயிருக்கார்னு தெரியலே. தினமும் நியூஸ் பேப்பர் வாங்கிப் பாத்துக்கிட்டே இருந்தேன். சிறைக்குப் போனபிறகுதான் எனக்குக் கடிதம் போட்டார். அதுவும், ‘நான் விடுதலையாகி வீட்டுக்கு வர்றவரைக்கும் என்னைப் பார்க்க யாரும் சிறைக்கு வரக்கூடாது’ன்னு வேற எழுதியிருந்தார். யாருக்குமே எங்க மாதிரி துயர வாழ்க்கை அமையக்கூடாது. இன்னைக்கு வரைக்கும் பிள்ளைகளெல்லாம் அஞ்சி அஞ்சியே வாழவேண்டியிருக்கு...” வருந்துகிறார் சிவகாமி.

சிறிய மௌனத்துக்குப் பிறகு அருள்தாஸ் பேசுகிறார்.

“உள்ளே இருக்கும்போது, என்னை மாதிரியே அங்கே இருக்கற மத்தவங்களுக்குக் கடிதம் எழுதித் தருவேன். அவங்க கதைகளையெல்லாம் கேக்கும்போது இன்னும் கொதிப்பாவும் வேதனையாவும் இருக்கும். எல்லாத்தையும் சேர்த்து, மதுரையில இருக்கிற மக்கள் கண்காணிப்பகம் அமைப்புக்குக் கடிதம் எழுதிப் போட்டேன். அவங்க உடனடியா வழக்கறிஞர்களைச் சிறைக்கு அனுப்பிப் பேசினாங்க. அவங்க களத்துக்கு வந்தபிறகுதான் அதிரடிப்படை நடத்தின கொடுமையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துச்சு...” என்கிறார் அருள்தாஸ்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அருள்தாஸுக்கு நிபந்தனை பிணை கிடைத்தது. ஆனால் அப்போதும் வீட்டுக்கு வரமுடியவில்லை. ‘வழக்கு முடியும்வரை மாதேஸ்வரன் மலை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடவேண்டும்’ என்பது நிபந்தனை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் மாதேஸ்வரன் மலையிலேயே அடைந்து கிடந்திருக்கிறார் அருள்தாஸ். இறுதியாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

“எனக்குத் தொடர்பே இல்லாத ஒரு வழக்குல என்னைச் சிக்கவச்சு, ரெண்டு நாள் மேட்டூர் டார்ச்சர் கேம்ப், 18 நாள் மாதேஸ்வரன் மலை ஒர்க்‌ஷாப், மூன்றரை வருஷம் சிறை, அஞ்சு வருஷம் நிபந்தனைப் பிணைன்னு என் வாழ்க்கையையே அழிச்சுட்டாங்க. நான் இதையெல்லாம் வெளியில் சொன்னபிறகுதான் சதாசிவா கமிஷன் அமைச்சாங்க. பல பேருக்கு இழப்பீடு கொடுத்த கமிஷன், எனக்கு எந்த இழப்பீடும் தரலை. எனக்கு நேர்ந்த கொடுமைகள், அதுக்குக் காரணமானவங்கன்னு எல்லாத்தையும் ‘சிதைக்கப்பட்ட மானுடம்’ங்கிற பேர்ல புத்தகமா எழுதி வெளியிட்டேன். அதையும் அதிகார வர்க்கம் கண்டுக்கலே.

இந்த மாதிரி கொடுமையையெல்லாம் வரலாறுலதான் படிச்சிருப்பீங்க. நாங்கெல்லாம் அனுபவிச்சோம். என்னை மாதிரி பல நூறு பேர் வாழ்க்கையை இழந்துட்டு வலியோட தவிச்சுக்கிட்டிருக்காங்க. வீரப்பன் கொடுமையான குற்றவாளி. அவனை தண்டிக்கட்டும். அவனுக்கு உதவி செய்றவங்களைக் கண்டுபிடிச்சு தண்டனை தரட்டும். நாங்கெல்லாம் என்ன பாவம் செஞ்சோம்?

என்னோட கேள்விகள் இதுதான்... வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு, அதிரடிப்படையில இருந்த எல்லாருக்கும் பரிசுகள், பதவி உயர்வெல்லாம் கொடுத்தாங்க. அந்த வேட்டையில பாதிக்கப்பட்ட அப்பாவிகள் பத்தி ஏன் பொதுவெளியில பேசவேயில்லை? வீரப்பன் செத்துட்டான். ஆனா அதுக்கு முன்னாலயே நீதி செத்துடுச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?

மலையடிவாரத்துல பிறந்ததும், ஒரு குவாரியில வேலை செஞ்சதும் தாண்டி நாங்க பண்ணின தப்பு என்ன? என்னை மாதிரி இந்தப் பகுதியில நடைபிணமா வாழ்ந்துக்கிட்டிருக்கவங்களுக்கு அரசும் காவல்துறையும் என்ன பதில் சொல்லப்போகுது? நான் எந்த வன்முறையில ஈடுபட்டேன்... என்னால யாருக்கு பாதிப்பு..? அணு அணுவா சித்ரவதை செஞ்சு அக்கா, தங்கச்சின்னு பாக்காம கொடுமைப்படுத்தி ரசிச்ச காவல்துறை அதிகாரிகளை ஒரு வார்த்தைகூட விசாரிக்காம பரிசு, பாராட்டெல்லாம் கொடுக்கிறது என்ன நியாயம்? மனைவி, பிள்ளைகள்னு குருவிக்கூடு மாதிரி குடும்பம். எல்லாத்தையும் நிலைகுலைய வச்சுட்டீங்க. எனக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?” ஆவேசத்தில் கண்கள் சிவக்கின்றன அருள்தாஸுக்கு.

அது அதிகார வர்க்கத்தின் இறுகிப்போன மனச்சாட்சிகள் முன் வீசப்பட்ட கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு