Published:Updated:

கிறிஸ்துமஸ் விழா... சர்ச்சை பிரசாரம்... வசூல் வேட்டை... பாலியல் வழக்கிலும் சிக்கிய அருமனை ஸ்டீபன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடப்பாடி பழனிசாமியுடன் அருமனை ஸ்டீபன்
எடப்பாடி பழனிசாமியுடன் அருமனை ஸ்டீபன்

கடைசியாகக் கொடுத்த புகாரில்தான் ஸ்டீபன் உள்ளிட்டவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றியும் சொல்லியிருந்தார்.

பிரீமியம் ஸ்டோரி

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரையெல்லாம் அழைத்து வந்து, பிரமாண்டமான கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி, பிரபல நபராக மாறியவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருமனை ஸ்டீபன். இவர் தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகர்கோவிலில் ஒரு வீட்டில், தன்னை இரண்டு மாதங்களாக அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, எட்டுப் பேர் மீது 36 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 8-ம் தேதி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ-1 ஆக சேர்க்கப்பட்ட ஜெபர்சன் வினிஸ் லால், வழக்கு பதிவு செய்யும் முன்னரே கடந்த ஏப்ரல் 28-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இரண்டாவது குற்றவாளி, அருமனை ஸ்டீபன். மூன்றாவது குற்றவாளி, திருவட்டாறு தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜான் பிரைட். மேலும் கென்சிலின் ஜோசப், கலிஸ்டர் ஜெபராஜ் மற்றும் மூன்று பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

கிறிஸ்துமஸ் விழா... சர்ச்சை பிரசாரம்... வசூல் வேட்டை... பாலியல் வழக்கிலும் சிக்கிய அருமனை ஸ்டீபன்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், புகழ்பெற்ற அருமனை கிறிஸ்துமஸ் விழாவை ஆண்டுதோறும் நடத்திவருபவர்தான் இந்த ஸ்டீபன். கடந்த 2010-ல் இவர் நடத்திய விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், 2020-ல் நடத்திய விழாவில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். அதேசமயம், ஸ்டீபன் மீது 2010-ம் ஆண்டிலிருந்தே அருமனை, குலசேகரம், தக்கலை ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி, மிரட்டல், நில அபகரிப்பு எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர் என்று காட்டிக்கொண்டு, அந்த வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தப்பி வந்திருக்கிறார் ஸ்டீபன். கடந்த மாதம், மத மோதலைத் தூண்டும்விதமாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய கூட்டத்தை ஏற்பாடு செய்ததும் இவரே. அந்த வழக்கில் ஏற்கெனவே போலீஸ் இவரைக் கைதுசெய்திருந்த நிலையில்தான், தற்போது பாலியல் வழக்கிலும் சிக்கியிருக்கிறார் ஸ்டீபன்.

ஸ்டீபன் உள்ளிட்டோர் தனக்குச் செய்த பாலியல் கொடுமைகளை நம்மிடம் கண்ணீருடன் விவரித்தார் புகார் கொடுத்த பெண்... ‘‘ஜெபர்சன் வினிஸ் லால் நடத்துன திருமண தகவல் நிலையத்துல வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அவர் எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால, வேலையை விட்டுட்டேன். போன வருஷம் ஆகஸ்ட் மாசம் திரும்பவும் அவர் வேலைக்குக் கூப்பிட்டப்ப மறுத்துட்டேன். ஆனா, ரொம்ப வற்புறுத்துனதால வேற வழியில்லாம வேலைக்குப் போனேன். கார்ல ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போகும்போது, இடையில ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு சொல்லி திருவனந்தபுரத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டார். வழியில ஜூஸ் கொடுத்தார். அதைக் குடிச்ச பிறகு நான் மயங்கிட்டேன். கண் முழிச்சப்ப, ஒரு அறையில அலங்கோலமா கிடந்தேன். ‘எல்லாத்தையும் வீடியோ எடுத்துவெச்சிருக்கேன். பிரச்னை செஞ்சா நெட்ல போட்டுடுவேன்’னு ஜெபர்சன் மிரட்டினார்.

போன செப்டம்பர் மாசம் அதைச் சொல்லி மிரட்டியே, நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனியில ஒரு வீட்டுல என்னை அடைச்சுவெச்சு ஜெபர்சன், அவரோட நண்பர் ஸ்டீபன் உள்ளிட்டவங்க பாலியல் கொடுமை செஞ்சாங்க. இப்படி ரெண்டு மாசம் என்னை அடைச்சு வெச்சுருந்தாங்க. ஒருகட்டத்துல அங்கிருந்து தப்பிச்சு வந்த பிறகும் என் வீட்டுக்கு வந்த ஜெபர்சன், என்னை மிரட்டி பிளேடால கீறினார். இதுக்கு மேலயும் பொறுத்துக்க முடியாதுன்னுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன். இதைக் கேள்விப்பட்டு, ஜெபர்சன் தூக்குப்போட்டு தற்கொலை செஞ்சுக்கிட்டார். அதுக்கு அப்புறமும் ஸ்டீபன் உள்ளிட்டவங்க எனக்கு மிரட்டல் விடுத்தாங்க. அவங்கள்ல சிலர் என்னோட பாலியல் வீடியோவையும் பரப்பிட்டாங்க. என்னைப் பாலியல் வன்கொடுமை செஞ்சவங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்” என்றார் கண்ணீர்மல்க!

கிறிஸ்துமஸ் விழா... சர்ச்சை பிரசாரம்... வசூல் வேட்டை... பாலியல் வழக்கிலும் சிக்கிய அருமனை ஸ்டீபன்!

ஸ்டீபன் பற்றிக் கேட்டால், வரிசையாக சர்ச்சைச் சம்பவங்களை அடுக்குகிறார்கள் அருமனை ஏரியாவாசிகள்... ‘‘ஸ்டீபன், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கச் செயலாளராக இருக்கிறார். அருமனையில் 22 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டங்களில் பேசிய சிலர், இந்து கடவுள்கள் பற்றி கிண்டலாகப் பேசியதால் இந்து இயக்கத்தினருடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவுக்காகப் பணம் வசூலித்து, முறைகேடு செய்ததாகவும் அவர்மீது புகார் உள்ளது. வசூல் செய்த பணத்தைத் தன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு பயன்படுத்திக்கொண்டார். தவிர, நிறைய பணத்தை வட்டிக்கும் விட்டிருக்கிறார். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனக்கு நெருக்கம் என்று ஸ்டீபன் காட்டிக்கொண்டதாலேயே போலீஸார் அவர்மீது கைவைக்க பயந்தனர்” என்றார்கள்.

வழக்கை விசாரித்துவரும் போலீஸார் நம்மிடம், ‘‘முதலில் அந்தப் பெண் ஜெபர்சனிடம் ஒரு வீடியோ இருப்பதாகவும், அதை அழிக்க வேண்டும் என்றுதான் புகார் அளித்தார். அதில் நடவடிக்கை எடுப்பதற்குள் ஜெபர்சன் தற்கொலை செய்துகொண்டார். கடைசியாகக் கொடுத்த புகாரில்தான் ஸ்டீபன் உள்ளிட்டவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றியும் சொல்லியிருந்தார். அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’’ என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு