Published:Updated:

8 முறை டிமிக்கி.... 56 கேள்விகள்... பதில் சொல்வாரா பன்னீர்? - வேகமெடுக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

ஆறுமுகசாமி ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகசாமி ஆணையம்

வரும் மார்ச் 21-ம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

8 முறை டிமிக்கி.... 56 கேள்விகள்... பதில் சொல்வாரா பன்னீர்? - வேகமெடுக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

வரும் மார்ச் 21-ம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

Published:Updated:
ஆறுமுகசாமி ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகசாமி ஆணையம்

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அனல்பறந்த நேரம் அது... அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாக்குறுதி தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியது. “தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளிவரும். மர்மக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவர்” என்பதே அந்த வாக்குறுதி. இந்தச் சூழலில்தான், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையம் உயிர்பெற்றிருக்கிறது. விசாரணைக்கான இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியதால், மார்ச் 7-ம் தேதியிலிருந்து விசாரணையை ஆரம்பித்திருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.

8 முறை டிமிக்கி.... 56 கேள்விகள்... பதில் சொல்வாரா பன்னீர்? - வேகமெடுக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

2016, டிசம்பர் 5 அன்று ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி வெளியான உடனேயே, அவரின் மரணம் தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. ஜெயலலிதா வின் மரணத்துக்கு நீதி கேட்டு 2017, பிப்ரவரி மாதம் தர்மயுத்தத்தைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டார். அந்தக் காலகட்டத்தில், மாவட்ட வாரியாக பன்னீர் நடத்திய கூட்டங்களில் எல்லாம் ஜெயலலிதாவின் மரணமே பேசுபொருளாக இருந்தது. “அம்மாவின் மரணத்திலுள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை என் தர்மயுத்தம் தொடரும்” என்று மேடைக்கு மேடை பேசினார் பன்னீர். ஆனால், அணிகள் ஒன்றிணைந்து, தனக்கு துணை முதல்வர் பொறுப்பு கிடைத்தவுடன், அந்த மர்ம முடிச்சை அவிழ்க்க பன்னீர் எந்த முயற்சியும் செய்யவில்லை. மரணம் தொடர்பாக விசாரிக்க, ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்த கையோடு அமைதியாகி விட்டது அப்போதைய அ.தி.மு.க அரசு. நீதிகேட்டு மேடை மேடையாகக் கதறிய பன்னீர், ஆணையம் எட்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பதுதான் விசித்திரம்.

ஆணையத்தின் செயல்பாடுகளை அறிந்த மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். “வரும் மார்ச் 21-ம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் சொன்னவர் பன்னீர்தான் என்பதால், அவரிடம் கேட்பதற்காக 56 கேள்விகளைத் தயாரித்திருக்கிறது ஆணையம். ‘எதன் அடிப்படையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஏதாவது தெரியுமா, காவிரி விவகாரம் தொடர்பாக அப்போலோ மருத்துவ மனையில் இருந்தபடியே ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகச் சொல்லப்பட்டது... அப்போது அவர் உடல்நிலை எப்படி இருந்தது, ஜெயலலிதா சிகிச்சையிலிருந்த 75 நாள்களில் எத்தனை முறை அவரைச் சந்தித்தீர்கள், உங்களிடம் பேசுவதற்கு அவர் முயற்சி செய்தாரா?’ உள்ளிட்ட கேள்விகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவதிலிருந்து தப்பி வந்த பன்னீருக்கு இது கட்டாயம் சிக்கலை ஏற்படுத்தும். மேலும், பன்னீரிடம் ஆணையத்தின் வழக்கறிஞரும் சசிகலாவின் வழக்கறிஞரும் தனித்தனியாக குறுக்கு விசாரணை நடத்துவார்கள்.

8 முறை டிமிக்கி.... 56 கேள்விகள்... பதில் சொல்வாரா பன்னீர்? - வேகமெடுக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

சசிகலாவையும் அவரின் குடும்பத்தினரையும் 2011-லேயே கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் ஜெயலலிதா. பிறகு, சசிகலா மட்டும் ஜெயலலிதா வின் உதவியாளராக இணைத்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் ஜெயலலிதாவின் மறைவு வரை மீண்டும் சேர்க்கப் படவில்லை. இதில் இளவரசி, திவாகரன், தினகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகளும் அடக்கம். 2011-ம் ஆண்டிலிருந்து 2016 வரை ஜெயலலிதா வின் உடல்நிலையைக் கவனித்தது யார், இதில் சசிகலாவின் பங்களிப்பு என்ன?’ என்கிற கேள்வியை எழுப்பவுள்ளது ஆணையம். சசிகலாவுக்கு அடுத்தபடியாக வேதா இல்லத்தில் ஜெயலலிதாவுடன் அதிக காலம் வசித்தவர் இளவரசி. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது ஆணையம். கடைசியாக, சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப் படும். சசிகலாவின் ஆதரவாளரான மறைந்த வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை பெறும் ஒரு வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். இதுபோல மேலும் சில வீடியோக்களும் இருப்பதாக அப்போது வெற்றிவேல் தரப்பில் கூறப்பட்டது. இதுபற்றியும் ஆணையம் விசாரிக்கும்.

கடந்த மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டன. அப்போது, “நாங்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியும் ஜெயலலிதா கேட்கவில்லை. தினசரி 16 மணிநேரம் வேலை இருப்பதாகக் கூறி ஓய்வுக்கு அவர் மறுத்துவிட்டார்” என்று விளக்கம் அளித்திருக்கிறார் மருத்துவர் பாபு மனோகர். அடுத்ததாக, ஜெயலலிதாவுக்கு தோல் சம்பந்தமான சிகிச்சைகள் அளித்த மருத்துவர் பார்வதியும், மேலும் மூன்று மருத்துவர்களும் மார்ச் 15-ம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தால் இதுவரை 154 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின் விசாரணையை விரைவிலேயே முடித்து, அறிக்கை பெறுவதற்கு அரசுத் தரப்பில் தீவிரம் காட்டுகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மருத்துவர் நிகில் டான்டன் தலைமை யிலான எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆணையத்தின் விசாரணைக்கு உதவிவருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்தால், அது விரைவிலேயே வெளிப்படும்” என்றனர்.

இதற்கு மேலும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நீட்டிப்பு வழங்க தி.மு.க அரசு தயாராக இல்லை என்பதால், சூடுபறக்கத் தொடங்கியிருக்கிறது ஆணையத்தின் விசாரணை. இனியேனும் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுமா என்று பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism