Published:Updated:

நெல்லையில் முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட முயற்சி! - ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நுண்ணுயிர் உரம் தயாரிப்பு இயந்திரத்தில் சிக்கி கையை இழந்த நெல்லை மாநகராட்சி தற்காலிகப் பணியாளருக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் கொரோனா ஆய்வு குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லைக்கு வருகை தந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு, குறு தொழில் நிறுவனத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர்
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்கிறது. அதனால் நில மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கூடுதலாக மானியங்களை வழங்கி வருகிறோம்.

நெல்லை: `மாநகராட்சிப் பணியாளர் கை துண்டிப்பு!’ - கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ 8,000 கோடி இழப்பீடு பெற்றுத் தந்திருக்கிறோம்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டன. மூன்றாம் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் நான்காம் கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு விவசாயிகள் பயனடையும் வாய்ப்பு பெறுவார்கள்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக 500 அம்புலன்ஸ் வாங்கப்படும். அவசரக்கால மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.5,000 கூடுதல் ஊதியம் வழங்கப்படும். வரும் தேர்தலில் தி.மு.க ஆட்சி அமையும் என ஸ்டாலின் கூறுவது பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோய்ச் சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும். குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பின்னர் பிளாஸ்மா தானம் கொடுப்பதன் மூலம் பலருடைய உயிரைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

`முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு தினம் இன்று. அது தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என முதல்வரிடம் கேட்டதற்கு, `அவர் மூத்த அரசியல் தலைவர். நீண்ட காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்’ என்று நினைவுகூர்ந்தார்.

ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி

நெல்லை மாநகராட்சிப் பணியாளரான பாக்கியலட்சுமி என்பவர் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதில் இடது கை முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. அவருக்குத் தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. அவருக்கு 25 லட்சம் நிவாரணம் கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், பாக்கியலட்சுமிக்குக் கூடுதல் தொகையை நிவாரணமாக அறிவிக்கக் கோரி ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு