Published:Updated:

ஏதாவது வேலை போட்டுக்கொடுங்க ஐயா..! - தமிழகத்தைத் தலைநிமிரச் செய்த தங்கமகனின் துயரம்!

தடகள வீரர் வெங்கடாச்சலம்
பிரீமியம் ஸ்டோரி
தடகள வீரர் வெங்கடாச்சலம்

கண்ணை முழிச்சுப் பார்த்தப்போ, ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். ‘தங்கச்சி செத்துப்போயிட்டா’னு சொன்னாங்க. அவளைப் பார்க்கிறதுக்காக பெட்டுலருந்து இறங்கி ஓடப் பார்த்தேன், முடியலை

ஏதாவது வேலை போட்டுக்கொடுங்க ஐயா..! - தமிழகத்தைத் தலைநிமிரச் செய்த தங்கமகனின் துயரம்!

கண்ணை முழிச்சுப் பார்த்தப்போ, ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். ‘தங்கச்சி செத்துப்போயிட்டா’னு சொன்னாங்க. அவளைப் பார்க்கிறதுக்காக பெட்டுலருந்து இறங்கி ஓடப் பார்த்தேன், முடியலை

Published:Updated:
தடகள வீரர் வெங்கடாச்சலம்
பிரீமியம் ஸ்டோரி
தடகள வீரர் வெங்கடாச்சலம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் இருக்கிறது குருவிக்கூட்டைப் போன்ற அந்த சிறிய வீடு. பாசம் கொட்டிக்கிடக்கும் அந்த வீட்டுக்குள் வயதான தாய், தந்தையரோடு வசித்துவருகிறார் 35 வயதாகும் மாற்றுத்திறனாளி தடகள வீரர் வெங்கடாச்சலம்!

இரண்டு கால்களும் செயலிழந்துபோன நிலையிலும், தீவிரப் பயிற்சி, விடா முயற்சியால் தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு வெற்றி மகுடம் சூடியிருக்கிறார். வீட்டின் வரவேற்பறையில் அழகாக அலங்கரிக்கப்படவேண்டிய நூற்றுக்கணக்கான வெற்றிப் பதக்கங்களும், வெற்றிக் கோப்பைகளும் குவியலாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் காட்சி, வெங்கடாச்சலத்தின் வறுமையையும், ஓயாத அவரின் தொடர் போராட்டத்தையும் துயர்மிகு கதையாகச் சொல்கிறது.

ஒவ்வொரு வேளை உணவுக்கும் வெங்கடாச்சலத்தை நம்பியே காத்திருக்கிறது குடும்பம். ‘ஏதாவது வேலைப் போட்டுக்கொடுங்க ஐயா...’ என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்துக் கொடுத்து ஓய்ந்துபோனவர், அரசின் ஊக்கத்தொகை கிடைக்காததால் சர்வதேசப் போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாமல், வீட்டிலேயே வீல் சேரில் முடங்கிக்கிடக்கிறார். அவரைச் சந்தித்தோம்...

ஏதாவது வேலை போட்டுக்கொடுங்க ஐயா..! - தமிழகத்தைத் தலைநிமிரச் செய்த தங்கமகனின் துயரம்!

‘‘நான் பிறப்பிலேயே மாற்றுத்திறனாளி இல்லைங்க. பத்தாவது முடிச்சுட்டு எலெக்ட்ரீஷியன் வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன். 2009-ல, என் தங்கச்சி எம்.சி.ஏ படிச்சுக்கிட்டிருந்தா. ஒருநாள் அவளை காலேஜ்ல விடுறதுக்காக பைக்குல கூட்டிக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தேன். அப்போ, மாடு குறுக்கே வந்துடுச்சு. நடுரோட்டுல விழுந்த ரெண்டு பேரும் குத்துயிரும் குலையுயிருமா கிடந்தோம்.

கண்ணை முழிச்சுப் பார்த்தப்போ, ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். ‘தங்கச்சி செத்துப்போயிட்டா’னு சொன்னாங்க. அவளைப் பார்க்கிறதுக்காக பெட்டுலருந்து இறங்கி ஓடப் பார்த்தேன், முடியலை. எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புக்குக் கீழ உணர்வில்லாமப் போயிடுச்சி. டாக்டருங்க சரிசெய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. மூணு வருஷம் படுத்த படுக்கையா கிடந்தேன். இந்த அதிர்ச்சியிலருந்தே குடும்பம் மீளாத அந்த நேரத்துல, 2013-ம் வருஷம் என் அண்ணனைக் கொள்ளைக் கும்பல் கொடூரமா கொலை பண்ணிட்டாங்க.

குடியாத்தத்துல இருக்குற ஒரு நகைக்கடையில அண்ணன் வேலை பார்த்துக்கிட்டிருந்தாரு. ஒருநாள் நைட்டு கடையை வழக்கம்போலப் பூட்டிட்டு கலெக்‌ஷன் பணத்தோட வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தாரு. இதை கவனிச்ச கும்பல்தான் கத்தியால குத்திட்டாங்க. இப்படி அடுத்தடுத்த அடிகளால குடும்பமே நிலைகுலைஞ்சு போயிடுச்சு.

எனக்கு ஒரு பிசியோ தெரபிஸ்ட் அறிமுகமானாரு. அவர்தான் வீல் சேரில் இருந்துக்கிட்டே, கூடைப்பந்து, குண்டு எரியறது, ஈட்டி எரியுற விளையாட்டையெல்லாம் விளையாடக் கத்துக்கொடுத்தாரு. முதல்ல மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சின்னச் சின்ன விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்.

2016-ல ஹரியானாவுல நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில தமிழ்நாடு சார்பில் கலந்துக்கிட்டு ரெண்டு பதக்கம் ஜெயிச்சேன். பாரா அத்லெடிக் விளையாட்டுகள்ல முழுமையாக கவனம் செலுத்தினேன். நாட்டுக்காகவும், நம்ம மாநிலத்துக்காகவும் இன்னும் ஜெயிக்கணும்னு வெறி இருக்கு. ஆனா, உதவிதான் கிடைக்கலைங்க’’ என்கிறார் கண்ணீரோடு.

திறமையும், உத்வேகமும், போராட்டமுமாக வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த வீரருக்கு அரசு விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்!