‘பணம் வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை’ என்பார்கள். அப்படித்தான் சமீபத்தில் வங்கியில் என்.ஆர்.ஐ கணக்கு வைத்திருப்பவர்களைக் குறிவைத்து ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தைக் களவாடியிருக்கிறது ஒரு மர்ம கும்பல்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த பலர் இப்படி ஏமாந்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசியவர்கள், “கடந்த மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து எங்கள் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘உங்கள் பேங்க் அக்கவுன்ட் நம்பரையும் ஏ.டி.எம் கார்டு நம்பரையும் கொடுத்தால், உங்கள் கணக்குக்குக் கொஞ்சம் பணம் அனுப்புகிறோம். பணம் வந்து சேர்ந்த பிறகு, நாங்கள் சொல்லும் அக்கவுன்ட்டுக்கு அந்தப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள். இதற்காக உங்களுக்கு கமிஷன் உண்டு. கமிஷனை எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தால் போதுமானது’ என்று சொன்னார். ‘கமிஷன் கிடைக்கிறதே...’ என்ற ஆசையில் பலரும் இதற்குச் சம்மதித்து, கணக்கு விவரங்களைக் கொடுத்துள்ளனர்.
போனில் பேசிய நபர் சொன்னதுபோல வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. அக்கவுன்ட்டை செக் செய்த பிறகு, அந்த நபர் சொன்ன வங்கிக் கணக்குக்கு கமிஷன் போக மீதிப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்துள்ளனர். அதிராம் பட்டினத்தில் மொத்தம் 130 பேர் இதுபோலப் பணப்பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி வாடிக்கையாளர்கள்.

இந்தப் பரிவர்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களது வங்கியிலிருந்து, ‘உங்களுடைய கணக்கிலிருந்து பணம் டிரான்ஸ்ஃபர் ஆகியுள்ளது. ஆனால், வங்கிக்கு இன்னும் பணம் வரவில்லை. அந்தப் பணத்தை உடனடியாகச் செலுத்துங்கள்’ என்று நோட்டீஸ் வந்திருக்கிறது. உடனடியாக அவர்கள் வங்கிக்குச் சென்று விவரம் கேட்டபோது, ‘இது வங்கிக்கு வெளியே ஆன்லைனில் நடந்திருக்கும் பரிமாற்றம். இதில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்த பணத்தை நீங்கள்தான் வங்கிக்குச் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது தான், `ஏதோ மோசடியில் சிக்கியிருக்கிறோம்’ என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரச்னையைப் பெரிதாக்க விரும்பாத பலர், பணத்தை வங்கிக்குச் செலுத்திவிட்டனர். சிலர் மட்டும் இது தொடர்பாக, தஞ்சாவூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்” என்றனர்.
இந்தியன் வங்கி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “இது ஹைடெக் மோசடி. கமிஷன் ஆசையில் இவர்கள் ஏமாந்திருக்கிறார்கள். மாஸ்டர் கார்டின் விவரங்களைப் பெற்று, அதை ஹேக் செய்து இந்த மோசடி நடந்துள்ளது. அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் டிரான்ஸ்ஃபர் செய்த மொத்தப் பணமும் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்குக்குச் சென்று, அங்கிருந்து ஆன்லைன் மூலம் வெளிநாட்டிலுள்ள ஒரு வங்கிக் கணக்குக்குச் சென்றுள்ளது. மார்ச் 25-ம் தேதியிலிருந்து 30-ம் தேதிக்குள் 10 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

விசா, மாஸ்ட்ரோ போன்ற தனியார் நிறுவன ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, முதலில் மெசேஜ் வந்துவிடும். அதன்படி ‘விர்ச்சுவலாக’ வங்கிக்கணக்கில் பணமும் ஏறிவிடும். வாடிக்கையாளர்களும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பந்தப்பட்ட பணம் தாமதமாகத்தான் வங்கிக்கு வரும். இதுதான் வழக்கமான நடைமுறை. அதை வைத்துத்தான் இந்த மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாகச் சென்னையிலுள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தின் மூலம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரிடம் ‘வங்கிக்குத் தெரியாமல் இப்படியொரு மோசடி நடக்க முடியுமா?’ என்ற கேள்வியை முன்வைத்தோம். “இந்த மோசடியில் உண்மையில் ஏமாந்தது வங்கிதான். தனியார் கார்டு நிறுவனத்தின்மூலம் வங்கியின் மென்பொருளுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில்தான் அந்தப் பணம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த மோசடி விஷயத்தில், போலியாக வந்த தகவல் அடிப்படையில் வங்கியின் மென்பொருள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் தொகையைச் சேர்த்துவிட்டது. அதை வாடிக்கையாளர் வேறொரு கணக்குக்கு மாற்றிவிடுகிறார். வங்கியைப் பொறுத்தவரை கிடைத்தவரை லாபம் என்ற அடிப்படையில் வாடிக்கையாளர் களுக்கு நோட்டீஸ் விட்டு வசூலிக்கப் பார்க்கிறது. இந்தியன் வங்கி, தலைமை அலுவலகத்தின் மூலம் போலீஸில் புகார் அளித்திருப்பதை வைத்துப் பார்க்கும்போதே வங்கிதான் இதில் ஏமாந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரியும்’’ என்றார்.
தஞ்சாவூர் எஸ்.பி-யான தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் பேசினோம். “பாதிக்கப் பட்டவர்கள் கொடுத்துள்ள புகார்களின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்” என்றார்.