Published:Updated:

தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

ஓவியங்கள்: சுதிர்

தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

‘ஆன்லைனில் கல்வி மட்டும்தான் கற்க முடியுமா, களவாடவும் கற்றுக்கொள்ளலாம்’ என யூடியூப் வீடியோ பார்த்து, நாமக்கல்லில் ஏ.டி.எம் மெஷினைக் கொள்ளையடித்திருக்கிறது கும்பல் ஒன்று. இது தவிர, தொப்பி கொள்ளையர், `டவுசர் கொள்ளையர்’ என அண்மைக்காலத்தில் கிளம்பியிருக்கும் தினுசு தினுசான கொள்ளையர்களால் கதிகலங்கிக் கிடக்கிறது நாமக்கல் மாவட்டம்!

ஊருக்கு வெளியே தனித்திருக்கும் வீடுகளில், ‘சொந்தக்காரங்க வந்திருக்கிறோம்’ என்று கதவைத் தட்டி திறக்கவைத்து, வீட்டிலுள்ள பெண்களைத் தாக்கி நகைகளைப் பறித்துச்செல்வதுதான் டவுசர் கொள்ளையர்களின் பாணி. உடம்பில் டவுசர் மட்டுமே அணிந்துகொண்டு, துணியால் முகத்தை மூடியபடி கைகளில் கத்தி ஏந்திவாறு தொழிலுக்குக் கிளம்பிவிடுகிறது இந்தக் கும்பல்.

தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், நா.புதுப்பட்டியிலுள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர் வேலு என்பவரின் வீட்டில், இதே பாணியில் ஒன்பது பவுன் நகையைப் பறித்த டவுசர் கொள்ளையர் கும்பல், அருகிலுள்ள மகாலட்சுமி நகரிலும் வினோத் - நதியா தம்பதி கழுத்தில் கத்தியை வைத்து நான்கு பவுன் நகையைப் பறித்திருக்கிறது. ஆனாலும் திருப்தியடையாமல், ஆர்யமாலா என்பவரின் வீட்டுக்குச் சென்று மூன்று பவுன் நகையைப் பறித்துக்கொண்ட பிறகே, எஸ்கேப் ஆகியிருக்கிறது. இதே பாணியில், முசிறி பாரதி நகரில் ஒன்றரை பவுன் நகை, கலிங்கா நகரில் 11 பவுன் நகை என மொத்தம் ஒன்பது இடங்களில் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர் டவுசர் கொள்ளையர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களின்போது, சிசிடிவி கேமராக்களில், டவுசர் சகிதம் நடமாடும் கொள்ளையர்களின் உருவங்கள் பதிந்திருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதேபோல் டவுசர் மட்டும் அணிந்தபடி ஒரு கும்பல், திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் சரக பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தக் கும்பல்தான் மறுபடியும் தங்களது கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கிறதோ என்று அச்சத்தில் வெடவெடத்துக் கிடக்கும் கிராம மக்கள், யாரேனும் புதியவர்கள் ஊருக்குள் வந்தால், ஊர் எல்லையிலேயே அவர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள்.

தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

தொப்பிக் கொள்ளையர்

இது இப்படியிருக்க.... ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தலையில் தொப்பி அணிந்தபடி ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக, `பகீர்’ கிளப்புகிறார்கள். இது பற்றிப் பேசுகிற சமூக ஆர்வலர்கள், “ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடை மற்றும் கோயில்களின் பூட்டை உடைத்து, ஒரு கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்தது. இந்தக் கொள்ளைக் கும்பலில் உள்ள அனைவரும் ஒரே மாதிரியான தொப்பியை அணிந்தபடி, சம்பவங்களில் ஈடுபட்டனர். தனிப்படை அமைத்துத் தேடியதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், சண்முகம், விஜய் ஆகிய மூன்று பேரும்தான் ‘தொப்பி’ அணிந்து கொள்ளையடித்துவந்தனர் என்பது தெரியவந்தது.

அண்மையில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் காய்கறிக் கடையிலிருந்த 50 கிலோ எடையுள்ள தேங்காய் மூட்டையை ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.

இதேபோல், வரகூரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பவித்திரம் பகுதியில் நடத்திவரும் அடகுக்கடையில் சுவரைத் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், ஐந்து பவுன் நகை, 40,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இன்னமும் இவர்கள் பிடிபடவில்லை. கடந்த 20 நாள்களுக்கு முன்பு பெருமாள்கோயில்மேடு பகுதியில் இருந்த தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையத்தில் நுழைந்த நான்கு பேர் கும்பல், வெல்டிங் மெஷினால் ஏ.டி.எம் மெஷினை உடைத்து, அதிலிருந்த 4.9 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது. 15 நாள் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீஸார், சேலம் மாவட்டத்தில் 15 வருடங்களாக டீக்கடை நடத்திவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புரஜாபாத், முகமது இம்ரான் ஆகியோரைக் கைதுசெய்தனர். விசாரணையில், ‘டீக்கடையில் வருமானம் வராததால், ஏ.டி.எம் மெஷின் அமைப்பு பற்றி யூடியூப்பில் பார்த்து, அதன் பிறகு மெஷினை உடைத்துக் கொள்ளையடித்தோம்’ என்று சொல்லியிருக்கி றார்கள்” என்கின்றனர் அதிர்ச்சி விலகாமல்.

தொப்பி, டவுசர் கொள்ளையர்... கண்டுகொள்ளாத நாமக்கல் போலீஸ்!

இந்த விவகாரத்தில், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசும் ‘தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி’யின் நிறுவனத் தலைவர் நல்வினைச்செல்வன், “மாவட்ட காவல்துறை மெத்தனம் காட்டுவதுதான் இதுபோல தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கக் காரணமா இருக்கு. இனியாவது, நாமக்கல் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளணும்” என்றார்.

டவுசர் கொள்ளையர்கள் குறித்து, மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேலுவிடம் பேசினோம். “நா.புதுப்பட்டியில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் மாதிரியே, திருச்சி மாவட்டம், முசிறிப் பகுதிகளிலும் நடந்திருக்கு. ஆனால், அங்கே சிசிடிவி காட்சிகள் இல்லை. அதனால், இரண்டு சரக போலீஸாரும் இணைந்து கொள்ளையர்களைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறோம்” என்றார். நாமக்கல் சரக டி.எஸ்.பியும் இதையே சொல்கிறார்.

சாய்சரண் தேஜஸ்வி
சாய்சரண் தேஜஸ்வி

இந்தத் தொடர் கொள்ளைகள் குறித்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வியிடம் விளக்கி, அவரது கருத்தைக் கேட்டோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், “நான் பிறகு பேசுகிறேன்” என்றபடி போனை வைத்துவிட்டார். அதன் பிறகு நமது அழைப்பை அவர் ஏற்கவே இல்லை.

அப்ப... நாமக்கல் மக்களோட கதி?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism