Published:Updated:

தர்ம அடி... ஆள் கடத்தல்... கொலை - உயிர் பயத்தில் ஓட்டுநர், நடத்துநர்கள்

ஓட்டுநர், நடத்துநர்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஓட்டுநர், நடத்துநர்கள்

மக்களுக்காகப் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களை பணியில் இருக்கும்போதே இப்படித் தாக்குவது மிகுந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது.

தர்ம அடி... ஆள் கடத்தல்... கொலை - உயிர் பயத்தில் ஓட்டுநர், நடத்துநர்கள்

மக்களுக்காகப் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களை பணியில் இருக்கும்போதே இப்படித் தாக்குவது மிகுந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது.

Published:Updated:
ஓட்டுநர், நடத்துநர்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஓட்டுநர், நடத்துநர்கள்

சம்பவம் 1

மே 13... சென்னையிலிருந்து விழுப்புரம் சென்றுகொண்டிருந்த பேருந்தில் குடிபோதையில் ஏறிய நபர், டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில் சரிந்து விழுந்த நடத்துனர் பெருமாள் பிள்ளை, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் 2

மே 13... விருதுநகரில் பேருந்துப் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, “அடிடா அந்த ஆளை...” என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரைப் புரட்டியெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் 3

மே 16... சென்னையில் பேருந்து நடத்துனரின் எச்சில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர்மீது பட்டதால் ஆத்திரமடைந்த காவலர், சம்பந்தப்பட்ட நடத்துனரை நடுரோட்டில் வைத்து மூக்கில் ரத்தம் கொட்டக் கொட்ட அடித்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சம்பவம் 4

மே 16... விருத்தாசலத்தில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி, தன் உறவினர்களைத் தொலைபேசியில் அழைத்தார். ஆட்டோவில் வந்த அவரின் உறவினர்கள் ஆறு பேர், நடத்துனர் மணிக்கண்ணனை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய கொடூரம் நடந்தேறியது.

தர்ம அடி... ஆள் கடத்தல்... கொலை - உயிர் பயத்தில் ஓட்டுநர், நடத்துநர்கள்

தொடரும் தாக்குதல் சம்பவங்கள்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென்னை சைதாப்பேட்டையில் பேருந்து உள்ளே வரச் சொன்ன ஓட்டுநர் - நடத்துனரை கல்லூரி மாணவர்கள் தாக்கியது, ஆவடியில் பேருந்து மேற்கூரையில் ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களைகீழே இறங்கக் கூறிய ஓட்டுநர், நடத்துனரைக் கும்பலாகத் தாக்கியது, பண்ருட்டியில் சாலையை மறித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை ஓரமாக நிறுத்தக் கூறிய ஓட்டுநர் - நடத்துனரை மர்ம நபர்கள் தாக்கியது எனத் தமிழ்நாடு முழுவதும் பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

இதைக் குறிப்பிட்டு, “தி.மு.க ஆட்சியில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உரிய பாதுகாப்பில்லை!” என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

பயணிகளால் தாக்குதலுக்குள்ளான பெரம்பூர் பணிமனை ஓட்டுநர் சுப்பிரமணியிடம் பேசியபோது, “பொதுமக்கள், காலேஜ் பசங்களைவிட, ஸ்கூல் பசங்க பண்றதைப் பார்த்தாத்தான் பயமா இருக்கு! ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி, பஸ்ல படிக்கட்டுல தொங்கிக்கிட்டும், காலை ரோட்டுல தேச்சுக்கிட்டும் வந்த ஸ்கூல் பசங்களை, `உள்ள வாங்க’னு சொன்ன எங்க பஸ் கண்டக்டரை, நெஞ்சுலேயே குத்தி கீழே தள்ளுனாங்க. அவங்க கீழே விழுந்து அசம்பாவிதம் ஆனா, நிர்வாகம் எங்களைத்தான் பணியிடை நீக்கம், பென்ஷனைத் தள்ளிப்போடுறதுனு தண்டிக்குறாங்க. நாங்க என்னதான் பண்றது?” என்று விரக்தியுடன் கேள்வி எழுப்பினார்.

``தினமும் பிரச்னைதான்... பணிப் பாதுகாப்பே இல்லை!’’

சி.ஐ.டி.யூ துணைத் தலைவரும், அரசுப் பேருந்து நடத்துனருமான மதியிடம் இது குறித்துப் பேசினோம். ``அரசு மருத்துவமனையிலோ, தாசில்தார் ஆபீஸ்லயோ ஓர் அரசு ஊழியர்மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்குற அரசாங்கம், நேரடியா பொதுமக்கள்கிட்ட பணிபுரியுற எங்கமேல தாக்குதல் நடந்தா, பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்குறதில்லை. நாங்களும் ஒரு `பப்ளிக் சர்வன்ட்’தானே? எங்களை அடிக்குற மாணவர்கள் மேல புகார் கொடுத்தாலும், `அவங்க எதிர்காலம் பாதிக்கப்படும்’னு சொல்லி அட்வைஸ் பண்ணி விட்டுடுறாங்க. மறுநாள் அந்தப் பசங்க அதே பஸ்ல வந்து, இன்னும் அவமானமாப் பேசி, பிரச்னையை வளர்க்குறாங்க. இப்பவே இதை முறைப்படுத்தலைன்னா, எதிர்காலத்துல இது பெரிய சமூகப் பிரச்னையா மாறும். அதனால, ஆறாம் வகுப்புலருந்து கல்லூரி வரைக்கும் எல்லா மாணவர்களுக்கும் அரசாங்கம் முறையான கவுன்சலிங் வழங்கணும். அரசாங்கமும், காவல்துறையோட போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து இதுக்கொரு தீர்வைக் கொண்டு வரணும்” என்று கோரிக்கைவைத்தார்.

எஸ்.எஸ்.சிவசங்கர்
எஸ்.எஸ்.சிவசங்கர்

``கண்டனத்துக்குரியது, உடனடி நடவடிக்கை எடுப்போம்!’’

இந்தப் பிரச்னைகள் சம்பந்தமாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரைத் தொடர்புகொண்டோம். ``மக்களுக்காகப் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களை பணியில் இருக்கும்போதே இப்படித் தாக்குவது மிகுந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறும்போதெல்லாம் நாங்கள் உடனடியாகத் துறைரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கிறோம். தடுப்பு முயற்சியாக தற்போது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், சுமார் 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறோம். படிப்படியாக அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பொருத்தவிருக்கிறோம். ஒரு கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி, நேரடியாக எந்தப் பேருந்தில் குற்றம் நடக்கிறது என்பதை ஆராய்ந்து, உடனடியாக அந்தப் பேருந்து வழித்தடத்தில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்து, காவலர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவிருக்கிறோம். இதனால் நிச்சயமாக குற்றச் செயல்கள் குறையும்; எதிர்காலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் அதிகரிக்காத வண்ணம் தடுக்கப்படும்.

மாணவர்கள் கூட்டமாகச் சேர்ந்து பயணிப்பதால் ஒரு கும்பல் மனப்பான்மையில் இப்படிச் செய்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடாதபடி மாணவர்களை ஒழுங்குபடுத்த கல்வித்துறை, போக்குவரத்துத்துறையுடன் கலந்துபேசி, கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்வோம். அடுத்தகட்ட பாதுகாப்புக்கு என்னென்ன தேவையோ, அவற்றை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்!” என்றார் உறுதியான குரலில்.

சொன்னதைச் செய்துவிட்டால், நிச்சயமாக அமைச்சரைப் பாராட்டலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism