Published:Updated:

உ.பி-யில் ஆர்டர் செய்யப்பட்ட துப்பாக்கி... கடைசி நேரத்தில் சுற்றிவளைத்த போலீஸ்...

துப்பாக்கி
பிரீமியம் ஸ்டோரி
துப்பாக்கி

மதம் மாறித் திருமணம் செய்ததால் போடப்பட்ட ஸ்கெட்ச்!

உ.பி-யில் ஆர்டர் செய்யப்பட்ட துப்பாக்கி... கடைசி நேரத்தில் சுற்றிவளைத்த போலீஸ்...

மதம் மாறித் திருமணம் செய்ததால் போடப்பட்ட ஸ்கெட்ச்!

Published:Updated:
துப்பாக்கி
பிரீமியம் ஸ்டோரி
துப்பாக்கி

காதல் திருமணம் புரிவதற்காகத் தன் மகள், இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய், மகளின் மாமனாரை (சம்பந்தியை!) கொலை செய்வதற்காகக் கூலிப்படையினரை ஏவியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை ஏற்கெனவே மோப்பம் பிடித்த போலீஸார், கூலிப்படையினரைக் கண்காணித்து, கொலை செய்வதற்கு முன்பாக ஐந்து பேரைச் சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர். கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் பெண்ணின் தாயைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையிலும் போலீஸ் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சாதியப் பாகுபாட்டால், தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடந்துவரும் நிலையில் மதமாற்றத்துக்காக நடந்த இந்தக் கொலை முயற்சி கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

சஹானா - அருண்
சஹானா - அருண்

கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் அருண். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹானா ஹஷ்மி. இந்து சமூகத்தைச் சேர்ந்த அருணும், இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த சஹானாவும் சென்னையில் கல்லூரியில் படித்தபோதிருந்தே காதலித்துவந்தனர். இவர்களின் காதல் விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தபோது, சஹானாவின் குடும்பத்தினர் அருணை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு அருணின் தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 2021, செப்டம்பர் மாதம் அருணும் சஹானாவும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்காக சஹானா இந்து மதத்துக்கு மாறிவிட்டார். இதுதான் பிரச்னைக்குக் காரணமாகி, கொலைத் திட்டம் வரை சென்றிருக்கிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று போலீஸ் தரப்பில் விசாரித்தோம்... “சஹானாவின் தாய் நூர் நிஷா, இஸ்லாம் சார்ந்த ஒரு கட்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அருணை இஸ்லாம் மதத்துக்கு மாற்றும் முயற்சி தோல்வியடைந்து, தன் மகள் இந்து மதத்துக்கு மாறித் திருமணம் செய்துகொண்டது அவருக்கு மிகப்பெரிய கௌரவப் பிரச்னையாகிவிட்டது. இதனால், நூர் நிஷா கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். நூர் நிஷாவின் கோபத்தை அறிந்த காதல் தம்பதியர், தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து, செல்வபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று நூர் நிஷாவிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். புகாரை வாங்கிய போலீஸார், இது மதமாற்றம் தொடர்பான சென்சிட்டிவ்வான விஷயம் என்பதால் நூர் நிஷாவின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினர்.

உ.பி-யில் ஆர்டர் செய்யப்பட்ட துப்பாக்கி... கடைசி நேரத்தில் சுற்றிவளைத்த போலீஸ்...

இதை அறியாத நூர் நிஷா, தன் மகள் மதம் மாறியதற்குக் காரணமான அருணின் தந்தை குமரேசனுக்கு எதிராகத் திரும்பினார். தொடர்ந்து அவர், திருச்சியைச் சேர்ந்த சதாம் உசைன், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பக்ருதீன் ஆகியோரை அணுகியுள்ளார். இவர்கள் இருவரும் மதரீதியான ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மூலம் திருச்சியைச் சேர்ந்த இம்ரான் கான், பெருந்துறையைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோரும் ‘பிளானில்’ இணைந்துள்ளனர். நூர் நிஷா இவர்களுக்கு வாட்ஸ்அப்பில் குமரேசனின் படத்தையும், அவரது கோவை முகவரியையும் பகிர்ந்துள்ளார். எப்படிக் கொலை செய்யலாம் என்று இந்த டீம் யோசித்தபோதுதான், திருச்சியில் பானிபூரி, பஞ்சு மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீர் என்பவரையும் இதில் சேர்த்துக்கொண்டுள்ளனர். இவர் சதாம் உசைனின் நண்பர்.

இதையடுத்து, இவர்கள் 40,000 ரூபாய் மதிப்பிலான துப்பாக்கியை வாங்குவதற்காக உத்தரப்பிரதேசத்தில் ஒருவரிடம் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், துப்பாக்கி வருவதற்கு தாமதமாகவே... அதுவரை காத்திருக்க வேண்டாம் என்று நினைத்த இந்த ஐந்து பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோவைக்கு வந்துவிட்டனர். குமரேசன் வழக்கமாகச் செல்லும் இடங்களை நோட்டம் விட்டவர்கள், கடந்த வாரம் குமரேசன் கோவை புட்டுவிக்கி பாலம் அருகே செல்லும்போது அவரைக் கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் தயாராகினர். ஏற்கெனவே இவர்களின் நடவடிக்கைகளை ஃபாலோ செய்துகொண்டிருந்த போலீஸ் ஐந்து பேரையும் சுற்றிவளைத்து, கைதுசெய்தது. இவர்களிடம் கைப்பற்றப்பட்ட மொபைல் போனிலிருந்து அவர்கள் ஆர்டர் கொடுத்த துப்பாக்கியின் படம் கைப்பற்றப்பட்டுள்ளது. தவிர இவர்களிடமிருந்து மூன்று அரிவாள்கள், ஐந்து மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன” என்றார்கள் விரிவாக.

சதாம் உசைன்,பக்ருதீன், இம்ரான் கான், முகமது அலி, ராம்வீர்
சதாம் உசைன்,பக்ருதீன், இம்ரான் கான், முகமது அலி, ராம்வீர்

இதற்கிடையே இந்தச் சம்பவத்தை என்.ஐ.ஏ தரப்பும் விசாரிப்பதாகக் கூறப்படுகிறது. நூர் நிஷா இந்தக் கொலைத் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்டார் என்று சொல்லப்பட்டாலும், தக்க ஆதாரங்கள் கிடைக்காததால் இதுவரை அவரைக் கைதுசெய்யவில்லை. தற்போது அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூலிப்படையினர் ஐந்து பேரையும் கஸ்டடியில் எடுத்து வாக்குமூலம் வாங்கிய பிறகே, நூர் நிஷா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து அருண் – சஹானா தம்பதியர், குமரேசன் ஆகியோர் தரப்பில் பேச முயன்றோம். ஆனால், கொலை முயற்சியால் குமரேசன் குடும்பத்தினர் மிகவும் பதற்றமடைந்திருப்பதால் நம்மிடம் அவர்கள் பேச முன்வரவில்லை. மேலும் தங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கேட்டு போலீஸாரிடம் மனுவும் அளித்துள்ளனர்.

ஒரு விபரீதம் நடப்பதற்கு முன்பாக சுதாரித்து குற்றவாளிகளைக் கைதுசெய்த போலீஸாருக்குப் பாராட்டுகள். அதேசமயம், சாதி, மதங்களை முன்வைத்து நடத்தப்படும் வன்முறைகளுக்குத் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism