Published:Updated:

`ஆப்கன்-மும்பை கடல்வழி; மும்பை-பஞ்சாப் சாலைவழி’ - ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்

ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.2,000 கோடி போதைப்பொருள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அதை பஞ்சாப்புக்குச் சாலை மார்க்கமாக அனுப்ப திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு இரானிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 283 கிலோ ஹெராயினை இரண்டு கன்டெய்னர்களில் அடைத்து அனுப்பியிருந்தனர். ஆறு சாக்குகளில் முகத்துக்குப் போடக்கூடிய பவுடர் என்று கூறி அவற்றை இந்தியாவுக்குக் கொண்டுவந்திருந்தனர். அவற்றை ஆப்கனிலிருந்து இரான் வழியாக மும்பைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்ஜிசிங் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருள்களை சாலைமார்க்கமாக பஞ்சாப்புக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்

இது குறித்து பஞ்சாப் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, இது பற்றி விசாரிப்பதற்காக பஞ்சாப் போலீஸார் மும்பை வந்துள்ளனர். கடத்தல்காரர்கள் போதைப்பொருள்களை நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்றால் பிடிபட்டுவிடுவோம் என்பதால் இரு சக்கர வாகனங்களில் எடுத்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பஞ்சாப்பிலிருந்து சாலை மார்க்கமாக இரு சக்கர வாகனங்களில் மும்பைக்குக் கடத்திவரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். நவிமும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சமீபகாலமாக மும்பை விமான நிலையம் வழியாக மட்டுமே போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துவந்தன. தற்போது கடத்தல்காரர்கள் தங்களது வழியை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு