Published:Updated:

`என்னைக் காப்பாற்றிய ஷீரோ அவள்..!’- காட்டுத் தீக்கு நடுவே ஆஸ்திரேலியப் பெண்ணின் திகில் அனுபவம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வின்டர் என்ற பெண் காட்டுத் தீக்கு மத்தியில் தன் குடும்பத்தினருடன் தான் உயிர்பிழைத்த கதையைக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ
ஆஸ்திரேலியக் காட்டுத் தீ

`கங்காரு தேசம்’ என அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எப்போதும் களைகட்டும். புத்தாண்டு தினத்தில் இரவுகளைப் பகலாக்கும் வாணவேடிக்கைகளைக் காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சிட்னிக்குப் படையெடுப்பார்கள்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை நகரங்கள் புத்தாண்டு தினத்தில் களைகட்டும். இந்த வருடம் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு மத்தியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம்தான் மேற்கொண்ட சாகசப்பயணம் குறித்து தெற்கு சிட்னியைச் சேர்ந்த வின்டர் என்ற பெண் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ
ஆஸ்திரேலியக் காட்டுத் தீ

தெற்கு சிட்னியைச் சேர்ந்த வின்டர் தன் மகன் மற்றும் உறவினருடன் சிட்னி கடற்கரைக்குச் செல்ல விரும்பியுள்ளார். காட்டுத் தீ பற்றிய தகவல் தெரிந்திருந்தாலும் எந்தப் பகுதியில் தீ ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் சென்ற பாதைகள் அனைத்தும் புகைமூட்டத்தால் நிரம்பியிருந்தன.

அந்தப் பயணம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. பாதுகாப்பான சாலைகள் புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தன. தன் குதிரை மீதான நம்பிக்கையில் அவர் தன் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். அவரது குதிரை கடற்கரை நகரமான மோருயாவுக்கு அவரது குடும்பத்தினரை பத்திரமாக அழைத்து வந்துள்ளது.

கொண்டாட்டத்தால் சிவந்த சிட்னி... காட்டுத்தீயால் சிவந்த மல்லக்கூட்டா... இது, ஆஸ்திரேலிய புத்தாண்டு!

``நாங்கள் நெருப்பின் மீது சவாரி செய்கிறோமா என்ற சந்தேகம் இருந்தது. உண்மையில் நாங்கள் எங்கு இருக்கிறோம் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. காட்டுத் தீ குறித்த முழுமையான தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரியும். நான் கடுமையான சூட்டை உணர்ந்திருந்தேன். ஆனால், அது சூரியனின் வெப்பமா அல்லது காட்டுத் தீயினால் ஏற்பட்ட தாக்கமா என உணரமுடியவில்லை.

உண்மையில் அந்த அனுபவம் திகிலூட்டுவதாக இருந்தது. என்னுடைய சார்மர் மீது நான் அதிக நம்பிக்கை கொண்டிருந்தேன். அவள் என்னை பத்திரமாக வெளியேற்றுவாள் என நம்பிக்கை கொண்டிருந்தேன். என்னுடைய நம்பிக்கை வீணாகவில்லை. என்னை பத்திரமாக வெளியேற்றிவிட்டாள். அவள்தான் என்னுடைய உண்மையான ஷீரோ.

ஆஸ்திரேலியா காட்டுத் தீ
ஆஸ்திரேலியா காட்டுத் தீ

காட்டுத் தீயிலிருந்து என்னுடைய வீடு தப்பியது. ஆனால், எங்களுடைய உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தன. என் மகனுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக வந்த பைக் திருடப்பட்டுள்ளது. என்னுடைய வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்றார் வேதனையோடு.

வின்டர் அவரது மகன் மற்றும் குதிரைக்கு மோருயா நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் நிர்வாகம் தங்குவதற்கு இடமளித்தது. அவர்களுக்குத் தேவையான உணவு, குதிரைக்குத் தேவையான தீவணங்கள் ஆகியவற்றை அளித்துள்ளனர். காட்டுத் தீ அந்தப் பகுதியில் அடங்கிய பின்னர் இவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளார். அவர்களுடைய சிறிய நகரம் காட்டுத் தீக்கு இரையாகியுள்ளது. அந்தப் பகுதியில் சிலர் தங்களது உயிர்களையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். காட்டுத் தீக்கு இதுவரை 23 பேர் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.