Published:Updated:

`நீங்கள் செய்த உதவி மகத்தானது, ஷேரன் வர்கீஸ்!' -ஆடம் கில்கிறிஸ்ட் கொண்டாடிய கேரள செவிலியர் #corona

ஷேரன் வர்கீஸ்
ஷேரன் வர்கீஸ்

கேரளாவைச் சேர்ந்த ஷேரன் வர்கீஸ், ஆஸ்திரேலியாவில் நர்ஸிங் படிப்பை முடித்தார். கொரோனா தாக்குதலின்போது, முதியோர்களைக் கவனிக்கும் மையத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதற்காக ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார். 

கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்தவர், ஷேரன் வர்கீஸ். அவரது தந்தை லல்லிசென் மல்லிசேரி. தாய் ஆன்சி பிலிப். ஒரு மூத்த சகோதரியும் தம்பியும் உள்ள ஷேரன், கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நர்ஸிங் படிக்கச் சென்றார்.

குடும்பத்தினருடன் ஷேரன் வர்கீஸ் (கடைசியில் நிற்பவர்)
குடும்பத்தினருடன் ஷேரன் வர்கீஸ் (கடைசியில் நிற்பவர்)

அங்குள்ள வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் (University of Wollongong) கடந்த 2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பை முடித்தார். அதன் பின்னர், அவருக்கு செவிலியராகப் பணிபுரியும் வாய்ப்பு வந்தது. இருப்பினும், அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து பணியாற்றினார். அவருடன் பல நாடுகளைச் சேர்ந்த செவிலியர் மாணவர்களும் பணியாற்றிவந்தார்கள்.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

படிக்கும்போதே ஷேரனுக்கு சேவை, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபாடு இருந்திருக்கிறது. அதனால் நண்பர்களின் துணையுடன் ‘வி பிலாங் காங்’ என்ற வீடியோவை 2016-ல் எடுத்தார். அது, அவரது கல்லூரியில் பரவலாகப் பேசப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் உள்ள வானொலியில், ‘பாட்டுப் பெட்டி’ என்ற மலையாள நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார்.

ரேடியோ ஜாக்கி பணியின்போது ஷேரன் வர்கீஸ்
ரேடியோ ஜாக்கி பணியின்போது ஷேரன் வர்கீஸ்

முதியோர் இல்லத்தில் பணியாற்றியபோது கொரோனா தாக்குதல் தொடங்கியது. ஆஸ்திரேலிய அரசு, முதியோர் வசிக்கும் இடங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொரோனா நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.

ஷேரன், தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார். வெளியில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவரையும் வராமல் தடுத்ததுடன், உள்ளேயே தங்கியிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துவந்தார். அதன்மூலம், நோய்த்தொற்று ஏற்படாமல் அனைவரையும் பாதுகாக்கக் காரணமாக இருந்தார்.

செவிலியர் ஷேரன் வர்கீஸ்
செவிலியர் ஷேரன் வர்கீஸ்

கொரோனா தடுப்புப் பணிகளை சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம்குறித்து வீடியோ வெளியிடுமாறு ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், கல்வி மற்றும் முதலீட்டுக்கான அரசு அமைப்பான ’ஆஸ்டிரேட்’ அழைப்பு விடுத்திருந்தது. அதில், ஷேரன் தன் பணிகள் குறித்துப் பேசியிருந்தார்.

வீடியோ பதிவில் பேசிய ஷேரன் வர்கீஸ், ”கிரீன்ஹெல் மேனர் முதியோர் இல்லத்தில் கொரோனா நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம். ஷிஃப்ட் முறையில் பணிக்கு வருபவர்களின் உடைமூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம்.

சக இந்திய மாணவர்களுடன் ஷேரன்
சக இந்திய மாணவர்களுடன் ஷேரன்

நீண்ட தூரங்களில் இருந்து வருபவர்களுக்குப் பதிலாக, உள்ளேயே தங்கியிருந்து பணியாற்ற முக்கியத்துவம் கொடுத்தோம். முதியோர்களின் உறவினர்கள் வந்து பார்க்க ஆரம்பத்தில் அனுமதித்தாலும், நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் உறவினர்களையும் அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் முதியோரைப் பாதுகாத்தோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஷேரன் வர்கீஸ் பணியை 'ஆஸ்டிரேட்' அமைப்பு வெகுவாகப் பாராட்டியுள்ளது. அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகாப்தமாக விளங்கும் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் பதிவு
ஆடம் கில்கிறிஸ்ட் பதிவு

அதில், “உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள், ஷேரன். இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதான மக்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது. நீங்கள் செய்திருக்கும் இந்த உதவியால், இந்தியாவுக்கும் உங்கள் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பணிக்காகக் கிடைத்திருக்கும் பாராட்டு ஷேரனை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், “என் தந்தை ஒரு கிரிக்கெட் ரசிகர். அதனால் ஆடம் கில்கிறிஸ்ட் என்னைப் பாராட்டியிருப்பது என் தந்தைக்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் பெருமையாக இருக்கிறது. 

என்னை ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டி இருப்பதால் என் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
ஷேரன் வர்கீஸ்

என் சகோதரியும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். என தம்பியும் அவனது நண்பர்களும் கில்கிறிஸ்ட் ரசிகர்கள். அதனால் அவர்கள் எனக்குக் கிடைத்த வாழ்த்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்” எனத் தெரிவித்தார். 

சமூகப் பணிக்காக இந்தியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம், அங்கு கல்விக்காகச் சென்றுள்ள மாணவர்களையும் மகிழ்வடைய வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு