Published:Updated:

முடங்கியது ஆட்டோ சக்கரங்கள் மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்! - ஊரடங்கு துயரங்கள்!

ஆட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ

ஸ்டாண்டுல ஒருத்தருக்கு வருமானம் இல்லைன்னா இன்னொருத்தர்கிட்ட கைமாத்து வாங்கிச் சமாளிப்போம். ஆனா, ஊரடங்கு காலத்துல மொத்தப் பேருக்கும் வருமானம் நின்னுபோச்சு

முடங்கியது ஆட்டோ சக்கரங்கள் மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்! - ஊரடங்கு துயரங்கள்!

ஸ்டாண்டுல ஒருத்தருக்கு வருமானம் இல்லைன்னா இன்னொருத்தர்கிட்ட கைமாத்து வாங்கிச் சமாளிப்போம். ஆனா, ஊரடங்கு காலத்துல மொத்தப் பேருக்கும் வருமானம் நின்னுபோச்சு

Published:Updated:
ஆட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ

ஆட்டோ சக்கரங்கள் அன்றாடம் சுழன்றால்தான், அதை ஓட்டும் டிரைவரின் வீட்டில் அடுப்பெரியும். கொரோனா பெருந்தொற்று அன்றாடங்காய்ச்சிகளான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கைச் சக்கரத்தையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அவர்களில் பலரும் ஆட்டோ கடன் தவணை செலுத்த முடியாமலும், வறுமையை எதிர்கொள்ள முடியாமலும் பெரும் துயரத்தில் தவித்துவருகிறார்கள்!

தலைநகர் சென்னையில் 1.2 லட்சம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் சொந்த ஆட்டோ வைத்திருப்பவர்கள். பெயருக்குத்தான் சொந்த ஆட்டோ... ஒவ்வொரு மாதமும் கடன் தவணையைச் செலுத்தி, முழுக் கடனையும் அடைக்கும் வரை அது அவர்களுக்கு நிரந்தரம் இல்லை. இடையில் இன்ஷூரன்ஸ், எஃப்.சி என செலவுகள் மூச்சு முட்டும். மூன்று மாதங்கள் தவணை செலுத்தவில்லை என்றால், ஆட்டோவை ஃபைனான்ஸ் நிறுவனம் பறிமுதல் செய்துவிடும். இப்படி கொரோனா காலத்தில் தவணை செலுத்த முடியாமல் ஆட்டோவை இழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

பாலசுப்பிரமணி
பாலசுப்பிரமணி

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி தாண்டமுத்து, ஊரடங்கில் வருமானம் முற்றிலும் இழந்து தவித்தார். ஒருபக்கம் கண்முன்னால் குடும்பத்தினர் உணவின்றி தவிக்க... இன்னொரு பக்கம் ஓரிரு வாடிக்கையாளர்கள் சவாரிக்கு அழைத்தபோதும் ஆட்டோவுக்கு இன்ஷூரன்ஸ் புதுப்பிக்க முடியவில்லை. எஃப்.சி-க்கும் பணம் இல்லை. விரக்தியடைந்தவர் ஒருகட்டத்தில் பித்துப் பிடித்தவராக ஆட்டோவை தீவைத்துக் கொளுத்திவிட்டார். இதேபோல வறுமையின் வெம்மை தாங்க முடியாமல் திண்டுக்கல்லில் ஆட்டோ தொழிலாளி ஒருவர் தன் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூரில் ஆட்டோ ஸ்டாண்டிலேயே ஆட்டோ தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஒவ்வோர் ஊரிலும் கண்ணீர்க் கதைகள் ஏராளம்.

அதிலும், தென்காசியின் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றின் தொழிலாளர்கள் தங்களின் சக தொழிலாளிக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னபோது நெஞ்சம் கனத்துப்போனது. “ஸ்டாண்டுல ஒருத்தருக்கு வருமானம் இல்லைன்னா இன்னொருத்தர்கிட்ட கைமாத்து வாங்கிச் சமாளிப்போம். ஆனா, ஊரடங்கு காலத்துல மொத்தப் பேருக்கும் வருமானம் நின்னுபோச்சு. ஆட்டோ டிரைவர் கந்தசாமி, ஒருகட்டத்துல குடும்பக் கஷ்டம் தாங்க முடியாம தன் மனைவியையும், ஆறு வயசு குழந்தையையும் கழுத்தை நெரிச்சு கொன்னுட்டு, அவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டாரு. அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தா, ‘வறுமை காரணமாக தற்கொலை’னு சுவத்துல எழுதிவெச்சிருந்தாரு” என்றார்கள் கண்கள் கலங்கியபடி.

திருநெல்வேலி களக்காடு ஆட்டோ ஸ்டாண்டு வழக்கமாக கலகலவென்று இருக்கும். சுமார் 80 ஆட்டோக்களைக்கொண்ட அந்த ஸ்டாண்டு வெறிச்சோடிக்கிடக்கிறது. நான்கைந்து ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே சவாரிக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முருகன். “கொரோனா வந்தப்புறம், எங்கள்ல நிறைய பேரு வேற தொழில்களுக்குப் போயிட்டாங்க. பலர் தவணை கட்ட முடியாம ஆட்டோவை வித்துட்டாங்க. ஏகப்பட்ட ஆட்டோக்களை ஃபைனான்ஸ்காரங்க பறிமுதல் செஞ்சுட்டாங்க. மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து, 2 லட்ச ரூபாய்க்கு ஃபைனான்ஸ்ல ஆட்டோ எடுத்தாரு. அதுல, 90,000 ரூபாயைக் கட்டிட்டாரு. கொரோனா வந்தப்புறம், தவணையைக் கட்ட முடியலை. அதனால, நிலத்தை வித்து மொத்தக் கடனையும் அடைக்கப் போனாரு. அதுக்கு, ‘அசலோட மொத்த வட்டியையும் சேர்த்துக் கொடுங்க’னு சொல்லிட்டாங்க. போதாக்குறைக்கு போலீஸ் டார்ச்சர் தாங்க முடியல. பொது இடங்கள்ல ஆட்டோவை நிறுத்தினா, ஃபைன் போடலாம்னு புதுசா கொண்டுவந்த மோட்டார் வாகனச் சட்டத்துல சொல்லியிருக்காம். அதனால ரோட்டோரமா பார்க் பண்ற ஆட்டோவுக்கு ஃபைன் போடுறாங்க” என்றார் வேதனையுடன்.

முடங்கியது ஆட்டோ சக்கரங்கள் மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்! - ஊரடங்கு துயரங்கள்!

“ஆட்டோ ஓட்டுநர் நல வாரியத்தில் ஏராளமாக நிதி இருந்தும் அதனால எங்களுக்கு ஒரு பலனும் இல்ல” என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆட்டோ – டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணி. “சுற்றுலா இடங்கள், சினிமா தியேட்டர்கள், மால் இதெல்லாம் செயல்பட்டாதான் எங்களுக்குப் பொழப்பு ஓடும். முகூர்த்த நாள்கள்ல கணிசமான வருமானம் கிடைக்கும். இப்ப இது எதுவுமே இல்லாமப் போச்சு... எப்படித்தான் எங்க வயித்தைக் கழுவுறது? கடந்த ஒண்ணரை வருஷத்துல மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆட்டோ தொழிலாளர்கள் தற்கொலை பண்ணிக்கிட்டிருக்காங்க. போன ஆட்சியில ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1,000 ரூவா, 2,000 ரூவான்னு ரெண்டு தவணையில 3,000 ரூவா நிவாரணம் கொடுத்தாங்க. தமிழ்நாடு முழுக்க 3.2 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் இருக்குற நிலையில, வெறும் 12,000 பேருக்கு மட்டும்தான் அந்தத் தொகை கிடைச்சுது. காரணம், ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியத்துல வெறும் 45,000 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்காங்க. அவங்கள்லயும் ஆதார் அட்டையில போன் நம்பர் இல்லை, பேங்க் பாஸ் புக் செயல்பாட்டுல இல்லைன்னு சொல்லி பலரையும் கழிச்சுக் கட்டிட்டாங்க.

எங்க நல வாரியத்தில் கோடிக்கணக்குல நிதி இருக்குது. அதுல இருந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆறு மாசங்களுக்கு தலா 7,500 ரூவா நிவாரணம் கொடுக்கணும்னு தி.மு.க தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போன வருஷம் தமிழக அரசுகிட்ட வலியுறுத்தினோம். இப்போ தி.மு.க-வே ஆட்சிக்கு வந்திருக்கு. இப்பயாச்சும் முதல்வர் பெரிய மனசு பண்ணி எங்க கோரிக்கையை நிறைவேத்தணும்” என்றார் பாலசுப்பிரமணி.

ஏழைக்கெல்லாம் சொந்தக்காரர்கள், இன்று பரம ஏழையாகிவிட்டிருக்கிறார்கள்... கைதூக்கிவிடுமா அரசு?