திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடிக்கு அழகு சேர்ப்பது, அம்மக்களின் கண்களுக்கும் மனதுக்கும் புத்துணர்வைக் கொடுப்பது... ஆவடி ஏரி பூங்கா.
2019-ம் ஆண்டு ஆவடி - பருத்திப்பட்டு பகுதியில் 87.06 ஏக்கர் பரப்பளவில் திறக்கப் பட்ட இந்தப் பூங்கா, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. `ஆவடி ஏரி' (Avadi Lake) என அழைக்கப்படும் பருத்திப்பட்டு ஏரியின் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் அதை மறுசீரமைத்து, ரூ.28.16 கோடி மதிப் பீட்டில் பசுமையான சுற்றுச்சூழலில் அமைக் கப்பட்டிருக்கும் இந்த அழகான பூங்காவுக்கு ஒரு ரவுண்ட் போகலாமா?!


பூங்காவின் நுழைவுவாயிலில் உள்ள கடை களில் பறந்துகொண்டிருக்கின்றன குழந்தை களின் மனதடைத்து ஊதிய வண்ண பலூன்கள். இட்லி, பூரி, தோசை முதல் பிரியாணி வரை உள்ள உணவுக் கடைகள். டீ, காபி கடைகளும் ஆவி பறக்கவிட்டுக் கொண்டிருந்தன. ‘அதெல் லாம் உங்களுக்கு, இதெல்லாம் எங்களுக்கு...’ என்று குழந்தைகளின் விரல்கள் பெற்றோர் களை பாப்கார்ன், பானிபூரி கடைகளுக்கு இழுத்துக்கொண்டிருந்தன.
பூங்காவின் உள்ளே நுழைந்ததும், எழிலுடன் அமைக்கப்பட்ட செடி, கொடி, மரங்களின் பச்சையை சாவகாசமாக அமர்ந்து ரசிக்க நேர்த்தியான இருக்கைகள் போடப்பட்டிருக் கின்றன.
நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சுற்றுச்சுவர், கைப்பிடி வசதி கொண்ட நடை பாதை இருக்கிறது. அங்கு தூய்மையான காற்றோட்டத்துடனும், புத்துணர்வுடனும் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர் சிலர். நடைபாதை ஏரியை ஒட்டியிருப்பதால், ஏரியில் வாத்துகள் வரிசையில் ஸ்விம்மிங் செல்லும் காட்சி தரும் ஃபீல் குட் உணர்வு, வாக்கிங் செல்பவர்களுக்கு போனஸ்.
பார்க் என்றாலே குழந்தைகள்தானே?! சின்ன சறுக்கு, பெரிய சறுக்கு, ஊஞ்சல், எண்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட சின்ன தூண்கள் என... தங்கள் ஏரியாவில் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந் தார்கள் அந்த வண்ணத்துப்பூச்சிகள்!
பார்க்கின் மைதானத்தில் யோகா, சிலம்பம், கராத்தே போன்ற சில பயிற்சிகளும் செய்து கொண்டிருந்தனர் குழந்தைகள்.
ஏரியின் படகு சவாரி, அடுத்த ஆனந்தம். லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைத் தவறாமல் பின்பற்றுவது, கனிவான ஊழியர்கள் என `குட்' சொல்ல வைக்கிறார்கள். ஏரியின் அழகைக் கண்டு ரசிக்க, ஏரியின் நடுவே பறவைகள் தங்கிச் செல்ல இரு தீவுகள் உள்ளன. அந்தத் தீவுகள் முழுக்கப் பச்சை போர்வை போர்த்திவிட்டதுபோல அடர்ந்து நிற்கின்றன மரங்கள்.


பருத்திப்பட்டு ஏரிக்கு ஆஸ்திரேலியா நாட்டின் பறவைகளில் ஒன்றான ஃபால்கன் பறவை, மற்றும் பல பறவைகள் ‘வலசை’ வருகின்றன. ‘புள்ளினங் காள்...’ என அவற்றை அண்ணாந்து பார்க்கும்போது ஏற்படும் ஆச்சர்யத்தில், மனசு அனிச்சையாக இயற்கைக்கு சொல் கிறது நன்றி.
ஏரி பூங்காவில் மாலை நேரத்தில் பல வண்ண மின் விளக்குகள் இரவை வண்ண மயமாக்குகின்றன. பூங்காவில் சிறு சிறு கைவினைப் பொருள்களின் கடைகளை அனுமதிக்கலாம் என்பது நம் பரிந்துரை.
ஆவடி ஏரி பூங்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது!