ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 3

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 3

வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆக்கும் ‘9’ படிகள்...

“பொறியியல் பட்டதாரியான நான், சுயமாகத் தொழில் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால், அதுகுறித்து எந்த விவரமும் தெரி யாத எனக்கு, தொழில்முனைவோர் ஆவதற் கான அடிப்படை விஷயங்கள் குறித்து வழி காட்டவும்.”

வசந்தி முருகேசன், கரூர்.

வாசகியின் சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

“வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகிய மூன்று பிரிவுகளுக்குள் ஆயிரக் கணக்கான தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்களுக்கு விருப்பமான தொழிலை, சரியான திட்ட அறிக்கையுடன் தேர்வு செய்யும் போது, அரசு மானியத்துடன் வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் தொடங்கும் தொழில் புதுமையானதாகவும் (Innovation), மாற்றி யோசி அணுகு முறையுடன் (Think differently), பொது வான வரையறையைத் தாண்டியதாக வும் (Outside the box) இருத்தல் நன்று. அவ்வாறு நீங்கள் தேர்வுசெய்த தொழில் சரியானதாக உள்ளதா என்பதைக் கண்டறிய கீழ்க்காணும் ஒன்பது படிநிலைகள் பயன்தரும்.

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 3

படி 1: விற்பனை வாய்ப்பு

எந்தத் தொழில் தொடங்கினாலும், நம் தயாரிப்பை எளிதாக விற்பனை செய்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. நாம் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் பொருளுக்குச் சந்தை வாய்ப்புள்ளதா (Marketing opportunities) என்பதைப் பலமுறை யோசித்து, உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். சந்தை வாய்ப்பு இல்லாத எந்த ஒரு தொழிலை யும் தொடங்கவே வேண்டாம்.

படி 2: லாபம் கொடுக்கும் தொழிலை உறுதிசெய்தல்

விற்பனை வாய்ப்புள்ள தொழிலாக இருந் தாலும், நாம் தேர்வு செய்யும் தொழில் லாபம் கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். லாபம் தராத தொழிலையும், மிகச் சொற்ப மான லாபத்தை மட்டுமே கொடுக்கக் கூடிய தொழிலையும் தவிர்ப்பது நல்லது.

படி 3: தொழில்நுட்ப விவரங் களை அறிதல்

நாம் தேர்வு செய்த தொழிலின் தயாரிப்பு முறை மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது.

படி 4: பணியாளர்கள் தேர்வு

பல தொழில்களுக்குத் திறன் சாராத பணி யாளர்களே போதும். சில தொழில்களுக்கு திறன் சார்ந்த பணியாளர்கள்தான் தேவைப் படுவார்கள். அதன்படி நம் தொழிலுக்கான சரியான, தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

படி 5: தொழிலுக்கான இடத்தேர்வு

தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான இடத்தேர்வு மிகவும் அவசியம். மூலப் பொருள்கள் வந்து சேர்வது, தொழி லாளர்கள் வந்து செல்வது, நம் தயாரிப்பு களை விற்பனை செய்வதற்கான வாகனப் போக்குவரத்து போன்ற பல தேவை களுக்கும் ஏற்ற இடத்தில் நிறுவனத்தை அமைக்க வேண்டும். மும்முனை மின்சாரம் தேவை என்றால் அதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். வீட்டிலிருந்தே தொழில் செய்பவர்கள், ஒருமுனை மின்சாரப் பயன்பாட்டுக்கு ஏற்ற தொழிலைத் தேர்வு செய்யலாம். தொழிற் சாலைகளை அமைக்க, தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் சார்ந்த பகுதிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

படி 6: இயந்திரங்கள் தேர்வு

தொழில்முனைவோர்கள் பலரும் தங்களின் தொழிலுக்குத் தேவையான மற்றும் சரியான இயந்திரங்களைத் தேர்வு செய்வதில் தவறு செய்துவிடுவார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதுடன், தரம், உற்பத்தித்திறன், பழுதாகும்போது சரிசெய்வதற்கான வாய்ப்பு போன்ற விஷயங்களை ஆராய்ந்து இயந்திரங் களை வாங்க வேண்டும்.

படி 7: மூலப்பொருள்கள் தேர்வு

நம் தொழிலுக்கான மூலப்பொருள்கள் பற்றியும், குறைந்த விலையிலும் தரமானதாகவும் அவை எங்கு கிடைக்கும் என்ற விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும். மூலப்பொருள் கிடைக்காத நேரத்தில் உற்பத்தி தடைப்படாமல் நடப்பதை உறுதிசெய்ய, தேவையான மூலப் பொருள்களை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். தொழில் முனைவோர் சிலர், கடன்முறையில் மூலப்பொருள்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இந்த முறையால் மூலப்பொருள்களின் விலை அதிகரித்து, லாபம் குறைய வாய்ப்புள்ளது.

படி 8: திட்ட அறிக்கை தயார் செய்தல்

மேற்கண்ட ஏழு படிநிலைகள் குறித்தும் தெரிந்திருந்தால், தொழில் தொடங்குவதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, நாமே திட்ட அறிக்கையை (Project Report) தயார் செய்யலாம். தேர்வு செய்த தொழில், அதை எங்கு செய்யவிருக்கிறோம், பணி யாளர்கள், மூலப்பொருள்கள் தேர்வு, மூலப் பொருள்களின் விலை, நம் விற்பனை பொரு ளுக்கான விலை நிர்ணயம், நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது, முதலீடு, கடனைத் திரும்பச் செலுத்தும் வழிமுறைகள் என அனைத்து விஷயங்களும் அடங்கியதாகத் திட்ட அறிக்கை இருக்க வேண்டும். திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் இதற்கான ஆலோசனைகளை, தொழில் வழிகாட்டுதல் நிறுவனங்களிடமும் பெறலாம்.

படி 9: தொழில் முதலீட்டை உறுதிசெய்தல்

தொழில் தொடங்குவதற்கான அனைத்து விவரங்களையும் பெற்ற பிறகு, கடைசியாகத் தேவைப்படுவது முதலீடு. குறைவான முதலீடு தேவைப்படும் பட்சத்தில், நம்மிடமே போதிய பணம் இருந்தால், விரைவாகத் தொழிலை ஆரம்பிக்கலாம். நாம் தொடங்கும் தொழிலுக் கான முதலீடு அதிகமாகத் தேவைப்படும் பட்சத்தில், அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். TIIC (Tamilnadu Industrial Investment Corporation), SIDBI (Small Industries Development Bank of India), NSIC (National Small Industries Corporation), நபார்டு வங்கி போன்ற அரசு நிதி நிறுவனங்களும் இதற்காக உதவு கின்றன. எம்.எஸ்.எம்.இ (Ministry of Micro, Small and Medium Enterprises) நிறுவனத்தை அணுகினால், வங்கிக் கடனுடன், 25 - 50 சத விகிதம் வரை அரசு மானியமும் கிடைக்கும். திட்ட அறிக்கை சரியாக இருந்தால், வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும்.”

‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டம் குறித்தும், தொழில்முனைவோராவதில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக் கப்படும் அவசியமான கேள்விகளுக்கான விளக்கங்கள் அடுத்த இதழிலும் தொடரும்...

குறிப்பு: உங்களின் கேள்விகளை ‘avalvikatan@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி மற்றும் Aval Vikatan ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸிலும் அனுப்பலாம். இந்தக் கட்டுரையை ஆன்லைனில் படிப்பவர்கள் கமென்ட் செக்‌ஷனிலும் குறிப்பிடலாம். தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

‘அவள் 25... அவர்கள் 25!’

அவள் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

வலைதள சிறுகதை

எழுத்தாளர் வாசகர்களே... உங்கள் சிறுகதைகளை விகடன் வலைதளத்தில் மேடையேற்ற நாங்கள் தயார். சிறப்பாகவும், ஜொலிப்பாகவும் நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் 1,000 வார்த்தைகளுக்குள் இருப்பது அவசியம். ஆன்லைனில் பதிவாகும் சிறுகதைக்கான ரொக்கப் பரிசு ரூ.500; சிறந்த சிறுகதைக்கு குக்கர் பரிசு என்று சென்ற (22.11.22) இதழில் அறிவித்திருந்தோம். ஏராளமான வலைதள சிறுகதைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பரிசு பெற்ற, விகடன் இணையதளத்தில் வெளியாகும் சிறுகதை பற்றிய அறிவிப்பு அடுத்த இதழில்...

வாசகர்களே... நீங்களும் எழுதி அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

வலைதள சிறுகதை

அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com