Published:Updated:

39 பெண்கள் - பிரமிப்பை ஏற்படுத்தும் ஒரு நூல்! - முனைவர் அ.வெண்மணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்

அவள் நூலகம்

பிரீமியம் ஸ்டோரி
உலகம் முழுவதும் அறிந்த, அறியப்படாத, மறக்கப்பட்ட பல பெண் ஆளுமைகள் குறித்த பதிவுகளை `ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்', `எதிர்க்குரல்' ஆகிய தலைப்புகளில் எழுத்தாளர் மருதன் அவள் விகடனில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது `ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்' என்கிற புத்தகம்.

இவற்றில் சிலர் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்தாம். ஆனால், அவர்களைப் பற்றிய அறியப்படாத செய்திகள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். நாடு, மொழி வித்தியாசம் இல்லாமல் அரசியல், சமூகப் போராளிகளாக, எழுத்தாளர்களாக, அறிஞர்களாக தங்களின் இருப்பை நிரூபிக்க அவர்கள் நடத்திய தைரியமிக்க போராட்டங்களை, வலிகளை ஆசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ள விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.  

 39 பெண்கள் - பிரமிப்பை ஏற்படுத்தும் ஒரு நூல்! - முனைவர் அ.வெண்மணி

நியூயார்க்கில் பிறந்திருந்தாலும் கண்டங்கள் கடந்து ஆப்கானிஸ்தான் வந்த நான்சி ஹேட்ச், ஆப்கானின் தொன்மையான நாகரிகத்தை உலகுக்கு வெளிபடுத்தியவர். ஆப்கான் அரசின் எதிர்ப்பு, தாலிபான்களின் அச்சுறுத்தல்களைத் தாண்டி அந்நாட்டையும் மக்களையும் அவரை நேசிக்க வைத்தது எது? சிரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சமர் யாஸ்பெக்ககுக்கு, பிரான்ஸில் வசதிமிக்க அமைதி வாழ்க்கை அமைந்தபோதும் சிரியா மட்டுமே அவர் கனவு தேசமாக இருந்திருக்கிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சமர் அன்றைய ஆட்சியாளர்களுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். தன் நாட்டையும் மக்களையும் நேசித்த சமர் ஒவ்வொரு முறையும் துருக்கி வழியாக சட்டத்தை மீறி சிரியாவுக்குள் நுழைந்து போராளிகளுடன் உரையாடி எழுதியிருக்கிறார். சிரியா அரசின் பார்வையில் அவர் `முதன்மையான தேசவிரோதி'யாக தெரிவதே அவரது பணிக்குக் கிடைத்த விருதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் குண்டுமழையில் ஆடை முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அழுதுகொண்டே ஓடும் புகைப்படத்தின் மூலம் பிரபலமான வியட்நாம் சிறுமி, `ஃபான் தி கிம் ஃபுக்' பற்றிய பதிவில் அந்த போர் நிகழ்வு நேரடிக் காட்சியாக கண்முன்னே நிழலாடும்.

 39 பெண்கள் - பிரமிப்பை ஏற்படுத்தும் ஒரு நூல்! - முனைவர் அ.வெண்மணி

மேல்தட்டு வர்க்கத்தில் பிறந்து, சிறந்த கல்வியாளராக உருவாகியிருக்க வேண்டிய அனுராதா கண்டி, பழங்குடி மக்களுக்கு ஆதரவான நக்சல்பாரி இயக்கப் போராளியாக உருவெடுத்தார். தலித்தியத்தின் மார்க்சிய முகமாகவும், மார்க்சியத்தின் பெண்ணிய முகமாகவும் அறியப்படுகிறார் இவர்.

இலங்கையில் மருத்துவப் படிப்பை முடித்த பேராசிரியரான ராஜனி திரிகாம ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அரசியல் நிலைபாட்டைக் கொண்டிருந்தவர். பிறகு அதிலிருந்து விலகி மனித உரிமைப் போராளியாகவும், பெண்ணியவாதியாகவும் மாறுகிறார். இறுதியில் பயங்கரவாதம், போர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான படைப்புகளை எழுதியதால் சுடப்பட்டுக் கொல்லப்படுகிறார்.

சாதிய மற்றும் பாலினப் பாகுபாட்டை ஒரு சேர சந்தித்து, இந்துஸ்தானி இசையுலகில் தனக்கென்ற ஓர் இடத்தை கோலோச்சியவர் கங்குபாய் ஹங்கல். தனது 11 வயதில் பெல்காம் மாநாட்டில் காந்தியின் முன் பாடிய பிரமிப்பையும் தாண்டி, நிகழ்ச்சி முடிந்ததும் `கீழ்சாதி' என்று கூறி பிரித்து தனியே சாப்பிடச் சொல்வார்களே என்று வருந்திய அந்தச் சிறிய மனத்தின் வலிகளை நன்கு உணர முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இரண்டு ஆண்களின் வாழ்க்கையில் காதலியாக, மனைவியாக அறியப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. ஒருவர், இந்த பூமிப் பந்தையே தன் காலடியில் வைக்கத் துடித்த  யூதயின அழிப்பின் கொடுங்கோலனாக அறியப்பட்ட ஹிட்லரின் காதலி ஈவா பிரான். தனக்கென்று வரலாற்றுப் பக்கங்களை விட்டுச்செல்லாமல், தனது தீரா காதலால் `ஹிட்லரின் காதலி' என்கிற அடையாளத்துடன் மட்டும் ஹிட்லருடன் தற்கொலையில் இணைந்தவர். ஈவா, சாதாரணப் பெண்களுக்குரிய ஆசைகளுடன் மறைந்துபோன ஆச்சர்யக்குறியாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.

 39 பெண்கள் - பிரமிப்பை ஏற்படுத்தும் ஒரு நூல்! - முனைவர் அ.வெண்மணி

இன்னொருவர், `காந்தியின் நிழல்' என்று ஆசிரியரால் அறியப்படும் கஸ்தூரிபா. வசதியான பனியா குடும்பத்தில் பிறந்தவர் என்ற குறிப்பைத் தவிர அவர் குழந்தைப் பருவம் பற்றிய எந்தக் குறிப்பும் அறியப்படவில்லை. சிறிய பெண்ணான கஸ்தூரிபாவின் கல்வியறிவு கிடைக்கப் பெறாத இளமை பருவத்தை விவரிக்கும் வேளையில், அவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜோதிராவ் பூலே, தன் இளைய மனைவி சாவித்ரிக்கு கல்வி கற்று தந்ததை நினைவூட்டி காந்தி மீது நமக்கு கோபம் திரும்பச் செய்கிறார் ஆசிரியர். தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் சட்ட மசோதாவை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்கும்போதும், இந்தியாவின் சுதந்திர போராட்டக் காலத்திலும் தனக்கென்று ஓர் அடையாளத்துடன் அரசியல் ஆளுமையாக ஜொலித்திருக்கிறார் கஸ்தூரிபா. கல்வியறிவு இல்லாமல், அனைத்துவகை விரதச் சடங்குகளைக் கடைப்பிடிப்பவராக, இருந்தும் பொது வாழ்க்கை, சிறை வாழ்க்கையென அவர் கடந்த வந்த பாதைகளில் வியக்கவைக்கிறார். காந்தியின் குறிப்புகள் மற்றும் பிறர் பார்வையிலாக மட்டுமே இவரை அறிய முடிகிறது.

நமக்கு அறிமுகமான ஆளுமைககளின் வாழ்க்கையை மாறுபட்ட வகையில் படிப்பது ஒரு சுவாரஸ்யம்தான். அப்படி வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பரின் சிறு வயது குறும்புகளும், தேடி வந்த பல விருதுகளை கம்பீரமாக மறுத்திட்ட அவரின் ஆளுமையும் நம்மை ஆட்கொள்ளும். எதை எழுதினாலும் பேசினாலும் அனைவரின் கவனத்தை பெரும், ஆளும் வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் அருந்ததி ராய். தனது முதல் நாவலின் மூலம் புகழ் வெளிச்சத்தில் ஒளிர்பவர். வன்முறைக்கு எதிரான, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான அடுத்தடுத்த அரசியல் தலையிடல்களால் பல எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் 39 கட்டுரைகளில் நாடு, மொழி, எல்லை கடந்து கல்வி, கலை, இலக்கியம், நடனம், இசையென்று என்று பல வடிவங்களை தங்களது போராட்டக் கருவியாகப் பயன்படுத்திய ஆளுமைகளை நம் முன்னே நிறுத்துகிறார் மருதன். உலக வரலாற்றையும் சுயசரிதைகளையும் தேடிப்படிக்கும் ஆர்வத்தை நிச்சயம் இந்தப் புத்தகம் தூண்டும்.

மருதன் எழுத்தில் வெளிவரும் `புத்துயிர்ப்பு' பகுதி - பக்கம் 70-ல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு