லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் பதில்கள் - 10 - எண்ணெய் வடியும் கூந்தல்... எப்படிச் சமாளிப்பது?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

அவசரமாக வெளியே கிளம்ப வேண்டிய நேரத்தில் தலையில் எண்ணெய்ப் பசை இருந்தால் எந்த ஹேர் ஸ்டைலும் செய்ய முடிவதில்லை. தலைக்குக் குளிக்க நேரமும் இல்லாத நிலையில் இதை எப்படிச் சமாளிப்பது?

- கே.சாந்தினி, கோவை

அவள் பதில்கள் - 10 - எண்ணெய் வடியும் கூந்தல்... எப்படிச் சமாளிப்பது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

எண்ணெய் வைத்த தலையுடன் அவசரமாக வெளியே கிளம்ப நேரிட்டால், முதலில் டிஷ்யூ துணி வைத்துத் தலையைத் துடையுங்கள். பிறகு, கூந்தலின் உள்பக்கமாக பேக் கோம்பிங் (Back combing) செய்துவிட்டு, மேல் பக்கத்தை வாரிவிட்டால் அடர்த்தியாகவும் தெரியும். எண்ணெய் படிந்து கூந்தல் சப்பையாகத் தெரியாமலும் இருக்கும். தவிர மேட் ஃபினிஷில் கிடைக்கும் ஸ்டைலிங் புராடக்ட்டுகளை உபயோகிக்கலாம். அடிக்கடி உங்களுக்கு இப்படிப்பட்ட சூழல் ஏற்படும் என்றால் நிபுணரின் ஆலோசனையுடன் ஸ்டைலிங் ஸ்பிரே ஒன்று வாங்கி வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.

தலைக்கு ஸ்கார்ஃப் கட்டிக்கொள்ளலாம். சின்ன க்ளிப்புகள், குட்டிக் குட்டி அக்சஸரீஸ் உபயோகிப்பது போன்றவை எண்ணெய் படிந்த உங்கள் கூந்தலிலிருந்து பிறர் கவனத்தைத் திசைத்திருப்பும்.

 வசுந்தரா -  நிலீனா -  ராம்நாத்
வசுந்தரா - நிலீனா - ராம்நாத்

எனக்கு வயது 55 ஆகிறது. தூங்கும்போது வாயிலிருந்து எச்சில் வடிகிறது. இதை நிறுத்த என்ன செய்ய வேண்டும்?

- அ.சந்திரலேகா, மதுரை

பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தூக்கவியல் மருத்துவர் நிலீனா.

இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. விழித்திருக்கும்போது எச்சிலை விழுங்கிக்கொண்டே இருப்போம். ஆனால், தூங்கும்போது தசைகள் ஓய்வுக்குச் செல்வதால் விழுங்குகிற செயல்பாடு முழுமை யாக இருக்காது. எனவே, எச்சில் வெளியேறுகிறது.

தொண்டையின் பின்பகுதியில் இருக்கும் உட்சதைப் பகுதியான டான்சில் (Tonsil) பெரியதாக இருந்தாலோ, சளித்தொந்தரவுகள் இருந்தாலோ எச்சில் வெளியேறும். உணவுக்குழாயில் அடைப்புகள் ஏதேனும் ஏற்படும்போதும், விழுங்குகிற செயல்பாட்டில் பிரச்னை உண்டாகும். அதனாலும் எச்சில் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

அவள் பதில்கள் - 10 - எண்ணெய் வடியும் கூந்தல்... எப்படிச் சமாளிப்பது?

குறட்டை விடுபவர்களுக்கு அதிகளவில் இப்பிரச்னை இருக்கும். ஏனென்றால், அவர்கள் வாயைத் திறந்தபடி தூங்குவார்கள்.

பல் வரிசை சீராக இல்லாத போதும் வாயைத் திறந்து தூங்கு வதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படித் தூங்குகையில் எச்சில் வெளியேறிவிடும். மேலும், குப்புறப்படுக்கும்போது உணவுக் குழாய் நேராக இருக்காது. அதனால் விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதால் எச்சில் வெளியேறும். சில குறிப்பிட்ட மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு உமிழ்நீர் அதிக அளவு சுரக்கும். அவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

தூங்கும்போது எச்சில் வெளியேறுவதற்கு இதுபோல் பல காரணங்கள் உள்ளன. ஆகவே, பொதுவாக ஒரு தீர்வை சொல்ல முடியாது. எதனால் வெளியேறுகிறது என்பதை மருத்துவ ஆலோசனை பெற்று கண்டறிந்து அதற்கேற்ற தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, குப்புறப்படுத்தால் வெளியேறுகிறது என்றால் நேராகவும், பக்கவாட்டிலும் படுக்கலாம். பல் வரிசை சீராக இல்லையென்றால் அதைச் சீர்படுத்திக்கொள்ளலாம். சளித்தொந்தரவு மற்றும் உணவுக் குழாயில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ப்ளஸ் டூ படிக்கும் என் மகளுக்கு எந்நேரமும் வரைவதில்தான் நாட்டமிருக்கிறது. கோலம் போடுவதிலிருந்து, ரெக்கார்டு நோட்டில் படங்கள் வரைவதுவரை எதுவானாலும் அற்புதமாக வரைகிறாள். படிப்பைவிடவும் ஓவியத்தில்தான் நாட்டம் அதிகமாக இருக்கிறது. அந்தத் துறை தொடர்பாகப் படிக்க வைக்கலாமா? அப்படி ஏதேனும் பிரத்யேக படிப்பு இருக்கிறதா? அதற்கு எதிர்காலம் இருக்குமா?

- மதுமிதா ராமசாமி, சேலம்

அவள் பதில்கள் - 10 - எண்ணெய் வடியும் கூந்தல்... எப்படிச் சமாளிப்பது?
triloks

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் ராம்நாத்.

மகளின் திறமையைக் கண்டுபிடித்ததற்கு முதலில் பாராட்டுகள். ஓவியத்தில் ஆர்வமுள்ள உங்கள் மகளைப் போன்றவர்களுக்கு டிசைனிங் எனப்படும் வடிவமைப்புத் துறையும், ஃபைன் ஆர்ட்ஸ் எனப்படும் நுண்கலைத் துறையும் மிகவும் பொருத்தமானவை. இந்த இரண்டு துறைகளுமே வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகளும் அதிகம். தவிர வீட்டிலிருந்தே பணிபுரியவும், பகுதிநேரமாகப் பணிபுரியவும்கூட வாய்ப்புகள் ஏராளம்.

உங்கள் மகளின் தேர்வு இந்தத் துறைகள் தான் என்றால் அதற்கென்றே பிரத்யேக கல்லூரிகள் இருக்கின்றன. அந்தக் கல்லூரி களில் பி.டிசைன் மற்றும் பி.எஃப்.ஏ எனப்படும் நான்கு வருட தொழில்முறை படிப்புகள் உள்ளன. அவற்றில் ஃபேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், கம்யூனிகேஷன் டிசைனிங், இண்டஸ்ட்ரியல் டிசைனிங், விஷுவல் ஆர்ட்ஸ் போன்ற பல பிரிவுகள் உள்ளன. ப்ளஸ் டூ மதிப்பெண்ணைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பிரத்யேக சேர்க்கை முறை பின்பற்றப்படும்.

சென்னை மற்றும் கும்பகோணத்தில் தமிழக அரசின் கவின்கலைக்கல்லூரி இயங்கிவருகிறது. இங்கே ஓவியம், சிற்பம், விஷுவல் கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் இணையதள முகவரி: https://www.artandculture.tn.gov.in/fine-arts-college-chennai.

மத்திய அரசின் சார்பில் ‘என்ஐஎஃப்டி’ என்று அழைக்கப்படும் `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி’ கல்லூரிகள் இந்திய அளவில் முக்கியமான நகரங்களில் இயங்கிவருகின்றன. சென்னையிலும் இயங்கி வருகிறது. இங்கே பலவிதமான வடிவமைப்பு படிப்புகள் உள்ளன. இதன் இணையதள முகவரி: https://www.nift.ac.in/chennai

மேற்சொன்ன பிரிவுகளில் உங்கள் மகளின் விருப்பம் அறிந்து அந்தப் பிரிவில் சேர்த்து விடுங்கள். அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.