Published:Updated:

அவள் பதில்கள் - 25 - கொரோனாவிலிருந்து மீண்டபிறகும் துரத்தும் ஜலதோஷம்... என்ன தீர்வு?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

கொரோனா தொற்றிலிருந்து குணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல் என அவதிப்படுகிறேன். கொரோனாவுக்கும் இதற்கும் தொடர்புண்டா?

- சி.மங்கை, சேலம்

பதில் சொல்கிறார் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி, சென்னை.

கொரோனா தொற்றானது நுரையீரலை பாதிக்கக்கூடியது என்பதை நாம் அறிவோம். அதிலும் கொரோனா தாக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்தவர்களுக்கு நுரையீரல் பாதிப்பின் தீவிரம் காரணமாக இப்படி அடிக்கடி சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு முன்பு இருந்த டிபி உள்ளிட்ட சில தொற்றுகள் மீண்டும் தூண்டப்படுவதாகக் கூட சில ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் பட்சத்தில் நுரையீரல் மருத்துவர் அல்லது பொது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

நுரையீரலின் திறனைப் பரிசோதிக்கும் `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்' (Pulmonary Function Test), சளிப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்றவற்றைச் செய்து பார்ப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறியலாம். இந்தப் பிரச்னையை அலட்சியப்படுத்தாமலும், நீங்களாக மெடிக்கல் ஷாப்பில் மருந்துகள் வாங்கிச் சாப்பிடாமலும் முறையான சிகிச்சையை மேற்கொள்வதுதான் சரியானது.

அவள் பதில்கள் - 25 - கொரோனாவிலிருந்து மீண்டபிறகும் துரத்தும் ஜலதோஷம்... என்ன தீர்வு?

என் இரண்டு மகள்களும் டீன்ஏஜில் இருக் கிறார்கள். தலைக்கு எண்ணெய் தடவுவதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ விரும்புவ தில்லை. இருவருக்கும் முடி உதிர்வு இருக்கிறது. எண்ணெய்க் குளியலால் எந்தப் பலனும் இல்லை என்று விவாதிக்கிறார்கள். வீட்டிலேயே தயாரித்து உபயோகப்படுத்தக்கூடிய எளிமையான ஹேர் ஆயில் செய்முறையும், கூந்தல் உதிர்வுக்கான தீர்வுகளும் சொல்ல முடியுமா?

- கே.சீதாலட்சுமி, மதுரை

பதில் சொல்கிறார் கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம், சென்னை.

இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு பாரம்பர்யத்தின் அருமை, பெருமைகள் தெரிவதில்லை. நவீனம் என்ற பெயரில் எல்லாவற்றிலும் செயற்கையைத் தேடிப் போய், ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். எண்ணெய்க் குளியல் என்பது பலகாலமாக நம்மிடையே தொடரும் மிகச் சிறந்த பாரம்பர்யம். அது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலைக் குளிர்ச்சியாக்கி, தசைகளை வலுவாக்கி, சரும ஆரோக்கியத் துக்கும் உதவக்கூடியது. ஆனால், இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. தீபாவளியன்று எண்ணெய்க்குளியல் எடுப்பது கூட மறைந்துவருகிறது. இந்த வருட தீபாவளியிலிருந்தாவது எண்ணெய்க் குளியலை வாழ்வியல் முறையாக்கிக் கொள்வது சிறப்பு. சுத்தமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயே போதுமானது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

ஜங்க் உணவுகளில் எந்த ஊட்டமும் இருப்பதில்லை என்பதால் அவற்றை அதிகம் சாப்பிடுவோருக்கு கூந்தல் உதிர்வும் அதிக மிருக்கும். எனவே, ஜங்க் உணவுகளைத் தவிர்த்து புரதச்சத்து அதிகமுள்ள பருப்புகள், தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு காரணம். எனவே, சரியான நேரத்துக்கு சரியான அளவு தூக்கம் அவசியம்.

பூங்குழலி
பூங்குழலி
தலத் சலீம்
தலத் சலீம்

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் - மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். அதே அளவு தேங்காய் எண்ணெயில் சிறிது வெந்தயம் சேர்த்து வெடிக்கும்வரை காய்ச்சவும். பிறகு அந்த எண்ணெயை மற்ற எண்ணெய்க் கலவையோடு சேர்த்து ஆறவைத்து, பாட்டிலில் நிரப்பவும். தேவைப்படும்போது இந்த எண்ணெயைத் தலையில் தடவி மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்தும் பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரை, துளசி, பொடுதலை, செம்பருத்தி இலை, மருதாணி எல்லாம் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். மற்ற இலைகளை முதலில் அரைத்துவிட்டு, கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அரைத்துச் சாறு எடுக்கவும். ஒரு கப் சாற்றுக்கு மூன்று கப் அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடு படுத்தி, அதில் சாறு சேர்த்துக் கொதிக்க ஆரம்பிக்கும்போது உலர்ந்த ரோஜா இதழ்கள் இரண்டு டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைத் தோல் விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு கொதிக்க விடவும். இரண்டு, மூன்று நாள்களுக்கு அப்படியே வைத்திருந்து, வடிகட்டி உபயோகிக்கவும். கூந்தல் உதிர்வுக்கு, குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பிறகான கூந்தல் உதிர்வுக்கு இது நல்ல தீர்வளிக்கும். எண்ணெய்க் குளியலின் மகத்துவத்தை உங்கள் மகள்களை அனுபவித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அது தரும் புத்துணர்வையும், கூந்தல் பொலிவையும் பார்த்தால் பிறகு அவர்களும் எண்ணெய்க் குளியலுக்குப் பழகி விடுவார்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம்.

உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.