Published:Updated:

அவள் பதில்கள் - 27 - அளவுக்கதிக மருந்துகளால் நினைவிழப்பு ஏற்படுமா?

- சாஹா

பிரீமியம் ஸ்டோரி

என் வயது 37. பத்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கடந்த மூன்று வருடங்களாக எனக்கு மாத விடாய் பிரச்னை இருக்கிறது. என் உடல் எடை 79 கிலோ. மருத்துவரைப் பார்த்து டெஸ்ட் செய்ததில் ஹார்மோன் பிரச்னை என்கிறார்கள். மாத்திரை போட்டால் அந்த மாதம் மாதவிடாய் வரும். போடாவிட்டால் மறுபடி பிரச்னைதான். இந்தப் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

- ரா. கற்பகம், மேட்டூர் அணை, சேலம்

வரலட்சுமி
வரலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல்பருமன் மிக முக்கியமான காரணம். இதிலிருந்து விடுபட நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்ப்பது, ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். யோகாவும் உதவும். உடலை இளைக்கச் செய்கிற உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள் தவிர்த்து, ஆவியில் வெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை உணவுக்கு முளைகட்டிய தானியங்கள், அவல் போன்ற வற்றை 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். கூடியவரையில் சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவது சிறந்தது. உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்கவும். ஒருவேளை இருந்தால் சித்தாவிலோ, அலோபதியிலோ அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தைராய்டை குணப்படுத்தாமல் மாத விடாய் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கக் கூடாது.

அவள் பதில்கள் - 27 - அளவுக்கதிக மருந்துகளால் நினைவிழப்பு ஏற்படுமா?

மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன. இரண்டு பல் மலைப்பூண்டை, ஒரு கப் பாலில் வேகவைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் சாப்பிடுங்கள். முருங்கைக்கீரை, தினம் இரண்டு எள்ளுருண்டைகள், கல்யாண முருங்கையில் அடை, தோசை போன்றவற்றை சாப்பிடுங்கள். மலைவேம்புச் சாற்றை மாதத்தில் மூன்று முறை 15 முதல் 20 மில்லி அளவுக்கு காலையில் குடிக்கலாம்.

கழற்சிக்காய் என்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதன் விதைகளை தினம் ஐந்து என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் சுழற்சி முறைப்படும். இவை யெல்லாம் அடிப்படையான ஆலோசனைகள். நீங்கள் சித்த மருத்துவரை நேரில் சந்தித்து உங்கள் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பிரத் யேக சிகிச்சைகளையும் கேட்டுப் பின்பற்றலாம்.

என் அம்மாவுக்கு 69 வயது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளோம். இரண்டு சிறுநீரகங்களும் சரியாகச் செயல்படவில்லை எனவும் நுரையீரலில் நீர்கோத்துள்ள தாகவும் சொல்லி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு ஞாபக சக்தியும் போய்விட்டது. என் அம்மா 50 - 55 வயது இருக்கும்போது டஸ்ட் அலர்ஜி, மூட்டுவலி போன்றவற்றுக்கு பிரபல மருத்துவமனை ஒன்றில் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்தார். அப்போதிருந்தே ஏராளமான மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்தார்.

15 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் ரெகுலர் நோயாளியாகவே இருந்து, சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். அதுதான் ஞாபக சக்தியை இழக்க காரணம் என தற்போது சிகிச்சை தரும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொண்டால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும் என்பது நிஜமா..?

- கெளசல்யா, திருவள்ளூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் விவேக் ஐயர்

விவேக் ஐயர்
விவேக் ஐயர்

உங்கள் கேள்வியில் பல தகவல்கள் முழுமையாக இல்லை. உங்கள் அம்மாவுக்கு நீரிழிவு இருக்கிறதா என்ற தகவல் இல்லை. நீங்கள் குறிப் பிட்டிருக்கும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்கள் அம்மாவுக்கு சிறுநீரகச் செயலிழப்பு இருக்கக்கூடும் என்று தெரிகிறது. நீரிழிவும் இருக்கக்கூடும்.

நீரிழிவும் இருந்து, சிறுநீரகங்களிலும் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்புகள் மிக அதிகம். அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு நினை விழப்பு பாதிப்பும் வரலாம். உங்களுக்குச் சொல்லப்பட்டதைப் போல இது மருந்து, மாத்திரைகளின் பக்க விளைவாக இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

உங்கள் அம்மாவுக்கு இருக்கும் நோய்களின் விளைவாகவே இருக்கக் கூடும். பல வருடங்களாக கட்டுப் பாடில்லாத நீரிழிவு இருந்தாலோ, அளவுக்கதிமாக வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டிருந்தாலோகூட சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயங்கள் வரக்கூடும். ஆனாலும் அந்த மருந்துகளால் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

பல வருடங்கள் உங்கள் அம்மா சிகிச்சையில் இருந்ததாகச் சொல்லி யிருக்கிறீர்கள். அந்தச் சிகிச்சையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்து களின் விவரம் தெரிந்தால்தான் அவரது தற்போதைய நிலைக்கு அந்தச் சிகிச்சை காரணமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஒருவேளை உங்கள் அம்மாவுக்கு முதுமையின் காரணமாக இயற்கை யாக ஏற்படக்கூடிய `பார்க்கின்சன்ஸ்' நோய், `அல்ஸைமர்' போன்ற பாதிப்பு ஏற்பட்டு, அதன் விளை வாகவும் அவர் நினைவிழப்புக்கு உள்ளாகியிருக்கலாம்.

மண்பானையில் சோறு வடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த சாதத்தை ஹாட் பாக்ஸில் வைக்கலாமா?

- தேவஜோதி, மதுரை-17

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

மண்பானையில் வடித்த சாதத்தை தாராளமாக ஹாட் பாக்ஸில் வைக்கலாம். அதில் ஆரோக்கியக் குறைவு எதுவும் ஏற்படாது. மண்பானையில் வடிப்பதோடு, அந்த அரிசி பாலிஷ் செய்யப் படாததாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ் மற்றும் நுண் ணூட்டச் சத்துகள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்க அதுதான் சிறந்த வழி. வடிப்பதால் பி காம்ப் ளெக்ஸ் சத்து கஞ்சியோடு வெளியேறிவிடும். எனவே சாதத் தின் கஞ்சியை எக்காரணம் கொண்டும் வீணாக்காதீர்கள். அதைக் குடிப்பதன் மூலம் அந்தச் சத்தைப் பெற முடியும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு