Published:Updated:

அவள் பதில்கள் 28 - சிறுநீரை அடக்குவதுதானே பிரச்னை... அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானதுதானே?!

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

சாஹா

என் வயது 35. எனக்கு கொஞ்சநேரம் கூட சிறுநீரை அடக்க முடியாது. அடிக்கடி வெளியேற்றி விடுவேன். வெளியிடங்களுக்குச் சென்றாலும் நான் முதலில் தேடுவது கழிவறைகளைத்தான். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் நான் ஒருநாளைக்கு 5 லிட்டர்வரை தண்ணீரும் குடிக்கிறேன். சிறுநீரை அடக்குவதுதானே பிரச்னை... அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது தானே?!

- கே.செண்பகவள்ளி, திருச்சி

அவள் பதில்கள் 28 - சிறுநீரை அடக்குவதுதானே பிரச்னை... 
அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானதுதானே?!

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண் களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா

உங்களைப் போல பலரும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லதுதானே என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எவ்வளவு சிறுநீரை வெளியேற்றுகிறீர்கள் என்பது முக்கியம். துளித்துளியாக வெளியேற்றுவதோ, மிகக் குறைந்த அளவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதோ சரியானதல்ல. எவ்வளவு நேரம் கழிவறையில் செலவிடுகிறீர்கள், சிறுநீர் கழிக்கும்போது முக்குகிறீர்களா, வலி அல்லது எரிச்சலை உணர்கிறீர்களா என்பதெல்லாமும் கவனிக்கப்பட வேண்டும்.

தூக்கத்தில்கூட அடிக்கடி விழித்துக்கொண்டு சிறுநீர் கழிக்க முனைகிறீர்களா? பயணம் செய்யும்போதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க இடம் தேடுகிறீர்களா? இப்படி யெல்லாம் இருந்தால் இதை சாதாரணம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். எனவே முதலில் மருத்து வரை அணுகி, அடிப்படையான சில பரிசோதனை களைச் செய்து பார்க்க வேண்டும். நீரிழிவு இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

மருந்துகள், உடற் பயிற்சிகள், வாழ்வியல் மாற்றங்கள் என இதற்குப் பல தீர்வுகள் உள்ளன. சிறுநீர் வெளியேற்றம் தொடர்பான பிரச்னையை அலட்சியப்படுத்தவே கூடாது. அது சிறுநீரகத் தொற்று, சிறுநீரகச் செயலிழப்பு வரை பல பிரச்னைகளுக்கு காரணமாகலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது தண்ணீருக்கும் பொருந்தும். அதிலும் இதயநோய் அல்லது சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரகம் தொடர்பான சில பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாக இருக்கும். அந்த பாதிப்பின் காரணமாக சிறுநீரகத்தால் போதுமான அளவு சிறுநீரை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம்.

அவள் பதில்கள் 28 - சிறுநீரை அடக்குவதுதானே பிரச்னை... 
அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானதுதானே?!

சிறுநீர் குறைவாக வெளியேறுகிறது... எனவே தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என நினைத்து அதிகம் குடிப்பார்கள். அது பாதிப்பை இன்னும் தீவிர மாக்கும். தண்ணீர் நிறைய குடித்தால் சிறுநீரகக் கற்கள் வராது என நினைத்து சிலர் அளவுக்கதிகமாகக் குடிப்பார்கள். அதுவும் தவறு. நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் நிறத்தைப் பொறுத்தே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறீர்களா, இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். போதுமான அளவு நீர் அருந்தாதவர் களுக்கு சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறும். தண்ணீரின் நிறத்திலேயே வெளியேறினால் பிரச்னை யில்லை. ஒருநாளைக்கு பகலில் 5-6 முறை சிறுநீர் கழிக்கலாம். இரவில் வயதானவர்கள் என்றால் ஒன்றிரண்டு முறை சிறுநீர் கழிக்கலாம். அதைவிட அதிகரிக்கும்போது கவனிக்க வேண்டும்.

*****

சமீபத்தில் பெய்த கன மழைக்கு பிறகு எங்கள் வீட்டின் சுவர்களில் பல இடங்களில் பூஞ்சை பிடித்துள்ளது. இதை எப்படி சுத்தம் செய்வது? இது எதனால் ஏற்படுகிறது?

-ப்ரீத்தா ரங்கஸ்வாமி, சென்னை-4

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் எஸ்.சதீஷ்குமார்

அவள் பதில்கள் 28 - சிறுநீரை அடக்குவதுதானே பிரச்னை... 
அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானதுதானே?!

மழைக்காலத்தில் உட்புற சுவர்களில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

வீட்டின் வெளிப்புறச்சுவர் நேரடியாக மழைநீரில் நீண்ட நேரம் படும்போது, அது சுவர்களில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். வெளிப்புற பூச்சுவேலை, பெயின்டிங்கின் தரம் மற்றும் வேலைப்பாடு மோசமாக இருந்தால், அது உள் சுவர்களின் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்.

நீர் தேங்கி நிற்கும் இடங்களில், அடித்தளத்தில் `டேம்ப் ப்ரூஃப் கோர்ஸ்' (Damp Proof Course) செய்யப்படாவிட்டால், `கேப்பிலரி' (Capillary) முறையில் தண்ணீர் கசிந்து உயரலாம். இது சுவர்களிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தும்.

ஒரு வீடு... அதனுள்ளே தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், வெளியே வீட்டைச்சுற்றி ஓரடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்நிலையில் அந்த வீட்டின் அடித்தளத்தில் உள்ள செங்கற்களில் நீர் ஊறும். அதன் தொடர்ச்சியாக அதன் மேலுள்ள செங்கற் களிலும் நீர் ஏறி, ஊறும். இதைத் தான் `கேப்பிலரி' என்கிறோம்.

நீர் தேங்கும் இடங்களில் வீடுகளில் வசிப்போர் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாமலிருக்க, அடித்தளத்தில் கான்க்ரீட்டுடன் வாட்டர் ப்ரூஃபிங் கெமிக்கலை கலந்து செங்கற்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் போடுவதன் மூலம் ஈரப்பதம் தங்குவதைத் தவிர்க்கலாம். வெளிப்புறச் சுவரில் சிறிய விரிசல்கள் இருந்தாலும், அது சுவரில் ஈரப் பதத்துக்கு வழிவகுக்கும், இதுவும் பூஞ்சையை உருவாக்கும்.

ஈரப்பதம் காரணமாக ஏற்பட்ட பூஞ்சைக்கான தீர்வு...

* ஈரப்பதம் காரணமாக உருவான பூஞ்சையை மழைக்காலம் முடிந்த பிறகு உப்புத்தாள் (Sand Paper) பயன்படுத்தித் தேய்க்கலாம் அதன் பிறகு மறுபடியும் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம்.

* வெளிப்புறச்சுவரில் `டேம்ப் ஷீத் ப்ரைமரை' (Damp Sheath Primer) முதல் கோட்டாகப் பூச வேண்டும். கட்டடம் கட்டி முடித்ததும் வெளிப்புறத்தில் வொயிட் சிமென்ட்டால் வெள்ளைநிற பெயின்ட் அடிப்பார்கள். அதற்கு பதில் டேம்ப் ஷீத் ப்ரைமரை அடித்தால் கட்டடத்தை ஈரம் ஊடுருவாமல் பாதுகாக்கும். சாதாரண வொயிட் சிமென்ட்டைவிட இதில் பாதுகாப்பு அதிகம். ஈரம் உறியப்படாததால் சுவர்களில் பூஞ்சை யும் வராது.

* இன்று பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் விரிசல்களைப் பார்க்கிறோம். அந்த விரிசல்களின் வழியே தண்ணீர் ஊடுருவி, சுவர்களில் ஈரப்பதம் தேங்கும். ஹார்டுவேர் கடைகளில் க்ராக் ஃபில்லிங் பேஸ்ட் (Crack Filling Paste) என்றே பிரத்யேகமாக கிடைக்கும். சிறிய விரிசல்களில் இந்த பேஸ்ட்டை வைத்து நிரப்புவார்கள். சற்றே பெரிய விரிசல் என்றால், சிமென்ட் பால் (சிமென்ட்டும் நீரும் கலந்த கலவை) கலவையை சிறிய பம்ப் வழியே விரிசலுக் குள் செலுத்துவார்கள். அது உள்ளே பயணித்து நிரம்பி, விரிசல்களை மூடும். இந்த முறைக்கு `கிரௌட்டிங்' (Grouting) என்று பெயர்.

என் கணவருக்கு வயது 53. அவருக்கு நக வளர்ச்சி அதிவேகமாக இருப்பதாக உணர்கிறேன். குறிப்பாக கை நகங்கள். இது சாதாரணமானதுதானா அல்லது ஏதாவது உடல்நலம் சார்ந்த பிரச்னையா?

-மகேஸ்வரி, சென்னை-69

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

அவள் பதில்கள் 28 - சிறுநீரை அடக்குவதுதானே பிரச்னை... 
அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானதுதானே?!

நகங்கள், விரல் நுனிகள் மற்றும் விரல் களின் மென்மையான திசுக்களையும் வெளிப்புற காயங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நகங்கள் `கெராட்டின்' (Keratin) என்ற புரதத்தால் ஆனவை.

நகங்கள் மாதத்துக்கு சராசரியாக 3.5 மில்லிமீட்டர் வரை வளரும். கால் விரல் நகங்கள் ஒரு மாதத்துக்கு சராசரியாக 1.6 மில்லிமீட்டர் வரை வளரும். விபத்து உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தால் கை விரல் நகம் முழுமையாக விழுந்துவிட்டால், புதிதாக முழுவதும் வளர, சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும்.

நகங்கள் அதிவேகமாக வளர்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நகங்கள் பலமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வது பயப்படக்கூடிய விஷயமே அல்ல. நகங்கள் நீளமாக இருக்கும்போது எங்கேயாவது இடித்தாலோ, அடிபட்டாலோ ரத்தம் வரலாம், வலிக்கலாம் என்பது மட்டும்தான் பிரச்னை.

நகங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது சிறப்பாக இருந்தால் அவை நன்றாக வளரும். ஹார்மோன்களின் சுரப்பும் சரியாக இருக்கும் நிலையில் நகங்களும், சருமமும் ஆரோக்கிய மாகவே இருக்கும்.

குறிப்பாக பெண்களுக்கு பருவ வயதிலும், கர்ப்ப காலத்திலும் நகங்கள் நன்றாக வளரும். அதுவே மெனோபாஸ் காலத்தில் நக வளர்ச்சி சரியாக இருக்காது. எனவே ஆணோ, பெண்ணோ... நக வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்றால் அவர்களது உடலில் சத்துக் குறைபாடு இல்லை, ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது என அர்த்தம்.

நகங்கள் வளராவிட்டாலோ, அடிக்கடி உடைந்துபோனாலோதான் ஏதேனும் சத்துக்குறைபாடு இருக்குமோ என்று யோசிக்க வேண்டுமே தவிர, ஆரோக்கியமான நக வளர்ச்சி குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.